"2000 கோடிகள்"
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, சென்னையில் நேற்று முடக்கப்பட்டது.
வருமான வரித் துறையின் தொடர் 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கைகள் காரணமாக, பினாமிகள் பெயரில் அவர் வாங்கி குவித்துள்ள, ௨,௦௦௦ கோடி ரூபாய் சொத்துக்கள் இதுவரை கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவரும், அவரது குடும்பத்தினரும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக, வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றன.
ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும், சோதனையில் சிக்கின.
அந்த ஆவணங்கள் அடிப்படையில், சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
2019ல், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
2020ல், ஹைதராபாதில் உள்ள, 'ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரில் இருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.அதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையம் எதிரே, 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடமும் அடங்கும்.
மேலும், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்கள் உட்பட, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களும், பினாமி சொத்துக்களாக கையகப்படுத்தப்பட்டன.
கடந்த 2021 செப்டம்பர், ௮ல், செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் உள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கியது.அதன் தொடர்ச்சியாக தற்போது, 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா உட்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2021ம் ஆண்டு வரை, சசிகலாவுக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை தி.நகர், பத்மநாபா தெருவில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 3,486 சதுர அடி நிலத்தில், 'ஆஞ்சநேயா பிரின்டர்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தை, பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, இந்த சொத்தை தற்போது முடக்கி, வருமான வரி துணை கமிஷனர் எம்.விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, அந்நிறுவனத்தின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.
சொத்து முடக்கம் செய்து அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, 90 நாட்களுக்குள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ தடை விதிக்கப்படுகிறது.
இந்த 'நோட்டீஸ்' குறித்து, ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் தி.நகர் சார் - பதிவாளர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, சசிகலாவிற்கு சொந்தமான, 2,015 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.கடந்த 2021 செப்டம்பரில், சசிகலா உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூரில் உள்ள, 30 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 ஏக்கர் நிலம், வருமான வரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------