புதன், 21 பிப்ரவரி, 2018

காவேரி வாரியம் அமைக்குமா மோடி அரசு?

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஒதுக்கியிருக்கும் தண்ணீ ரானது தமிழ்நாட்டு விவசாயத்தின் மீது விழுந்திருக்கும் பேரிடி. 

ஆனாலும், ஏன் நம் விவசாயிகள் இழந்ததைப் பெரிதெனக் கருதாமல், தில்லியின் நடவடிக்கை நோக்கி கண்களைத் திருப்பிக் காத்திருக்கிறார்கள்?

பங்கீட்டை உறுதிசெய்ய இந்தத் தீர்ப்பில் உத்தர விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல்திட்டத்தை உறுதிசெய்யுமாறு அது மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் அப்படிக் கூறியிருக்கிறது. 


இழந்த தண்ணீர் போக தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள மிச்ச தண்ணீரேனும் தமிழகம் வருவதை இது உறுதிசெய்திடுமா என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.தமிழகத்தின் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டதாலேயே எல்லாம் சரியாகிவிடும் என்ற தோரணையில் இருப்பதுபோலவே தெரிகிறது.

 எதிர்க்கட்சிகளும் அடையாளரீதியான கருத்துகளைத் தாண்டி இதில் வினையாற்றவில்லை. ஆனால், உரிய அரசியல் அழுத்தம் தராவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைவது எளிதல்ல என்பதையும் உச்ச நீதிமன்றம் இப்போது ஒதுக்கியிருக்கும் குறைந்தபட்ச தண்ணீரையும் தமிழகம் தனதாக்கிக்கொள்ள வழி யில்லை என்பதையும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி களும் உணர வேண்டும்.
அரை நூற்றாண்டாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரத்தை அதன் ஆதியிலிருந்து புரட்ட நான் விரும்பவில்லை.

 பத்தாண்டுகளுக்கு முன்பு 5-2-2007-ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு இங்கு எப்படி அணுகப்பட்டது என்பதை நாம் நினைவு கூர்ந்தாலே, நமக்கு முன்னிருக்கும் சவால் எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்துவிடலாம்.

முன்னதாக, மத்திய அரசு 1970-களில் நியமித்த ‘காவிரி உண்மை அறியும் குழு’ அளித்த அறிக்கையில் தமிழகம் பெற்றுவந்ததாகக் குறிப்பிடப்பட்டதைக் காட்டிலும் குறைந்த தண்ணீரையே காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இடைக்கால உத்தரவில் தமிழகத்துக்கு ஒதுக்கியது. 

இறுதித் தீர்ப்பிலோ மேலும் குறைத்து 192 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்கு இனி கர்நாடகம் தந்தால் போதுமானது என்று சொன்னது காவிரி நடுவர் மன்றம்.கர்நாடகம் இதை ஏற்கவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே இழுத்தடித்தது மத்திய அரசு. 
காங்கிரஸ், பாஜக இரண்டுமே கர்நாடக ஓட்டரசியலைக் கணக்கில் கொண்டு தமிழகத்துக்கு பாதகமாகவே நடந்துகொண்டன. 

தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு பெரும் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்ற பின்னர் 19-2-2013-ல்தான் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.இதன் தொடர்ச்சியாகவே காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 


ஏனென்றால், காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த தண்ணீர் தமிழகத்தை வந்தடைய வேண்டும் என்றால், காவிரி நதியானது மேலாண்மை வாரிய நிர்வாகத்தின் கீழ் வந்தால்தான் அதுசாத்தியம். ஆனால், அதை முற்றிலுமாக தவிர்த்தது மத்திய அரசு.

இதன் இடையே சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்திருந்த மேல் முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டிருந்தன. 
பத்தாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. மேல்முறையீடுகள் விசாரணைக்கே வரவில்லை.

ஏற்கெனவே இருந்த மோசமான சூழலோடு கடுமையான வறட்சியும் வந்து சேர்ந்துகொள்ள 2016 காவிரிப் படுகையை மோசமாக தாக்கியது. பயிர்கள் கருகியதோடு விவசாயிகளின் பிணங்கள் விழத் தொடங்கின. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர் செய்தி ஆயின. 

‘நட்ட பயிரைக் காப்பாற்ற தினம் 20,000 கனஅடி தண்ணீரையாவது வழங்க’ உத்தரவிடும்படி கோரிஉச்ச நீதிமன்றத்திடம் நின்றது தமிழகம். “10,000 கனஅடி மட்டுமே தர முடியும்” என்றது கர்நாடகம். அணைகளில்தண்ணீர் உள்ள அளவு, தமிழக விவசாயிகளின் பரிதாபச்சூழலை உணர்ந்த உச்ச நீதிமன்றம், ‘பத்து நாட்களுக்குதினம் 15,000 கனஅடி தண்ணீர் தர வேண்டும்’என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது கர்நாடகம். ஆளும்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இரண்டும் இந்த விஷயத்தில் கை கோத்தன. 

தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் பெரும் வன்முறைக்கு அடிகோலியது.மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறியது கர்நாடகம். 


‘தினம் 12,000 கனஅடி, தினம் 6,000 கனஅடி’ என்று உத்தரவிட்டுவந்த உச்ச நீதிமன்றம், தண்ணீர் கொடுப்பதில் கர்நாடகத்துக்கு இருக்கும் கசப்பைஉணர்ந்ததன் விளைவாகவே “மத்திய அரசு அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

உடனே 23-9-2016 அன்று கூடிய கர்நாடக சட்ட மன்றம் “உச்ச மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர முடியாது” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

 இதன் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக்கியதோடு கூட்டாட்சி முறையையே கேள்விக்குள்ளாக்கியது.இக்கட்டான சூழலில் இதுகுறித்து 27-9-2016 அன்று இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகியிடம் கருத்து கேட்டது உச்ச நீதிமன்றம். 
அவர் மூன்றுநாட்கள் அவகாசம் கேட்டார் . 

வழக்கை 30-9-2016- க்குஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் இடைப்பட்ட மூன்று நாட்களுக்கு ‘தினம் 6000 கனஅடி தண்ணீர் தர வேண்டும்’ என்றுஉத்தரவிட்டது. 

அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் அதையும் புறந்தள்ளியது கர்நாடகம். அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மூன்று நாட்களுக்குப் பின்னர் தன் கருத்தைத் தெரிவித்தார் முகுல் ரோத்தகி. “மத்திய அரசு இதை விரும்புகிறது; ஆனால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.

அடுத்த சில வாரங்களுக்குள் மத்திய அரசின் உண்மையான முழு முகமும் வெளியே வந்தது. 

3.10.2016 அன்று “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லிமத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது; மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா, வேண்டாமாஎன்பதுபற்றி மத்திய அரசு தேவையான முடிவை எடுத்துக்கொள்ளும்; எனவே இதுகுறித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்” என்றும்கூறினார் முகுல் ரோத்தகி. 

கர்நாடக அரசின் சட்ட விரோதச் செயல்பாட்டுக்கு நேரடியாகவே துணைபோனது மத்தியஅரசு!
இனி என்னவாகும்?
 து.அரிபரந்தாமன்

இத்தகைய பின்னணியில்தான் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான சாத்தியங்களை நாம் பரிசீலிக்க வேண்டும். 
காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைக்குமளவு ஒரு பெரிய சக்தியாக இல்லாத சூழலில்,கர்நாடக ஓட்டு அறுவடையையே அவை ரதானமாகக்கொண்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் இப்போதைய இறுதித் தீர்ப்புக்குச் செல்லும் முன் நடத்திய விசாரணையிலும்கூட மத்திய அரசின் சார்பில் வாதாடிய ரஞ்சித் குமார், முகுல் ரோத்தகி இருவருமே “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட முடியாது” என்ற வாதத்தைக் கடுமையாக முன்வைத்தனர். 

உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அந்த வாதங்களை உடைத்திருக்கிறது. “மேலாண்மை வாரியம் போன்ற ஒரு அமைப்பு இல்லை என்றால், நதிநீர் பகிர்வு சம்பந்தமாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த இயலாது” என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியிருக்கிறது. 

ஆனால், அது நடக்க வேண்டும் என்றால், நீதித் துறையின் அழுத்தம் மட்டும் போதாது.தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தங்களுடைய எல்லாவேறுபாடுகளையும் கைவிட்டு ஒன்றிணைய வேண்டும். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி இதற்கான நடவடிக்கைகளைக் கீழேஇறங்கி முன்னெடுக்க வேண்டும்!
         நீர்ப்பாசனத்துக்கு 80000கோடிகள் ஒதுக்கியிருப்பதாக   பிரதமர்  மோடி சொல்லியுள்ளார். அவை எங்கு,எதற்கு,எப்படி செயல்படுத்தப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.கங்கையை சுத்தப்படுத்த 1000கோடிகள் ஒதுக்கினார்.அது என்னவாயிற்று என்ற விபரமே இதுவரை இல்லை.உண்மையிலேயே 80000 கோடிகள் ஒதுக்கி செயல்பட்டால் இந்தியாவில் பாசனத்துக்கு குறைவே இராது.
ஆனால் ஒதுக்கப்பட்ட பணம் கர்ப்பரேட்கள் மூலம் வெளிநாடுகளுக்கு வராக்கடனாக அல்லவா கதஹ்த்தப்படுகிறது.                                                                                                                  
                                                                                                                                                                                              நீதிபதி (ஓய்வு),                                                                                                                                                                                          சென்னைஉயர் நீதிமன்றம். 
.==================================================================================================================================
தோழர் கே.பாலகிருஷ்ணன் 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. 
நிறைவு நாளன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர். 
பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 650 பேர் இம்மாநாட் டில் கலந்து கொண்டனர். 
மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாயன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
15 பேர் கொண்டசெயற்குழுவும், 2018 ஏப்ரல் 18-22இல் ஹைதரபாத்தில் நடைபெறும் 22ஆவதுஅகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


  தமிழ்நாடுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன்ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக் குழுவிற்கு எஸ். பாலசுப்பிரமணியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிறைவுரையாற்றினார். 
கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் நன்றி கூறினார். மாநாட்டின் முத்தாய்ப்பாக தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து பிரச்சாரம் பயணம் நடத்துவது என்ற தீர்மானத்தை விளக்கி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணன் தோழர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970ஆம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். 
1972ஆம் ஆண்டில் மாணவர் உரிமைக்கான போராட்டத்தில் பல்கலை நிர்வாகத்தின் தூண்டுதலோடு கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். 
இதனால் பல்கலைக்கழகம் இவரை நீக்கியது. 

1973ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர். 1975ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கட்சி பணிகளை நிறைவேற்றினார். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில / மாவட்ட பொறுப்புகளிலிருந்து பணியாற்றியதை தொடர்ந்து 1989ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

1982ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் கே. பாலகிருஷ்ணன் 1998ஆம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2012ஆம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர். 
ட்டப்பேரவையில் கட்சியின் கொறடாகவும் செயல்பட்டார். 
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்று பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 
சிதம்பரம் பத்மினி காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு போராடியவர். 
நீதிமன்றத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர். இதுபோல் மாநில பொறுப்புகளில் இருந்த போது கட்சியின் போராட்டங்களிலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திலும் முன்னின்ற சிறந்த போராளி தோழர் கே. பாலகிருஷ்ணன். தோழர் கே. பாலகிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டவர். 
அவரது மனைவி தோழர் பா. ஜான்சிராணி கம்யூனிஸ்ட் இயக்க குடும்பத்தைச் சார்ந்தவர். 
அவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.


=======================================================================================
ன்று,
பிப்ரவரி-21.

  • உலக தாய்மொழி தினம்
  • கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.(1848)
  • நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
  • புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
  • நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தார் (1907)
  • பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பெரும்  வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.(1960)
  • சோவியத் யூனியனின்  லூனா 20 சந்திரனில் இறங்கியது.(1972)

1848 பிப்ரவரியில் லண்டனில் உள்ள ஒரு சிறிய அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்தச் சிறிய வெளியீடு, ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகத்தையே பிடித்து ஆட்டத் தொடங்கியது.
‘’ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும், ஜார் ஆரசனும்… ஜெர்மன் உளவாளிகளும், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.’’
– என்று துவங்குகிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. 

‘’தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டு விட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்… ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம். ‘’
– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • உலக தாய்மொழி தினம்
1952,கிழக்கு பாகிஸ்தான் (வங்க தேசம்)மாணவர்கள் வங்க மொழியை ஆட்சி மொழியாக்க கோரி நடத்திய போராட்டத்தில் நடந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து வங்க தேசமாகிய கிழக்கு பாகிஸ்தான் எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக 1999இல் "யுனெஸ்கோ"பிப்ரவரி 21 ஐ உலக தாய் மொழி தினமாக அறிவித்தது.