ஐ.டி துறையின் ஒப்பந்த கூலிகள்?
இலட்சங்களில் சம்பளம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஐ.டி துறையில் நிலவுகின்ற வேலைநிலைமை காண்டிராக்ட் தொழிலாளர்களின் வேலை நிலைமையை ஒத்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தமது பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றைப் பாருங்கள்.
- அமர்த்து & துரத்து (hire & fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று வேலையை விட்டு துரத்துதல்
- ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் அளவுக்கு வேலை செய்வது
- கூடுதல் நேரம் உழைப்பது என்கிற பழக்கத்தின் உச்சகட்டமாக வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்பது. வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாவது.
- 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தராமல் ஏய்க்கப்படுவது.
- ’எச்.ஆர்’ என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு ஊழியர்கள் நடுங்குதல். பெண் ஊழியர்கள் மீது பாலியல் வக்கிரங்கள்
ஐ.டி துறையில் வேலை செய்வது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வந்தது. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா முதல் சமீபத்தில் வெரிசான் வரையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒரே இரவில் வேலையிலிருந்து துரத்திய பிறகு அந்த கனவு ஓரளவு மட்டுப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்ததுமே 5 இலக்க சம்பளம், குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை, கையில் அழுக்குப்படாத கணினி வேலை என்ற கவர்ச்சி இன்னும் தொடர்கிறது.
ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு “ஆன்-சைட்” என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பு, சமூக கவுரவம் போன்றவை ஓரளவு மங்கி போயிருந்தாலும், புதிதாக அடிபடும் “கிளவுட் (மேகக் கணிமை)”, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை படித்து நாமும் அந்தக் கப்பலில் ஏறி விடலாம் என்ற கனவு மறைந்து விடவில்லை. ஆனால், எதார்த்தமோ வேறொன்றாக இருக்கிறது. ஐ.டி துறை வேலை என்பது நித்திய கண்டம்; பூரண ஆயுசு தான். கணினியில் வேலை என்றாலும் அது ஒருவகை காண்டிராக்ட் வேலை தான். காண்டிராக்ட் என்பதற்குப் பதிலாக அயல்பணி ( அவுட் சோர்சிங் ) என்று கவுரவமாக சொல்லிக்கொள்கின்றனர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் குறைந்த கூலி என்பதால் இந்த நாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளை செய்வதற்கு இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு அயல்பணி ஒப்பந்தங்கள் வழங்கி வந்தன. உதாரணமாக, இந்திய மென்பொருள் துறையின் தொடக்க காலங்களில் ஊழியர்களின் சம்பளம் ஒப்பிடக் கூடிய மட்டத்திலான அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தில் 10%-20% ஆக மட்டுமே இருந்தது.
அடிப்படை ஆங்கில மொழித்திறன் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான படித்த இளைஞர் பட்டாளம் இந்தத் துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவித்து பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வேலை நேரம் இந்திய வேலை நேரத்துக்கு நேர் எதிராக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்களுக்கு இரவும் பகலும் பராமரிப்பு சேவை வழங்குவதற்கு ஏற்ப இந்திய நிறுவனங்களும் இரவுப்பணி செய்வதற்கு தோதாக சட்டங்களும் மாற்றப்பட்டன. வேலைமுறையும் மாற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு உலக அளவில் தலா $10 கோடிக்கு அதிகமான மதிப்புடைய 196 சேவை ஒப்பந்தங்கள் (மொத்த மதிப்பு சுமார் $510 கோடி) புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த 196 ஒப்பந்தங்களில் வெறும் 4 மட்டுமே இந்திய ஐ.டி நிறுவனங்கள் வசம் உள்ளன. டி.சி.எஸ் தவிர பிற இந்திய நிறுவனங்கள் $100 கோடி+ ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பல ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்கள் இரண்டாம் நிலை பங்காளிகளாக உள்ளனர். அதாவது ஒப்பந்தத்தை வெல்லும் முதல்நிலை சேவை நிறுவனத்திடமிருந்து ஒரு பகுதி பணியை இரண்டாம் நிலை சேவை வழங்குனராக பெற்றுக் செயல்படுத்துகின்றனர்.
காண்டிராக்ட் தொழிலகங்கள் போலவே வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளை குறைந்த கூலியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் மூலமாக செய்து கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிப்பதுதான் இந்திய ஐ.டி துறை முதலாளிகளின் வணிக முறையாக இருந்து வருகிறது. எனவேதான் சமீபத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட, அதிக சம்பளம் வாங்கும் இடைமட்ட ஊழியர்கள் டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா போன்ற நிறுவனங்களில் வேலையை விட்டு தூக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இடத்தில் குறைந்த கூலி பெறும் புதிய ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர்.
இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களான 1968-ல் தொடங்கப்பட்ட டி.சி.எஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), 1976-ல் கணினி/கணினி பொருட்கள் (hardware) நிறுவனமாக தொடங்கப்பட்டு 1991-ல் தகவல் தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்த எச்.சி.எல், 1982-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், அதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த விப்ரோ டெக்னாலஜிஸ் ஆகியவையும் பிற நடுத்தர, சிறு நிறுவனங்களும் அமெரிக்கமயமாக்கப்பட்ட இந்தியர்களால் தொடங்கப்பட்டன அல்லது நிர்வகிக்கப்படுகின்றன.
உற்பத்தித்துறையில் காண்டிராக்ட் தொழிலாளர்களை முதன்மை வேலையளிப்பவரான வாடிக்கையாளர் நிறுவனமே உற்பத்தி இலக்கு போன்றவற்றை தீர்மானித்து வேலைவாங்குகிறது இதைப்போலவே இந்திய ஐ.டி நிறுவனங்களின் சேவை வழங்கலிலும், வாடிக்கையாளர் நிறுவனம்தான் தரம், செய்முறை ஆகியவற்றை வரையறுத்து, உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு தொழில்நிறுவனம் தொழிலாளியின் உழைப்புச்சக்தியை சுரண்டி இலாபத்தை அதிகரிப்பதைவிட , அயல்பணி அல்லது காண்டிராக்ட் நிறுவனம் உழைப்புச்கக்தியை சுரண்டி இலாபமீட்டுவதில் வேறுபாடு இருக்கிறது. தொழில் நிறுவனத்தின் இலாபத்தில் அதன் உற்பத்திப்பொருளின் விற்பனைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கும். ஆனால், தொழிலாளர்களது உழைப்புச் சக்தியையே சரக்காக விற்கின்ற காண்டிராக்ட் மற்றும் அயல்பணி நிறுவனங்களது இலாபத்தை உழைப்புச்சக்தி என்கிற சரக்கே தீர்மானிப்பதால், அந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு என்றால், உழைப்புச் சக்தி மீதான சுரண்டல் அதிகரித்திருகிறது என்று பொருள்.
இதைப் பற்றி புரிந்து கொள்ள இந்திய ஐ.டி நிறுவனங்களில் மிகப் பெரியதான டி.சி.எஸ்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3.87 லட்சம். இந்நிறுவனம் 2016-17 ஆண்டில் மொத்தம் ரூ 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதில் 59.7% ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடுகிறது. நிறுவனத்தின் மொத்த லாபம் 27.4% ஆக உள்ளது.
2015-16 ஆண்டில் ஊழியர்களுக்கான செலவு 58.6% ஆகவும் லாபம் 28.25% ஆகவும் இருந்தது. முந்தைய ஆண்டை விட 2016-17ல் லாபவீதம் குறைந்ததற்குக் காரணம் அமெரிக்காவில் அதிக சம்பளம் கொடுத்து அந்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தியதுதான் என்கிறது டி.சி.எஸ்-ன் நிதிநிலை அறிக்கை.
அதாவது ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது. அதனால்தான் உழைப்பு காண்டிராக்டர்கள் என்ற முறையில் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஐ.டி நிறுவனங்கள் கையாள்கின்றன. நிர்வாகங்களின் நிறுவனங்களின் முழு கவனமும் மனிதவளத்துறை என்று அவர்களால் அழைக்கப்படும் ஊழியர்களை மேலாண்மை செய்வதில்தான் உள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாத அறிவியலுக்கு எதிரான அப்ரைசல் ரேட்டிங், வரம்பற்ற வேலை நேரம், தனித்தனியான ஊதிய விகிதங்கள், வேலை அழுத்தம் என்று ஊழியர்களை உடல் ரீதியிலும், உளரீதியிலும் வதைக்கும் ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் ஊழியர்களை உபரி மதிப்பை கறப்பதற்கான எந்திரங்களாகவே பார்க்கின்றனர்.
அதாவது உழைப்பை சுரண்டி கொழுக்கும் காண்டிராக்டர்கள்தான் இந்திய ஐ.டி துறை முதலாளிகள்.
எனவே, ஐ.டி ஊழியர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிற துறைகளிலும் வேகமாக புகுத்தப்பட்டு வரும் காண்டிராக்ட் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு இணையானவையே.
– குமார்
==========================================================================================
அரசியல் பேய்கள்?
சில ஆண்டுகளாக பேய்ப் படங்கள் தமிழக திரையரங்குகளில் உலா வருகின்றன.
மெசேஜ் பேய், ஆக்சன் பேய் என தற்போது காமடி பேய்கள் பார்வையாளர்களை அதிர,அழ வைத்து வருகின்றன.
இந்த ட்ரண்ட் இப்போது எப்படி?
என்பது வெள்ளிக்கிழமை படத்திற்காக திங்கடகிழமையிலிருந்து விரதம் இருக்கும் சமூக வலைத்தள விமர்சன சிங்கங்களுக்குத்தான் தெரியும்.
லல்லு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கும் நாட்களில் அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் சிங் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு மாளிகையிலிருந்து காலி செய்துவிட்டாராம்.
ஏன்?
முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி இருவரும் ஒரு பேயை அனுப்பி மாளிகையை இடிக்க திட்டமிட்டிருந்தனராம்.
என்ன செய்வது?
சமூகநீதி காத்த கட்சிகளின் வாரிசுகள் இப்படி காத்து-கருப்பிற்கு அஞ்சிச் சாகிறார்கள்.
பேயே பொறாமைப்படும் அளவுக்கு நிறைய ஒரிஜினல் பேய் பிசாசுகளை வைத்திருக்கும் பாஜக-விலும் இந்த பேயச்சம் படுத்தி எடுக்கிறது. ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பி சிங் அவர்கள் சமீபத்தில் ஒரு பேயுண்மையை வெளியிட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் சட்டமன்ற அலுவலகம் ஒரு இடுகாட்டின் மேல் கட்டப்பட்டிருப்பதால் மூத்த பாஜக உறுப்பினர்கள் அங்கே பேயுலா இருப்பதாக அஞ்சுகிறார்களாம். அதனாலேயே பாஜக-வின் ஒட்டு மொத்த 200 உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் சட்டசபையில் இருக்க மாட்டார்களாம்.
இந்த நம்பிக்கை அடிப்படையற்றது என்று கூறும் பி சிங், இதற்காக யாகம் நடத்த தேவையில்லை, ஒரு வேளை சிலர் முதலமைச்சருக்கு இப்படி ஓதியிருப்பார்கள் என்றும் விளக்கமளிக்கிறார்.
அவருக்கு அச்சம் இல்லையென்றாலும் சீனியர்கள் பயப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சரி பேயுலவும் சட்டமன்றத்தில் 200-பேர்களும் முழுக்க வராவிட்டால் பேயால் பிரச்சினை இல்லையா?
இல்லை எத்தனை பேர்கள் குறைகின்றனரோ அத்தனை பேய்கள் அதை ஈடு செய்து அங்கே சாந்தி சமாதானம் நிலவுமோ தெரியவில்லை.
பேய் ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரம் என்பார்கள். பார்ப்பனிய முட்டாள்கள் ஆண்டால் பிணம் தின்னுவதோடு மூடநம்பிக்கையும் அரசின் அதிகாரமாகிவிடும் போல!
சரி, சங்கிகளின் அன்றாட ஹொரர் தாக்குதல்களை தாக்குப் பிடிக்கும் இந்திய மக்களுக்கு இந்த நிஜப் பேய் குறித்த விழிப்புணர்வு எப்போது வரும்?
சட்டமன்றம் வருகிற பேய்கள் முன்னாள் சட்டமனற உறுப்பினர்கள் பேயாக இருக்குமோ?
அல்லது ச.ம.உறுப்பினர் பதவி ஆசையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்கள் ஆவியாக இருக்குமா?
பிப்ரவரி-25.
- குவைத் தேசிய தினம்
- சாமுவேல் கோல்ட்( அமெரிக்கா)சுழல் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை பெற்றார்(1836)
- தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)
- மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
ஸ்ரீதேவி
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) இவர் கமல்ஹாசன் , ரஜினிகாந்த் போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.நடிகர் சிவாஜிகணேசனுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார்.
கமல்ஹாசனை போலவே தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.எம்.ஜி.ஆருடன் நம்நாடு படத்த்தில் நடித்துள்ளார்.வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கமல்ஹாசனுடன் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் .
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. கமல்ஹாசனுடன் நடித்த மூன்றாம் பிறை இந்தியில் படமாக்கப்படும்போது அதிலும் நடித்தது இந்திதிரையுலகில் நுழைந்து அங்கேயே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை!- ரஜினி