ராணுவமே நாங்க தாங்க ?
“நாட்டிற்காக போரிட வேண்டு மானால், ராணுவத்தை விட வேகமாக மூன்றே நாளில் போருக்குத் தயாராகிவிடும் திறன் படைத்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு” என்று அதன் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கமானது மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது.
ராணுவம் 6 முதல் 7 மாத பயிற்சியில் செய்வதை சங்கம் மூன்றே நாட்களில் செய்துவிடும். அதுவே எங்களது திறமை; நாட்டுக்கு அப்படி ஓர் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் நாங்கள் நிச்சயமாக இதை செய்து முடிப்போம்” என்று பகவத் சவடால் அடித்துள்ளார்.
“ஆர்.எஸ்.எஸ். ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல! ஆனால், ராணுவத்துக்கு நிகரான ஒழுக்க நெறிகள் இங்கே பின்பற்றப்படுகிறது;
அதன்காரணமாக நாட்டுக்காக உயிர் துறக்க சங்க உறுப்பினர்கள் எப்போதுமே தயாராகஇருக்கின்றனர்; நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றதும் அதற்காக உடனடியாக களமிறங்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது; சட்டமும், அரசியலமைப்பும் இடம் கொடுத்தால் அதனைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சொந்தவாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகப்பணியில் சிறப்பாக செயல்படுகின்றனர்” எனவும் மோகன் பகவத் பாராட்டிக் கொண்டுள்ளார்.அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்கள், போரில் வீரமரணம் அடைந்தவர்களை அவமதிப்பு செய்திருக்கும் மோகன் பகவத் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
‘சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், பல ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாத துரோகிகள் (ஆர்எஸ்எஸ்-காரர்கள்), இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார்கள்” என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்துள்ளன.
“ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்பட்ட அவமதிப்பு” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.“இந்தியாவுக்காக உயிர் நீத்தவர்களை அவமதிக்கும் வகையில் மோகன் பகவத் பேசியுள்ளார்; இது தேசியக்கொடியை அவமதிக்கும் செயலும் ஆகும்; ஏனெனில் அதை வணங்கிய ஒவ்வொரு வீரரையும் மோகன் பகவத் அவமதித்துள்ளார்;
தேசத்தின் ராணுவத்தையும் தேசத்துக்காக உயிர் நீத்த தியாகிகளையும் அவமதித்தது மிகப்பெரிய அவமானம்” என ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது.
அதுபோல் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இந்திய ராணுவம் குறித்து, மிகவும் மோசமான முறையில் மதிப்பிட்டு பேசியிருப்பதற்கு மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உடனடியாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மோடி ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டின் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ராணுவ வீரர்கள் உயிர்ப்பலியாவதும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
நமது ராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது? அதற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறதா? என்று கேட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சி தேசப்பற்றில்லாமல் பேசுவதாகவும், ராணுவத்தினரின் திறமையை, அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துவதாகவும் பாஜக தலைவர்கள் கூப்பாடு போட்டனர்.
ஆனால், தற்போது நேரடியாகவே ராணுவத்தினரின் அர்ப்பணிப்பை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொச்சைப்படுத்தி இருக்கும் நிலையில், அவர் மீது, மத்திய பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
இதையே ஒரு முஸ்லிம் தலைவர் பேசியிருந்தால் சும்மா இருப்பார்களா?
தேசத்துரோகம் என்றும், பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றும் இந்நேரம் காலித்தனம் செய்திருக்க மாட்டார்களா?
என்றும் சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆர்எஸ்எஸ் விளக்கம்
பகவத்திற்கு எதிராக கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், அவரைக் காப்பாற்றம் விதமாக ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் மோகன் வைத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்- அமைப்பையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசவில்லை; ராணுவத்தை அவமதிக்கும் வகையிலும் பேசவில்லை; சமூகத்தையும், ஆர்எஸ்எஸ்-ஸையும்தான் ஒப்பிட்டுப் பேசினார்; போர் போன்ற சூழல் ஏற்பட்டால் சமூகத்தைத் தயார்படுத்த ராணுவத்திற்கு 6 மாதங்கள் வரை ஆகும்; ஆனால், ஆர்எஸ்எஸ் அதை மூன்று நாட்களில் செய்து முடிக்கும் என்றுதான் கூறினார்; ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் ஒழுக்க நெறியை குறிப்பிடுவதற்காக அவ்வாறு பேசினார்” என்று வைத்யா சப்பைக்கட்டாக பேசியுள்ளார்.
======================================================================================
இன்று,பிப்ரவரி-13.
- உலக வானொலி தினம்
- ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
- இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
- பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை, தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு திறந்துள்ளது.
ஜெயலலிதா, ‘ரூ. 66 கோடி சொத்து குவித்த வழக்கில் முதல் குற்றவாளி’ என்று உச்சநீதிமன்றத்தாலேயே அறிவிக்கப்பட்டவர் என்ற நிலையில் அவரது படத்தை, சட்டமன்றத்தில் அமைக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும், திங்கட்கிழமையன்று அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் ப. தனபால், ஜெயலலிதா படத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆர்.கே. நகர் தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் டிடிவிதினகரன் ஆகியோர் பங்கேற்க வில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னை கவின் கல்லூரி மாணவர்கள், ஆயில் பெயிண்டிங் முறையில் 7 அடி உயரம், 5 அடி அகலத்தில் உருவாக்கியிருந்தனர்.
அதன் கீழ் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.படத் திறப்பைத் தொடந்து ஜெய லலிதாவின் உரை பேரவையில் ஒலிபரப்பப்பட்டது.
சட்டமன்றத்தில் இதுவரை, திரு வள்ளுவர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா, உ.முத்துராமலிங்கத் தேவர், எம்ஜிஆர், காயிதே மில்லத் ஆகியோரது படங்கள் இருந்தன.
அந்த வரிசையில் தற்போது 11-ஆவது படமாக ஊழல் குற்றவழக்கில் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் படம்திறக்கப்பட்டுள்ளது.
படத்திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை ஜெயலலிதா’ என்று குறிப்பிட்டார்.
எங்கே மீண்டார் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று அதையும் ,பல்லாயிரக் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்து சேர்த்து வைத்தும் அதையும் அனுபவிக்காமலேயே போய் சேர்ந்து விட்டார்.இதில் பீனிக்ஸ் எங்கே வருகிறது.?
இதனிடையே, ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டதற்கு எதிராக, தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை யிலான சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் திமுக வழக்கறிஞர் வில்சன்முறையீடு செய்துள்ளார்.
இதுதொடர் பான மனுவை அவசர வழக்காக ஏற்றுவிசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.