கட்டுப்படியாகா கட்டணங்கள் .

எடப்பாடி அரசாங்கம் செங்குத்தாக உயர்த்தியுள்ள பேருந்து கட்டணங்கள் மக்களிடம்மிக கடுமையான கோபத்தை உருவாக்கியுள்ளது. 

சமீப காலத்தில் அரசாங்கத்தின் எந்த ஒருமுடிவும் இவ்வளவு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது இல்லை! தனது திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையும் மறைக்க எடப்பாடி அரசாங்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுவது கேலிக் கூத்தானது. 

ஒவ்வொரு மாநிலமும் சில விசேட மற்றும் குறிப்பான சூழல்களை கொண்டுள்ளன. வெவ்வேறு கட்சிகள் மாநிலங்களை ஆளும் பொழுது அவற்றின் கொள்கைகள் மற்றும் நிர்வாகமுறைகள் மக்களுக்கு எவ்வித பலன்களை தருகின்றனஎன ஆய்வு செய்வது தவறு அல்ல; அது தேவையானதும் கூட! 
ஆனால் அத்தகைய ஒப்பீடுக்கு அறிவியல்பூர்வமான அடிப்படை இருக்க வேண்டும்.

மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் காரணமாக எடப்பாடி அரசாங்கம் கீழ்கண்டவாறு சொற்ப அளவில் கட்டணங்களை குறைத்துள்ளது:


புறநகர் 42 60 18 பைசா 58 2 பைசா
விரைவு/சொகுசு 56 80 24 பைசா 75 5 பைசா
அதி சொகுசு 60 90 30 பைசா 85 5 பைசா
அதி நவீன சொகுசு 70 110 40 பைசா 100 10 பைசா
குளிர் சாதனம் 90 140 50 பைசா 130 10 பைசா
வால்வோ 110 170 60 பைசா 170 0 பைசா
(கட்டணம்/பைசா/கிமீக்கு)

நகர பேருந்துகளில் அனைத்து மட்டங்களிலும் ரூ. 1/- குறைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசாங்கத்தால் குறைக்கப்பட்ட கட்டணங்களை கூட கேரளா அரசாங்கத்தின் கட்டணங்களுடன் ஒப்பிடும் பொழுது 6 பிரிவுகளில் 4ல் கேரளாவில் கட்டணம்குறைவாக உள்ளது. இதனை கீழ்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:

(பைசா/கிமீக்கு)
மாநிலம் புறநகர் விரைவு/ அதி அதி நவீன குளிர் வால்வோ
சொகுசு சொகுசு சொகுசு சாதனம்
தமிழகம் 58 75 85 100 130 170
கேரளம் 64 72 90 90 110 130

எனவே தமிழகத்தில் திருத்தப்பட்ட கட்டணங்கள் மற்றமாநிலங்களைவிட குறைவாகவே உள்ளது எனும் எடப்பாடிஅரசாங்கத்தின் கூற்று முழு உண்மை அல்ல என்பது தெளிவாகிறது.

கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வு ஒரு காரணம் என அரசாங்கம் கூறுகிறது. 
டீசல் விலையை மோடிஅரசாங்கம் உயர்த்தியது என்பது உண்மையே! 

ஆனால் தமிழக அரசாங்கமும் தன் பங்குக்கு டீசல் மீது வரியை உயர்த்தி வந்துள்ளது என்பதை எடப்பாடி அரசாங்கம் திட்டமிட்டு மறைக்கிறது. டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 25 சதவீதம் எனவும் பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 34 சதவீதம் எனவும் தமிழக அரசாங்கம் வசூலிக்கிறது. 

போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு சுமார் 65 கோடி லிட்டர் டீசல் உபயோகிக்கின்றன.
இதிலிருந்து மதிப்புக் கூட்டு வரி ஆண்டுக்கு ரூ. 583 கோடியை தமிழக அரசாங்கம் பெறுகிறது. ஆனால் அரசாங்கம் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆண்டில்அளித்த டீசல் மானியம் ரூ. 257 கோடிதான்! 

போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு தமிழக அரசாங்கம் வரி விலக்கு அளித்தால் நட்டம் குறையும் அல்லவா? 
இந்த உண்மையை தமிழக அரசாங்கம் வசதியாக மறைத்துவிடுகிறது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் பொழுது மோடி அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தியது. எடப்பாடி அரசாங்கம் இதனை விமர்சித்ததுஇல்லை. 

ஆனால் கேரள மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. குறிப்பாககேரளா அரசாங்கம் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள்கொண்டு வரவேண்டும் என கடுமையாக வலியுறுத்தியுள்ளது. 


ஆனால் மோடி அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ள எடப்பாடி அரசாங்கம் வாய் மூடி மவுனியாக உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தும்டீசலுக்கு மத்திய அரசாங்கத்தின் சுங்கவரிக்கு (Excise duty)விலக்கு கேட்பதும் தனது மதிப்புக் கூட்டும் வரியைதமிழக அரசாங்கம் விலக்குவதும் மிகவும் அவசியம் ஆகும்.இதன் மூலம் கணிசமான நட்டத்தை குறைக்க இயலும்

இந்தியாவில் 54 அரசு போக்குவரத்துக் கழகங்கள்உள்ளன. 
இவற்றின் பேருந்துகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 7 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இரயில்களில் ஒரு நாளைக்கு 23 இலட்சம் பேர்தான் பயணிக்கின்றனர். 

இதிலிருந்து போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் வாழ்வில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர முடியும்.2014ஆம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இந்தியா முழுதும் சுமார் ரூ. 9800 கோடி நட்டம் அடைந்துள்ளன. பெரும்பாலான போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில்தான் இயங்குகின்றன. நட்டம் என்பதுதமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் இல்லை.
சமூக உற்பத்திக்கும், கல்வி போன்ற சமூக கடமைகளுக்கும் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுவதால் நட்டம் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. 

எனினும்இத்தகைய சிக்கலான சூழலிலும் கூட சில மாநிலங்களின் போக்குவரத்துக் கழகங்கள் சிறந்த நிர்வாகச் செயல்களை முன்னெடுத்துள்ளன. 
ஆந்திரப் பிரதேச போக்குவரத்துக் கழகம் 9.00R20 14PR எனும் டயர்களை அகற்றிவிட்டு 10.00R2016PR எனும் டயர்களை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக டயர்களின் ஆயுட்காலம் ஆண்டுக்கு 1,75,568 கிமீஎன்பது 1,98,536 ஆக உயர்ந்தது. 
டயர்கள் மீதான செலவுஒரு கிமீக்கு 72 பைசாவிலிருந்து 56 பைசாவாக குறைந்தது.

பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் Intelligent Transportation Systemஎனும் திட்டத்தின் கீழ் 6500 பேருந்துகளை கண்காணிக்கும் மைய மின்னணுகட்டமைப்பு வசதிகளும், 6500 பேருந்துகளின் அனைத்து விவரங்களும் (வடிவமைப்பு முதல் உதிரி பாகங்கள் தேவை வரை) அடங்கிய தகவல் வங்கி உருவாக்கப்பட்டது. 

இதன் மூலம் பேருந்துகளின் தாமத வருகை,ஒவ்வொரு தடத்திலும் ஆகும் வசூல் அளவு, எந்த தடத்தில்கவனம் செலுத்துவதன் மூலம் இலாபம் அதிகரிக்க முடியும் எனும் விவரங்கள் கிடைத்தன. 
இது வருமானம் மற்றும் இலாப உயர்வுக்கு உதவியது.

பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் ஸ்மார்ட் அலை பேசியில் செயல்படும் ஆப் (App) எனும்செயலியை அறிமுகப்படுத்தியது. 
இந்தச் செயலி மூலம் பயணி தனது பேருந்து எப்பொழுது வரும், அடுத்த நிறுத்தம் எது என்பது உட்பட பல விவரங்களை அறியமுடியும். 
1,50,000 பயணிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.
சண்டிகர் போக்குவரத்துக் கழகம் குறுஞ்செய்தி மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பணி ரோஸ்டர் விவரங்களை தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது.

கர்நாடக போக்குவரத்துக் கழகம் 20 சதவீதம் எரிபொருளை காய்கறிகள் மற்றும் பழங்கள் கழிவுகள் மூலம் தயாரிக்கும் பயோ டீசல் மூலம் இயக்குவதில் வெற்றிகண்டது.
கர்நாடக மற்றும் மகாராஷ்ட்ர போக்குவரத்துக் கழகங்கள் தமது அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் (GPS)) மின்னணு கண்காணிப்புக் கருவியை பொருத்தின. 
இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே ஒவ்வொரு பேருந்தும் எங்கு உள்ளது; எப்பொழுதுவந்து சேரும் எனும் தகவல்கள் எளிதாக கிடைத்தன.

உத்தரப்பிரதேசத்தில் (சமாஜ்வாதி ஆட்சியின்பொழுது) கிராமங்களுக்கு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டது; பிங்க் பஸ்(Pink Bus) எனும்பேருந்துகள் பெண்களுக்கு என தனியாக இயக்கப்பட்டன; 
இதில் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் பெண்கள்; குற்றங்கள் தடுக்கப்பட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன; இணைய வசதி வைஃபி ((WiFi) ) மூலம் தரப்பட்டது.
தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் 24 மணி நேரமும் செயல்படும் பயணிகள் உதவி மையம் (Call Center)வசதியை உருவாக்கியது.


தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் சில குடியிருப்புகளுக்கு சென்று வீட்டு வாசற்படியிலேயே பயணிகளை ஏற்றும் ‘வஜ்ரா’ எனும் வசதியை அறிமுகப்படுத்தியது.
கேரள போக்குவரத்துக் கழகம் மாவட்ட தலைநகரங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க தனி கழகத்தை உருவாக்கியது. 
இதன் மூலம் குளிர்சாதான மற்றும் குளிர்சாதனம் அல்லாத தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்படி பல நிர்வாக முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஆனால் முன்னர் இருந்த ஜெயலலிதா மற்றும் அவரின்வாரிசான எடப்பாடி அரசாங்கம் இத்தகைய எவ்வித முயற்சியும் தமிழகத்தில் எடுக்கவில்லை. 
தமிழக போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மட்டுமல்ல; நிர்வாக முறைகளும் காலாவதியானதாகவே இருக்கின்றன.

ஏபிஎஸ்ஆர்டியு (APSRTU) எனும் மத்திய அரசாங்கத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்தை குறைக்க பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. 
இவற்றில் சில ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனினும் சில ஆலோசனைகள் கவனிக்கத்தக்கவை:
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்படும் சேசிஸ்களுக்கு வரி விலக்கு.
பிரேக் போன்ற பாதுகாப்பு சாதனங்களுக்கு வரிவிலக்கு.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தரும் “சாலைஉபயோகிப்பு” கட்டணங்களை திருப்பி அளித்தல். (அந்தநிதியை புதிய பேருந்துகள் வாங்க பயன்படுத்த வேண்டும்எனும் நிபந்தனையுடன்)
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வருமானம்மற்றும் சேவை வரி விலக்கு.

மாநில அரசாங்கம் புதிய பேருந்துகள் வாங்க மூலதன உதவி அளித்தல்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருப்பது போல (நிதி உதவி உட்பட) இலக்குகளை தீர்மானித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையே உருவாக்குதல்
(மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை போன்ற) சமூக கடமைகளுக்கு ஆகும் செலவுகளை மாநில அரசாங்கம் ஈடு செய்தல்.


டீசலுக்கு போடப்படும் அனைத்து வரிகளையும் 50 சதவீதம் குறைத்தல்.
கிராமப்புற தடங்களில் ஏற்படும் நட்டத்தை மாநிலஅரசாங்கம் ஈடு செய்தல்.
மாற்று எரி பொருளை பயன்படுத்த முயற்சிகள் எடுத்தல்.

பேருந்துகள் இயக்க ஜிபிஎஸ் ((GPS) அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துதல்.
இந்த அமைப்பில் தமிழக போக்குவரத்துக் கழகங்களும் உறுப்பினர்கள்தான்! 
மேற்கண்ட ஆலோசனைகளில் தான் செய்ய வேண்டியதை அமல்படுத்துவதுடன் மோடி அரசாங்கத்திடம் பெற வேண்டிய கோரிக்கைகளை வலுவாக முன்வைப்பது அவசியமாகிறது. ஆனால் எடப்பாடி அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தவில்லை. 

தமிழக அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மேலும் ஒரு சான்று.
செங்குத்தான கட்டண உயர்வு காரணமாக இரயில்கள்,இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாறும் நிலைக்குமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
வணிகரீதியாக பயணிகளை இழக்கும் ஆபத்து போக்குவரத்துக் கழகங்களுக்கு உருவாகியுள்ளது. எனவே கட்டண உயர்வு முழுவதையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது மிகஅவசியம் என்பதை எடப்பாடி அரசாங்கம் உணர வேண்டும்.

( தீக்கதிர் நாளிதழ் ஆதாரங்கள்: தமிழக அரசாங்கத்தின் 2011 மற்றும் 2018 சுற்றறிக்கைகள்/ ஏபிஎஸ்ஆர்டியு வலைத்தளம்)
===================================================================================================================================

ன்று ,
பிப்ரவரி-01.


  • டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது(1864)
  • ஆசியாவின் முதலாவது புகைவண்டி தபால் சேவை  கண்டியில் ஆரம்பமாகியது(1832)
  • உலகின் மிகப் பெரிய ரயில்நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)
  • தமிழ் நாடகத்துறை முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
======================================================================================
பம்மல் சம்பந்தம் 
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார். இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.
பம்மல் சம்பந்தம் 1873ம் வருடம் ஃபிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் வாசக புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது, ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாச புராணங்களிலிருந்து தினமும் ஒரு புதுக் கதையும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே காரணம் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.
மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.
உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர். நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.
அக்காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு பூராவும் நடக்கும், மங்களமாகவே முடியும் என்ற பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் படைத்தார். ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார். இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள் சுருக்கிய பெருமையும் அவரதே.

பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா நாடகக்குழு சென்னையில் நடத்திய சிரகாரி, மற்ற நாடகங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் இக்குழுவில் வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள், படிப்பறிவு மிகுந்தவர்கள் தொழில் முறையிலில்லாமல், பொழுதுபோக்குக்கெனவே நடத்தியது சம்பந்தத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நண்பர்கள் அறுவருடன் சென்னை ஜார்ஜ் டௌனில், 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
அதே சமயம் சென்னைக்கு விஜயம் செய்த பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள், பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள், ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன. அவர்களது நேரம் தவறாமையும் ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும் என்றெண்ணியவர், பின்னர் இதை நிறைவேற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
சுகுணவிலாச சபையின் நாடகங்களில் எல்லாம் சம்பந்தமே ஹீரோ – ரங்கவடிவேலு முதலியார் அவர்கள்தான் ஹீரோயின் – இந்த அமைப்பு 1895லிருந்து 1923ம் வருஷம் வரை தொடர்ந்தது. சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார். அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 – அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த ஏழு வருஷங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பது, ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்களுடைய நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்) சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது, தானே வலிய வந்து தோட்டக்காரன் அண்டை வீட்டுக்காரனாக இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசிய போது எழுந்த கரகோஷம் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது.
பம்மல் சம்பந்தம் முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.
பம்மல் சம்பந்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் – அவற்றுள் முக்கியமானவை கீழே:
மனோஹரா (1895 – சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
லீலாவதி சுலோசனா – (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
சுந்தரி – (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
சாரங்கதரா (198 முறை – மேடையில் முதல் முத்தக் காட்சி!)

கள்வர் தலைவன்
காலவ ரிஷி (1899 – 307 முறை மேடையேறியது)
காதலர் கண்கள் (1902 – 190 முறை மேடையேற்றம்)
விரும்பிய விதமே ( As You Like It தமிழாக்கம்)
வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
மகபதி ( Macbeth தமிழாக்கம்)
சிம்ஹலநாதன் (Cymbalene தமிழ்வடிவம்)
பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ்வடிவம்)
காளப்பன் கள்ளத்தனம்
சாகுந்தலம்
மாளவிகாக்கினிமித்திரம்
விக்ரமோர்வசீயம்
ரத்னாவளி
ம்ருச்சகடிகம்
யயாதி
இரு நண்பர்கள்
சபாபதி
விஜயரங்கம்
சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
சதி சுலோசனா
சுல்தான் பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
நல்ல தங்காள்
ஸ்த்ரீ சாஹசம்
விருப்பும் வெறுப்பும்
வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:
காலவ ரிஷி (1932)
ரத்னாவளி (1935)
மனோஹரா (1936, 1954)
லீலாவதி சுலோசனா (1936)
சபாபதி (1941)
வேதாள உலகம் (1948
)
ஆர்வி: இவரைப் போன்ற முன்னோடிகளின் எழுத்துகள் எப்போதோ நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இவரது நாடகங்கள் பதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இவரது சுய வரலாறான நாடக மேடை நினைவுகள் பதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
இவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப் பட்டது.
சாரங்கதாரா இவர் எழுதியது என்று சேதுராமனின் குறிப்புகள் சொல்கிறது. ஆனால் சாகித்ய அகாடெமி வெளியிட்டிருக்கும் சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதிய இரு நாடகங்கள் என்ற புத்தகத்தில் இது சுவாமிகள் எழுதியதாக வெளிவந்திருக்கிறது. இது என்ன குழப்பம் என்று யாருக்காவது தெரியுமா?

சேதுராமன் சாரங்கதாரா பற்றி விளக்குகிறார்.
இருவருமே சாரங்கதரா எழுதி இருக்கலாம். பம்மல் எழுதியது நிச்சயம் என்பது கீழ்க்கண்ட குறிப்பிலிருந்து தெரிகிறது – பக்கம் 167 நாடக மேடை நினைவுகள் –
“” இனி மனோஹரனுக்குப்பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதரன்’ பற்றி எழுதுகிறேன் – என் நண்பன் அப்பு என்னிடம் ‘இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள் என்று கேட்டான். — இதை நீ ஏன் கேட்கிறாய் உன் மனதில் உள்ளதைச் சொல் என்றேன் — நான் சாரங்கதரா நாடகம் எழுத வேண்டுமென்றும் அதில் அவன் சாரங்கதரனாக
நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தான் ..****
இந்த நாடகம் எங்கள் சபையால் நடிக்கப் பட்ட போது சசிரேகா என்ற தெலுங்குப் பத்திரிகையின் நிருபர் சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டதும் அதற்கு சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார்.— நான்
எழுதியிருக்கும் நாடகப் புத்தகத்தைப் படித்துப் பார்த்திருப்பார்களாயின் இதில்
அவர் கூறியபடி தவறு ஒன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள் ***
சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதியதும் நிச்சயம்தான். அவர் எழுதிய நாடகம் சாகித்திய அகாடெமி பதித்து ஒரு புத்தகமாக வந்திருக்கிறது.இது ஒரு கர்ண பரம்பரை கதையாக இருக்கலாம்.அதனால் இருவருமே அவரவர் பாணியில்  எழுதியிருக்கலாம் .
=========================================================================================
குஜராத்தாக மாறும் உ.பி. 

உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் வன்முறை சங்பரிவார் அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
 மக்கள் எப்போதெல்லாம் துன்பப்படுகிறார்களோ, அப்போது மக்களின் கோபம்ஆட்சியாளர்களின் பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்ள மதவெறி ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகிறது பாஜக. 
இந்தியாவில் சட்டத்தின்ஆட்சி நடைபெறுகிறதா, சங்பரிவாரின்தனித்த ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம்எழுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 
தற்போது கூட உ.பி.யில் காஸ்கஞ்ச் பகுதியில் தடையை மீறி ஏபிவிபி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். 
கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் சென்று பல ரவுண்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டு ரகளை செய்திருக்கின்றது. அதற்கானவீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியிருக்கிறது. 
மேலும் வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களை ஆத்திரப்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். 
அதன் பின்னரே வன்முறை உருவாகியிருக்கிறது. உடனே ராகுல் உபாத்யாய் என்ற இந்து இளைஞரை கொன்று விட்டதாக வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தில் வன்முறை உக்கிரமடைந்திருக்கிறது. 
இதுகுறித்து அப்பகுதியின் காவல்கண்காணிப்பாளர் சுனில்குமார் சிங், இது அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 
அவ்வளவுதான் உடனே சுனில் குமார் சிங்கை யோகி ஆதித்யநாத் அரசுமீரட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்திற்கு தூக்கியடிக்கிறது. 
இதில் வேடிக்கை என்னவென்றால் எந்தஇந்து இளைஞர் உயிரிழந்ததாக வதந்தியைபரப்பினார்களோ, அவருக்கே அந்த செய்திசமூகவலைத்தளம் மூலம் சென்று சேர்ந்திருக்கிறது. 
இதனால் அதிர்ச்சியடைந்தஅவர் ஊடகங்களிடம் தான் அந்த பக்கமேசெல்லவில்லை என்றும் திட்டமிட்டு வதந்தியைபரப்பி வன்முறையைஏவிவிட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மதவெறியர்களிடம் ஆட்சி அதிகாரம் சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பதற்கு ஏற்கனவே குஜராத் உதாரணமாக இருக்கிறது. 
அதே மாதிரியைத்தான் தற்போது உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுகிறார் அவர் முதல்வராக பதவியேற்ற முதல் 70 நாட்களில் 60 மதக்கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
 151 பேர் கை கால்களை இழந்து இருக்கின்றனர்என மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 
காஸ்கஞ்ச் வன்முறையில் வதந்தியை பரப்பியவர்கள் மீதோ, துப்பாக்கிகளுடன் வலம் வந்தவர்கள் மீதோ அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?