இந்தியா குரல் எழுப்பட்டும்
இந்தியா முழுக்க குரல் எழுப்பட்டும்
“கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-–வது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.” - – என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசினை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்படவேண்டும் என்றும் தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்தக் கடிதங்களில் தெளிவுபட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். இதுதொடர்பான சட்ட முன்வடிவு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தமது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 2017 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை நியாயமாக நடைபெறவில்லை. 13.9.2021 முதல் முறையும், 8.2.2022 அன்று இரண்டாவது முறையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.
இப்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் நீட் மோசடியை இந்தியா முழுமையாக உணர்ந்துவருகிறது.