லிங்கன் முதல் ரீகன் வரை வரை:

 கொலைத் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க அதிபர்கள்


கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேரணியின் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதன் போது டிரம்பின் வலது காதை உரசியபடி ஒரு தோட்டா சென்றது.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல்வாதி மீது கொலை முயற்சித்தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்பும் பல அமெரிக்க அதிபர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
அவர்களில் சிலர் உயிரிழந்தனர், சிலர் உயிர் பிழைத்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த அதிபர்கள்
ஜான் எஃப். கென்னடி (1963)

ஜான் எப்.கென்னடி அமெரிக்காவின் 35-ஆவது அதிபர். 
1963 நவம்பர் 25 ஆம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். டல்லாஸ் பயணத்தின் போது திறந்த காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் சுடப்பட்டார்.

கென்னடியின் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததாக துப்பாக்கி சூடு நடந்த போது அவருடன் காரில் இருந்த, ரகசிய சேவை ஊழியர் கிளின்ட் ஹில் கூறினார்.
ஆனால் அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

 கென்னடியின் படுகொலைக்காக லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
ஜான் எஃப். கென்னடி மீதான தாக்குதலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.
அவர் தன்னை நிரபராதி என்று கூறினார். லீ ஹார்வி ஓஸ்வால்ட் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 
அவர்  மார்க்சிஸ்ட் என்று அறியப்பட்டவர். அவர் 1959 இல் சோவியத் யூனியனுக்குச் சென்று 1962 வரை அங்கேயே இருந்தார்.
அவர் மின்ஸ்கில் ஒரு வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். 
கென்னடி படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹார்வி, கியூபா மற்றும் ரஷ்யாவின் தூதரகங்களுக்குச் சென்றிருந்ததை வாரன் விசாரணைக் கமிஷன் கண்டறிந்தது.

லீ ஹார்வி ஓஸ்வால்ட், டெக்சாஸ் பள்ளி புத்தக வைப்பு கட்டடத்தில் (Texas school book depository building) இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக,1964 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாரன் கமிஷன் அறிக்கை கூறியது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அங்கு இரண்டாவது துப்பாக்கி ஏந்திய நபர் இருந்திருக்காலாம் என்று சிலர் சொல்கின்றனர். கென்னடி பின்னால் இருந்து சுடப்படவில்லை, முன்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஓஸ்வால்டின் கன்னங்களில் பாரஃபின் சோதனை செய்யப்பட்டதில் அவர் துப்பாக்கியால் சுடவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த சோதனையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கென்னெடியின் கொலை பற்றி இன்றும்கூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆபிரகாம் லிங்கன் (1865)
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-ஆவது அதிபராவார்.
 1865 ஏப்ரல் 15 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர்டு தியேட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆபிரகாம் லிங்கன் தனது தேர்தல் பரப்புரைகளில் அடிமை முறைக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரியப்படுத்தினார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்துவிடுவாரோ என்று அமெரிக்காவின் தென் மாகாணங்களில் பலர் பயந்தனர்.

அமெரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள ஏழு மாகாணங்கள் தங்களின் தனி கூட்டமைப்பை உருவாக்கியதற்கு ஒரு வேளை இது காரணமாக இருந்திருக்கலாம். பின்னர் மேலும் நான்கு மாகாணங்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்தன. 
இந்த மாகாணங்கள் அனைத்தும் ஒன்றாக ’கூட்டுக்குழு’ (Confederacy) என்று அழைக்கப்பட்டன.

1861-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இது நான்கு ஆண்டுகள் நீடித்தது. போரில் 6 லட்சம் அமெரிக்கர்கள் இறந்தனர். 1865 ஏப்ரல் 9 ஆம் தேதி கான்ஃபெடரேட் ஜெனரல் ராபர்ட் ஈ லீ சரணடைந்த பின்னர் போர் முடிவுக்கு வந்தது.

வடக்கு மற்றும் தென் அமெரிக்க மாமாகாணங்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த ஒரு வாரத்தில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையாளி ஜான் வில்க்ஸ் பூத், தெற்கு மாகாணங்களின் வலுவான ஆதரவாளராக இருந்தார்.

வில்லியம் மெக்கின்லி (1901)
வெள்ளை மாளிகையில் வில்லியம் மெக்கின்லி.
வில்லியம் மெக்கின்லி அமெரிக்காவின் 25-ஆவது அதிபர். படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் 1897 மார்ச் 4 முதல் 1901 செப்டம்பர் 14 வரை அமெரிக்க அதிபராக இருந்தார்.

மெக்கின்லியின் ஆட்சிக் காலத்தில் நடந்த 100 நாள் போரில் அமெரிக்கா, கியூபாவில் ஸ்பெயினை தோற்கடித்தது. பிலிப்பைன்ஸின் மணிலா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.
1901 செப்டம்பரில் ஒரு கண்காட்சியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது அவர் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டார். எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் காலமானார்.

மிச்சிகனில் வசிக்கும் லியோன் சோல்கோஸ் (Leon Czolgosz) என்ற நபர் அதிபர் மெக்கின்லியை படுகொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.
"அதிபர் மெக்கின்லியைக் கொன்று நான் என் கடமையை செய்துள்ளேன். ஒருவரிடம் இத்தனை அதிகமான வேலையும், வேறு ஒருவரிடம் வேலையே இல்லாமல் இருப்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை,” என்று கைது செய்யப்பட்டபோது அவர் கூறினார்.

ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் (1881)
ஜேம்ஸ் கார்பீல்ட் மீதான தாக்குதலை சித்தரிக்கும் ஓவியம்.
ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் அமெரிக்காவின் 20-ஆவது அதிபராக இருந்தார். அவர் 1831 இல் ஓஹியோவில் பிறந்தார்.

1881 ஜூலை 2 ஆம் தேதி அவர் வாஷிங்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு நபரால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த கார்பீல்ட் பல நாட்கள் வெள்ளை மாளிகையில் இருந்தார்.

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது இயந்திரம் ஒன்றின் உதவியுடன் அதிபரின் உடலில் புதைந்திருந்த தோட்டாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.

செப்டம்பர் 6 ஆம் தேதி கார்பீல்ட் நியூ ஜெர்சிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் 1881 செப்டம்பர் 19 ஆம் தேதி காயங்கள் மற்றும் உள் ரத்தப்போக்கு காரணமாக அவர் காலமானார்.

அதிபர் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்றவர் சார்லஸ் ஜே கைடோ என்று அடையாளம் காணப்பட்டார்.

கொலை முயற்சித் தாக்குதலில் உயிர் தப்பிய அமெரிக்க அதிபர்கள்
ரொனால்ட் ரீகன் (1981)
ரொனால்ட் ரீகன் மீதான தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவரை பிடிக்கும் முயற்சி.
ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் 40-ஆவது அதிபர். சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவு ஆகியவற்றில் அவர் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார்.
ரீகன் 1911 பிப்ரவரி 6 ஆம் தேதி இல்லினாயில் உள்ள டாபின்கோவில் பிறந்தார். ரீகன் ஒரு ஹாலிவுட் நடிகர் மற்றும் 50 படங்களில் நடித்துள்ளார்.

1942-45 காலகட்டத்தில் அவர் ராணுவத்திலும் பணியாற்றினார்.
1981 மார்ச் 30 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்ற 69 நாட்களுக்குப் பிறகு அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே அவர் சுடப்பட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்தார். தாக்குதலில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

சுடப்பட்ட நபர் ஜான் ஹிங்க்லி ஜூனியர் என அடையாளம் காணப்பட்டார்.
தியோடர் ரூஸ்வெல்ட் (1912)
பேரணியில் உரை நிகழ்த்தும் தியோடர் ரூஸ்வெல்ட்.

அமெரிக்காவின் 26வது அதிபராக இருந்தவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்தார். அவர் குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்தார்.
1898 இல் ரூஸ்வெல்ட் நியூயார்க்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், 1900 இல் அவர் அமெரிக்காவின் துணை அதிபரானார்.

1901 இல் அதிபர் மெக்கின்லி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் அமெரிக்காவின் அதிபராக நியமிக்கப்பட்டார். ரஷ்ய-ஜப்பானிய போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு 1906 இல் நோபல் சமாதான விருது வழங்கப்பட்டது.
1912 அக்டோபர் 14 ஆம் தேதி அமெரிக்க நகரமான மில்வாக்கியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அடிப்படைவாதியால் அவர் மார்பில் சுடப்பட்டார்.

தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ரூஸ்வெல்ட் குணமடைந்தார். ரூஸ்வெல்ட்டைத் தாக்கியவர் வில்லியம் எஃப். ஷ்ராங்க் என அடையாளம் காணப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப் (2024) - அதிபர் வேட்பாளர்
2024 ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற பேரணியின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத்தாக்குதலில் டிரம்பின் காதை உரசியபடி தோட்டா சென்றது. தாக்குதலுக்குப் பிறகு டிரம்பின் முகத்தில் ரத்தம் காணப்பட்டது.
முன்னாள் அதிபர் டிரம்பை தாக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டார். 
அந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள நர்ஸிங் ஹோமில் சமையல் அறையில் வேலை செய்து வந்தார்.

டிஎன்ஏ மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவரை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டன.
அந்த இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கி 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. 
அது அவரது தந்தைக்கு சொந்தமானது.
நன்றி:-பிபிசி.தமிழோசை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?