உயர்வுக்கு அடித்தளம்
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் ஒன்றிய பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி.
உயர்வுக்கு அடித்தளம் இட்டது யார்?
மின் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது அ.தி.மு.க. அப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தார்மீக அருகதை இருக்கிறதா அ.தி.மு.க.வுக்கு?
“தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசே முழுக் காரணம்” என்று நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்லி இருப்பதுதான் முழு உண்மை ஆகும்.
2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தார் அன்றைய ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
அப்போது கமலாலயத்தில் பியூஷ் கோயல் அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தை, அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.
அந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டையும் சேர்ப்பதற்காக, எரிசக்தித் துறை அமைச்சரான பியூஷ் கோயல், தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதா அவரையோ, மோடி அரசையோ கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை.
அந்தக் கோபத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார் பியூஷ் கோயல்.
“இந்திய மாநிலங்களிலேயே தனி மாநிலமாக, தமிழ்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே மத்திய அரசு, அடைய முடியாத மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்திக்க முடியவில்லை.
அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களிடம் பலமுறை பேச முயன்றேன். எந்தப் பலனும் இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் என்னால் சகஜமாகக் பேச முடியும். ஆனால், தமிழகத்தில் மின்துறை அமைச்சர் எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டு, ‘அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்கிறார்.
அ.தி.மு.க. கட்சி எம்.பி.-க்கள் யாரும் நாடாளுமன்றத்தில் வாயைக்கூட திறக்க முடியாது. சென்னையில் எழுதித்தரப்பட்ட உரையைத்தான் அவர்கள் அப்படியே படிப்பார்கள்” என ஜெயலலிதாவையும், அ.தி.மு.க-.வையும் விளாசித் தள்ளினார் பியூஷ் கோயல். அவருடைய பேட்டியை தமிழில் டப் செய்து தமிழக பா.ஜ.க. வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோ இன்னும் சமூக வலை தளங்களில் உள்ளது.
உடனே கொதித்துப் போய் அன்றைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வமும் மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும் பியூஷ் கோயலுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
“நீ அவலைக் கொண்டு வா, நான் உமியைக் கொண்டு வருகிறேன் என்பது போலத்தான் இருக்கிறது ‘உதய்’ மின் திட்டம்’’ என நத்தம் விசுவநாதன் சீறினார். “மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ‘உதய்’ திட்டம் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடிய திட்டம் இல்லை’’ என்றார்.
அன்றைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, “அரசியல் ஆதாயம் தேட பியூஸ் கோயல் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்” என்றார்.
இப்படி ஜெயலலிதா இருந்த போது ‘உதய்’ மின் திட்டத்தை எதிர்த்தவர்கள்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆதரித்தார்கள்.
பன்னீர்செல்வமும் பழனிசாமியும் பா.ஜ.க.-வின் பாதம் தாங்கிகளாக மாறி, ‘உதய்’ மின் திட்டத்தில் கையெழுத்துப் போட்டார்கள்.
எந்த பியூஷ் கோயலுக்காக அன்று தலைவிக்காக வாள் சுழற்றினார்களோ, அதே பியூஸ் கோயலிடம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய கட்சிதான் அ.தி.மு.க.
2015 நவம்பரில் ‘உதய்’ மின் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
ஆனால், தமிழ்நாடு மட்டும் திட்டத்தில் இணையவில்லை.
சுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று பா.ஜ.க. அரசு தேன் தடவிய நாவில் பேசியது. ஆனால், அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏற்கவில்லை.
‘உதய்’ மின் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தி.மு.க. எடுத்துரைத்தது.
ஜெயலலிதா ஏற்க மறுத்த திட்டத்தை அன்றைய அ.தி.மு.க. பொறுப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நேரத்தில் அவர் மீண்டு(ம்) வரமாட்டார் என்ற எண்ணத்தில் 2016 அக்டோபர் 21- – அன்று அன்றைய பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டார்.
2017 ஜனவரி 9 ஆம் தேதி ‘உதய்’ திட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இணைந்தது.
எந்த பியூஸ் கோயலை எதிர்த்தார்களோ, அந்த எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் புதுடெல்லியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்படியானால் இன்றைய மின் கட்டண மாற்றங்களுக்கு அ.தி.மு.க. தானே காரணம்?
ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். அப்படியானால் இன்றைய மின் கட்டண மாற்றங்களுக்கு அ.தி.மு.க.தானே காரணம்?
இதை எல்லாம் மக்கள்மறந்திருப்பார்கள் என்ற வகையில் தான் திசைதிருப்பல் போராட்டங்களை நடத்துகிறது அ.தி.மு.க.
ஆனால் தமிழ்நாடு மக்கள் உண்மை அறிவர்.