பார்த்தாலே ,,,,,,,,,,,,

 
ஊசி போடும் தருணம்

ஒருவர் தன்னுடைய உடலில் எந்தப் பாகத்தில் வலிக்கிறதோ அந்தப் பாகத்தை அத்தருணத்தில் பார்த்துக்கொண்டிருந்தால், அவர் உணருகின்ற வலியின் அளவு குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவர் ஊசி போடும் தருணம் என்பது சிறுவர்களுக்கும் சரி, வெளியே சொல்லாவிட்டாலும் பெரியவர்களுக்கும் சரி சற்று சங்கடமான நேரம்தான்.
ஊசி குத்துவதால் ஏற்படும் வலியைவிட வலிக்குமே என்ற பயம்தான் அதிகமாக இருக்கும்.
கண்ணை மூடிக் கொள்வது, மருத்துவர் ஊசியைக் குத்துவதைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு எதையாவது பார்ப்பது போன்றவற்றைச் செய்து அதிகம் வலி தெரியாமல் இருக்க பலர் முயலுவார்கள்.
ஆனால் தற்போது இது சம்பந்தமாக பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியில், அந்த பாகத்தையே மேலும் பெரிதுபடுத்தி பார்த்துக்கொண்டிருந்தால் வலியின் அளவு மேலும் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி காலெஜ் லண்டன் என்ற பல்கலைக்கழகமும், இத்தாலியில் உள்ள மிலான் - பிகோக்கா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையமும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியை நடத்தியிருந்தனர்.

வேண்டிய அளவில் சூட்டை வெளிப்படுத்தக்கூடிய கம்பி ஒன்றைக் கொண்ட கருவி இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியில் பங்குபெறுபவரின் ஒரு கையில் இந்தக் கம்பியை வைத்து அதன் சூட்டை அதிகரித்துக்கொண்டே போகும்போது, சரியாக என்ன வெப்பத்தில் அவரால் சூட்டைத் தாங்கமுடியாமல் போக ஆரம்பிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக்கொண்டனர்.
பின்னர் முகம்பார்க்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி, அந்நபர் தனது மற்ற கையைப் பார்க்கும்போது, அவர் தனது வலி ஏற்படும் கையைப் பார்ப்பதுபோன்ற பிம்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உண்டு பண்ணினர்.
அதன் பிறகு இதே செய்முறையை மீண்டும் செய்தபோது, அந்த நபர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு அதிகமானது.
அதுவே அவரது கையை இயல்புக்கும் பெரிதாக இருக்கும்படியான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கும்போது, அவர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு மேலும் அதிகமானது.
ஆனால் தனது கைகளை அல்லாது வேறு பொருட்களை அந்நேரம் பார்ப்பாரேயானால், அந்நபர் தாங்கக்கூடிய சூட்டின் அளவு குறைந்துபோனது.
ஆக வலி ஏற்படும்போது வேறு இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் வலிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தால், நாம் உணரக்கூடிய வலியின் அளவு குறைகிறது என்பது நாம் இந்த ஆராய்ச்சியில் இருந்து தெரிந்துகொள்ளும் பாடம் எனலாம்.
இந்த கண்டுபிடிப்பின் விளைவாக சிகிச்சைகளின்போது நோயாளிகளின் வலி உணர்வை குறைக்கக்கூடிய புதிய உத்திகளை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 
பார்த்தால் பசி குறைகிறதோ இல்லையோ,வலி குறையும் என்று இப்போது
 இவர்கள் கூறுகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?