இரு நாட்டு அரசுகளின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள் -
இலங்கைப்படையினரால் தமிழகமீனவர்கள் கொல்லப்படுவது,சிறைபிடிக்கப் படுவதில் சில உண்மைகள் மறைந்திருக்கிறது.தமிழக,ஈழ மீனவர்கள்இடையில்மோதலையும், அதன் மூலம் இருநாட்டுத் தமிழர்களிடையேயும் சண்டையும் ,வெறுப்பையும் உருவாக்கவே இதை இந்திய,இலங்கை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக செய்திகள் உலவ ஆரம்பித்துள்ளது.
தமிழகமீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படும் போது கோபமடையாத கனிமொழிக்கு அத்துமீறிய மீனவர்கள் மக்களால் பிடிக்கப்படும் போது ஆவேசம் வருவது காரணமில்லாமல் இருக்க முடியுமா?கடந்த வாரம் பருத்தித்துறை முனைப் பகுதியில் கடற்கரைக்கு மிக அண்மையில் இழுவைப் படகுகளில் (ட்ரோலர்) வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டு இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அடுத்த நாளில் மாதகல் கடற்பரப்பில் வைத்துப் பிடிக்கப்பட்ட 24 மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் கூட இதுவே நடந்தது.
தமிழ் நாட்டில் கொந்தளிப்பு
மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழக முதல்வரின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது கனிமொழி உட்பட 2,000 பேர் கைதாகினர். இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகப் பாரதீய ஜனதாக் கட்சியினரும் ஒரு பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் புகுந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பது தொடர்பாகவும் இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கி விட்டுச் செல்வது தொடர்பாகவும் இலங்கை மீனவர்கள் நீண்ட காலமாகவே தங்கள் முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் அண்மையில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறும் முறைப்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்விடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பிரச்சினை தொடர்பாக முறைப்பாடும் செய்திருந்தார்.
சட்டத்தைக் கையில் எடுத்த மீனவர்கள்
இத்தகைய அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த இந்தியாவோ, இலங்கையோ பயனுள்ள நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில் இலங்கை மீனவர்கள் தாங்களாகவே நடவடிக்கையில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்தபோர் காரணமாகவும் கடற்படையினரின் கொலைவெறி நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையில் வடக்கு, கிழக்கு வாழ் மீனவர்கள் கடலில் இறங்க முடியாத நிலைமையே நிலவியது. இதன் காரணமாக வறுமையிலும் துன்பத்திலும் உழன்றனர். வறுமை தாங்காது கடலில் இறங்கியோரில் பலர் சடலங்களாகக் கரையொதுங்கியதையும் நாம் மறந்துவிட முடியாது. தற்சமயம் எமது மீனவர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவி மூலமும் வங்கிக் கடன்கள் பெற்றுத் தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் நிலையிலும் அவர்களின் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. இப்படியான ஒரு நிலையில் எமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதும் சேதமாக்கப்படுவதும் அவர்களின் எதிர்காலத்தையே இருளாக்கிவிடும்.இப்படியான ஒரு துன்ப நிலையிலேயே அவர்கள் தவிர்க்க முடியாதபடி சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்தனர்.தாங்களாகவே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் சில மீன்பிடி முறைகளுக்குத்தடை
இலங்கைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளின் பாவனையும் சில குறிப்பிட்ட வகை வலைகளின் பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய மீன்பிடி முறைமூலம் மன்னார் வளைகுடாவில் காணப்படும் சில அரிய மீன் வகைகளும், மீன்குஞ்சுகளும் கூட அழிவடைந்து எதிர்காலத்தில் இப்பகுதியின் மீன் வளமே அழிந்து விடும் என்பதாலேயே அவை தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள பவளப் பாறைகள் சேதமாக்கப்படுவது மீன்களின் உணவு உறை விடங்களையே நிர்மூலமாக்கும் செயலாகும். இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படும் இருமடி வலைகள் பவளப் பாறைகளையும் சேதப்படுத்துகின்றன. சேதுசமுத்திரத் திட்டத்திற்கே சுற்றுச் சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பதை நினைவு கூரலாம்.இலங்கை மீனவர்களின் சொந்த வாழ்வாதார அடிப்படையிலும் இக்கடல் பகுதியின் வளம் காப்பாற்றப்படும் வகையிலும் இலங்கை, இந்திய அரசுகள் அக்கறை செலுத்தாத நிலையில் இலங்கை மீனவர்கள் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்.ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதி யின் தலைமையிலான திராவிடர் முன்னேற்றக் கழகமும், இந்திய மத்திய அரசும் ஏதோ நடக்கக் கூடாத ஒரு பெருங்கொடுமை நடந்துவிட்டதாகக் கொதிப்படைந்துள்ளனர்.சென்னையில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம், தூதரக முற்றுகை 2,000 பேர் கைது என ஒரு பெரும் திருவிழாவே நடத்தப்பட்டது. அதேவேளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பொதுமக்களும் மீனவர்களும் சட்டத்தைக் கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதற்கும் ஒருபடி மேலே போய் இலங்கை அரசுக்குத் தன் ஆட்சேபனையைக் கடுமையான தொனியில் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
வளாவிருந்த மத்திய, மாநில அரசுகள்
இதுவரை இலங்கை இந்தியக் கடற்பரப்பில் ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயப்படுத்தப்பட்டு வந்தனர். பல படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டன. இவையனைத்தும் இலங்கைக் கடற்படையினராலேயே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இவை தொடர்பாக இந்திய மீனவர்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.இப்படியான சந்தர்ப்பத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு தந்தியோ கடிதமோ அனுப்பிவிடுவார். இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதுடன் அவர் தனது பணியை முடித்துவிடுவார். மத்திய அரசோ முதல்வருக்கு ஒரு பதிலை அனுப்பி வைக்கும். இது தொடர்பாக இந்திய மத்திய அரசோ தமிழக அரசோ பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதில்லை.அண்மையில் அடுத்தடுத்துக் கொல்லப் பட்ட இரு மீனவர்களின் கொலை தொடர் பாக மத்திய அரசு தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இந்திய வெளியுற வுத் துறைச் செயலர் திருமதி நிருபமா ராவ்வையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தது. இலங்கையோ தனது கடற்படைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் அதை ஒரு மூன்றாம் தரப்பு மேற்கொண்டிருக்கலாம் என்றும் கூறிவிட்டது. எனினும் மீனவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதில்லை என இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.இவை நடந்து ஒரு சில தினங்களுக்கு உள்ளேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.எழும் கேள்விகள்இங்கு சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும். ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்படும் போது தலைவரின் தந்தியுடனும் கடிதங்களுடன் தமது போராட்டங்களை மட்டுப்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இப்போது மட்டும் ஏன் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.ஒன்று, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல். ஏற்கனவே தமிழக அரசு மீனவர்கள் பிரச்சினைகளில் காட்டிய அக்கறையற்ற போக்கு தமிழக மீனவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் தி.மு.க. அரசினதும் அமைச்சர்களினதும் ஊழல்கள், மோசடிகள், அடாவடித்தனங்கள் தி.மு.கவின் செல்வாக்கில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன.இதை ஈடுசெய்ய இப்பிரச்சினையை தி.மு.க. கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் தான் தமிழக மீனவர்களின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலன் என்ற மாயையை அது ஏற்படுத்த முனைகிறது.இரு அரசுகளின் சதிமற்றது என்றுமே இந்திய அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவுவதை விரும்புவதில்லை. இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்குமிடையே எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு நிலவுவதாகவே கருத வேண்டியுள்ளது.இலங்கை இந்தியக் கடல் எல்லையை அண்மித்த பகுதிகளில் சாதாரண படகுகளில் வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் படகுகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன
நன்றி;தேடிப்பார் இணையம்
தமிழக மீனவர்கள் எல்லைதாண்டாததன் மூலமும்,இலங்கைமீனவர்களிடம் மீனுக்காகச்சண்டை இடாததன் மூலமே இது போன்ற சதிகளை முறியடிக இயலும்.