தமிழர் வாழ்ந்த அடையாளம் இருக்காது,

  


தியாகச்செம்மல் 
தமிழீழ கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் முன்னெடுக்க, ஒரு புதிய முயற்சியாக புலம்பெயர்ந்த தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக உள்ள தெற்கு சூடான் நாட்டின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் இதன் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது ஓர் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் பெரியாரியப் பற்றாளருமான பேராசிரியை சரசுவதியிடம் பேசியதிலிருந்து...

இன்றைய உலகமய தாராளமயச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? 

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது ஈழ மண்ணில் தோல்வியடைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எதற்காக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அதன் தேவை இன்னும் அப்படியேதான் உள்ளது. தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஈழத்தில் இருக்கும் மக்களால் மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது இயலாத ஒன்று. இதனால் ஈழ மக்களின் துயர்போக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள ஈழ ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ஓர் அரசை உருவாக்குவது என்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டு, அதன் பிரதமராக ருத்ரகுமாரனும், துணை பிரதமராக செல்வராசா செல்வரத்தினமும் ஜனநாயகரீதியில் ஓட்டெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வாக்கெடுப்பை நடத்த முடியாத நாடுகளில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் அவர்களே பிரதிநிதிகளை நியமிக்கிறார்கள். நிச்சயம் தமிழீழ மண்ணில் தனி நாடு மலர்வதற்கான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுத்துச் செல்லவும் அந்த கோரிக்கையை அடையவும் ஒரு தளமாக, ஸ்தாபனமாக நாடு கடந்த தமிழீழ அரசு செயல்படும்.


அதன் இந்தியசெயல்பாடுகள் பற்றி?

இந்த அரசை உருவாக்கும் முன் அதன் முன்னோடிகள் பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரினர். ஆனால் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் ஆதரவை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தாய்த் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கான ஆதரவை அதிகம் கோருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தோழமை மையம் என்ற அமைப்பை இங்கு உருவாக்கினோம். அதற்கான கூட்டங்களையும் நடத்தி ஆதரவைத் தெரிவித்தோம்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தும்,சர்வதேச அளவில் ராஜபக்ஷே மீது பெரிய அளவு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே ?
சர்வதேச அளவில் நடவடிக்கையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. டப்ளினில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை வண்மையாகக் கண்டித்துள்ளது. சேனல் - 4இல் வெளியிடப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற கிளர்ச்சியால், அப்போது அங்கு சென்றிருந்த ராஜபக்ஷே விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்துவந்தார். ராஜபக்ஷேவை சர்வதேச அளவில் போர்க் குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கைக்கு உட்படுத்த, நாடு கடந்த தமிழீழ அரசு தனக்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுக்கும்.


தற்போதைய நிலையே தொடர்ந்தால் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தீவிர சிங்களக் குடியேற்றம் நடைபெற்றுவருகிறது. தமிழினத்தின் அடையாளங்களை அழித்து ஒழிக்கவும், அங்கே அப்படி ஓர் இனம் இருந்ததற்கான சுவடுகளை அழிக்கவும் சிங்கள அரசு முயற்சித்துவருகிறது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்களே இல்லாமல் போய்விடும்.
                                                                                                       நன்றி; தி சண்டே இந்தியன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?