வாரிசு இலங்கையிலும்
மக்களுடன் நாமல் ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷவுக்கு சிறு வயதிலேயே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் மூத்த மகன், ஜனாதிபதியின் சகோதரர்கள் இருவர், ஜனாதிபதியின் சகோதரி ஆகியோரும் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கு 23 வயதுதான் ஆகிறது என்றாலும், பெரிய அரசியல் பொறுப்புகளுக்காக அவர் தயார் செய்யப்படுகிறார் போலத் தெரிகிறது.
தன் மகனைக் காட்டி 'இவர்தான் எதிர்காலம்' என்று கூறுவது போல கட்டவுட்டாக நிற்கிறார் ஜனாதிபதி மஹிந்த.
கடந்த அரசாங்கத்திலேயே கூட ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்கள் அதி முக்கிய அரசு பதவிகளில் வீற்றிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சென்ற வருடம் கிடைத்த வெற்றியின் விளைவாக ராஜபக்ஷ குடும்பத்தார், அதிலும் குறிப்பாக ஜனாதிபதியும் அவரது சகோதரரான பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கையில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளனர்.
அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் புதிய விடயம் இல்லை என்றாலும், தற்போதைய இலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ஷ குடும்பம்தான் என்கிற ஒரு நிலை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றப்பட்ட யுத்த வெற்றி சிங்கள பெரும்பான்மை சமூகத்தினரிடையே ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பின்னர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை தடுத்து வைத்தது கூட அந்த செல்வாக்கில் பெரிதாக பாதிப்பு எதையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.
குற்றச்சாட்டு
தென்னிலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ஷ குடும்பத்தாரின் போஸ்டர்களைத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
"ஜனாதிபதியின் மனைவி, சகோதரர்கள், மகன்கள், அத்தைகள் என்று எல்லோரும் அவர்களாகவே ஆதிக்கம் செலுத்துகிறர்கள். வேறு யாரும் அரசியலில் முன்னுக்கு வருவதற்கு அவர்கள் இடம் தருவதே இல்லை." என்று எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரான திலிப் வெடஆராச்சி கூறினார்.
வாரிசு அரசியல் இல்லை என்கிறார் நாமல்
தெற்காசியாவில் வழமையாக காணப்படும் வாரிசு அரசியல் செய்யும் குடும்பங்களில் ஒன்றுதான் தனது குடும்பமும் அதன் ஒரு பகுதிதான் தானும் என்று கூறப்படுவதை நாமல் ராஜபக்ஷ மறுக்கிறார்.
யார் நீங்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதுதான் முக்கியம்.
நாமல் ராஜபக்ஷ
"இது இருபத்தோராம் நூற்றாண்டு. இப்போதுள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். இனிமேலெல்லாம் குடும்ப அரசியல் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மக்களோடு இருக்கிறீர்கள், மக்களுக்காக உழைக்கிறீர்கள், நாட்டை நேசிக்கிறீர்கள் என்கிற வரைதான் உங்களால் வெற்றி பெற முடியும்." என்றும் அவர் கூறுகிறார்.
அரசியலில் நெடுங்காலம் பயணிக்க ஆயத்தமாகிறார் நாமல் ராஜபக்ஷ என்றே தெரிகிறது.
நன்றி;பி.பி.சி