ஏறும் விலைவாசி இறங்கவைக்க முடியாதா?

உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.
உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.உணவு தானியங்கள் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால் தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 6.21 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களுக்கான தேவைப்பாடு உள்ளது. ஆனால், இங்கு 5.69 கோடி டன்னுக்கு தான் உற்பத்தி உள்ளது. தமிழகத்தில் 51 லட்சம் எக்டர் நிலத்தில் 19 லட்சம் எக்டரில் தான் பயிர் செய்யப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாய தொழிலை விட்டு, வெளியேறி உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இந்தியாவில், 2.30 லட்சம் எக்டரில் 1.05 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, போதியளவிற்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்கு பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது. 118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருள்கள் விலையும், உயர்ந்து கொண்டே போகிறது.

மத்திய அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, அந்நிறுவனங்களே பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கியது. இதனால், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இழப்பு என்று கூறிக் கொள்ளும், இந்நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கலால், சுங்கம், பங்கு ஈவு தொகை மீதான மற்றும் சேவை வரிகள் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.இதே காலத்தில், மாநில அரசுகளுக்கு, மதிப்பு கூட்டு வரி (ஙஅகூ) மற்றும் "சர்ஜார்ஜ்' எனப்படும் கூடுதல் வரி முதலியவற்றின் மூலம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி ரூபாயை வழங்கியுள்ளன.

இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, 23 ஆயிரத்து 325 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், இந்நிறுவனங்களால் மத்திய அரசுக்கு 1லட்சத்து 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 72 ஆயிரத்து 89 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 288 கோடி ரூபாயை இந்நிறுவனங்கள், தங்கள் ஆண்டறிக்கையில் வருவாயாக காட்டியுள்ளன.

நாம் ஒவ்வொருவரும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது, மொத்த தொகையில் 50 சதவீத தொகையை வரியாக செலுத்துகிறோம். பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தாலே, உணவு பொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தலாம். "ஆன்-லைன்' எனப்படும் முன்பேர வர்த்தகத்தில், நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனங்கள், பொருள்களை கையில் வைக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத் தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தக சந்தைகள் வாயிலாக, மத்திய அரசுக்கு சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில், 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, 40 ரூபாய்க்கு விற்ற தனியா தற்போது 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்த போது, இதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து உணவு தானியங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக, தேவையில்லாத ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை, குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில், விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். சமீப காலமாக, அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், உணவு பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதற்கு சிறந்த உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்து போன நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இதன் உற்பத்தி அதிகரித்ததால், இதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, இதன் மீதான ஏற்றுமதி தடை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அரசு தெளிவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.இதுபோன்ற காரணங்களால் தான், உணவு பொருள்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதை செய்யக்கூடிய மத்திய அரசோ தனது கையில் மந்திரக்கோல் இல்லையே எனக் கவலை பட்டுக்கொண்டிருக்கிறது.இடதுசாரிகள் சொல்லுவதுபோல் பெட்ரொல் விலயைக்குறைத்தாலே பாதிவிலைவாசிகள் குறைந்து விடும். மேலும் பொருளை உற்பத்தியும் செய்யாமல், முதல் போட்டு வாங்காமலும் ஆன் லைன் மூலம் .கோடி,கோடியாக கொள்ளையடிக்கும் கும்பலை ஒழிக்கவேண்டும்
  அரசு அளிக்கும் வரிச்சலுகைகள் நுகர்வொரை சென்றடைகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.காரணம் அரசு எண்ணை விலைக்குறைய தள்ளுபடி செய்தவரிச்சலுகை எண்ணை உற்பதியாளர்களுக்கு மேலும் லாபமாக அமந்தது. விலைகள் குறைக்கப்படவே இல்லை.இதை கவனிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை. சலுகைகள் மக்களை சென்றடைந்தால்தானே விலைவாசி குறையும்.?
                                                                                                                     நன்றி;தினமலர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?