மத்திய அரசின் இரண்டாண்டு-ஒரு பார்வை

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு



  •                                           -சீத்தாராம் யெச்சூரிஎம்.பி.,
    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அர சாங்கம் ஈராண்டு நிறைவுபெற்றதை அடுத்து, அதை அனுசரிக்கும் விதத்தில் பிரதமரால் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சியும், அப்போது பிரதமர் உரை நிகழ்த்தி ‘மக்களுக்கு அறிக்கை’ ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது.

    இதுபோன்ற சமயங்களில் சம்பிரதாயரீதி யாகப் புகைப்படங்கள் எடுக்கப்படும். இப் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன், சென்ற ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட் டுப் பார்த்தோமானால், சில வித்தியாசங்கள் பளிச்செனத் தெரியும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தில் இல்லை. அதேபோன்று ஐ.மு.கூட்டணி யில் அங்கம் வகிக்கக்கூடிய லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சியினரும் காணப்படவில்லை. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுகவின் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப் பினருமான கனிமொழி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திமுகவின் அனைத்து அமைச்சர்க ளும் காணப்படவில்லை. டி.ஆர். பாலு மட்டும் திமுகவைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய வகையில் பெயரளவில் விருந்தில் கலந்து கொண்டார். அதேபோன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் - ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கத்தின்போது அங்கம் வகித்தவர்கள் - இப் போது காணப்படவில்லை. ஐ.மு.கூட்டணி1 அரசாங்கத்தில் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இப் போதும் ஆஜராகி இருந்தார்கள்.
    ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் தன்னிச் சையாக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தை நிறைவேற்ற முடிவு செய்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அந்த ஆட் சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நம்பிக் கைக் கோரும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எப்படி அது நடந்து கொண்டதோ அதேபோன்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இப்போதும் மிகவும் இழி வான முறையில் நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேரம் பேசி எப்படியோ தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணி ஆறாண்டு காலம் ஆட்சியிலி ருந்த காலத்தில் அரிக்கப்பட்டுக் கொண்டும் சிதைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும், நாட்டின் பொது அமைப்புகளின் மதச் சார்பற்ற ஜனநா யக உள்ளடக்கத்தையும் பாதுகாத்திட வேண் டும் என்பதன் தேவையை உணர்ந்துதான் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் அமைக்கப்பட் டது. அப்போது ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத் தின் சார்பில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள் ளப்பட்டது. “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யானது ஓர் ஊழலற்ற, வெளிப்படையான மற் றும் மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய தொரு அரசாங்கத்தை அளிப்பதற்கும், மக்க ளுக்கு மிகவும் பொறுப்புடனும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகை யிலும் நிர்வாகத்தை ஏற்படுத்திடவும் உறுதி எடுத்துக் கொள்கிறது,” என்பதே அந்த உறுதி மொழியாகும். மேலும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு அடிப் படையாக அமைந்த ஒரு குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தையும் அது ஏற்றுக் கொண்டது.
    ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கம் நிறைவேற்று வதாகக் கூறி எடுத்துக்கொண்ட உறுதிமொழி யையும், உள்ளடக்கத்தையும் ஐ.மு.கூட் டணி-2 அர சாங்கமானது இவ்வாறு திட்ட மிட்டமுறையில் இடித்துத் தள்ளிக்கொண்டி ருக்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை எவ்விதத் தங்குதடையு மின்றி அமல்படுத்த வேண்டும் என்பதற்காக வும், இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாக மாற்ற வேண் டும் என்பதற்காகவும், ‘‘ஆம் ஆத்மி’’ (சாமா னியர்களு)க்காகவே தாங்கள் இருக்கிறோம் என்ற பாசாங்கினைக் கூட அது கைவிடத் தொடங்கிவிட்டது.

    ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக்காலத்திலே யேகூட, ஆம் ஆத்மியின் நலன்களை முன் னேற்றுவதற்காக, அரசாங்கம் தான் அளித் திட்ட உறுதிமொழியையும், குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டத்தையும் படிப்படியாகக் கைவிடத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமல் லாமல், ஒருதலைப்பட்சமாக இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் கூறப்படாதவற்றையும் மேற்கொண்டது. இதன் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய கேந் திரக் கூட்டாளியாக சேர்ந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை இவ்வாறு நம்பிக் கைத் துரோகம் செய்ததன் மூலம், இடதுசாரிக் கட்சிகள் எதன் அடிப்படையில் அதற்கு ஆத ரவு அளித்து வந்ததோ, அதை அவர்கள் மறு தலித்ததன் காரணமாக, வேறு வழியின்றி தங் கள் ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டி வந்தது. அதேபோன்று, அரசாங்கம் தான் அளித்திட்ட உறுதிமொழிகள் அனைத்தை யும் கைவிட்டதை அனைவரும் பார்க்கத்தான் செய்தனர்.
    ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் கடந்த ஈராண்டு கால ஆட்சியில், நாட்டையும் நாட்டு மக்க ளையும் பீடித்திருக்கிற இரு முக்கிய கொள் ளைநோய்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வும், மாபெ ரும் ஊழல்களுமாகும். இவ்விரண்டு நோய்க ளும் நாட்டின் ரத்த நாளங்களையே கடுமை யாக அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமையில், பிரதமரின் உரை யில், விலைவாசி உயர்வின் காரணமாக மக் கள் படும் துன்பங்களைக் களைவது குறித்து சம்பிரதாயமான முறையில் கூட எதுவும் இல் லை. மாறாக, விலைவாசி உயர்வை நியாயப் படுத்தக்கூடிய விதத்தில், எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று விளக்கமளித்திருக்கிறார். விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திற னை அதிகரிக்க வேண்டியதன் அவசியத் தை அவர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவற் றை எவ்வாறு அரசு நிறைவேற்றப்போகிறது என்பது குறித்து எவ்வித உருப்படியான திட்ட மும் முன்வைக்கப்படவில்லை. இதுவரை யில், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு முக்கியமான காரண மாகவுள்ள, ஊக வர்த்தகத்தை தடை செய் திட அரசாங்கம் மறுத்து வருகிறது.

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் காமன் வெல்த் விளையாட்டுக்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மேம்போக்காகப் போகிற போக்கில் பிரதமர் குறிப்பிட்டிருந்தாலும், அவ ரது பேச்சின் தொனி மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு திருப்தி மனப்பான்மை இருப்பதைப் பார்க்க முடியும். எது தேவை என நினைத் தார்களோ அதனைச் செய்துவிட்டார்களாம். “சட்டம் தன் கடமையைச் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் நடைபெறா வண்ணம் தடுத்திடவும், அதிகாரிகள் தங்கள்இஷ்டத் திற்குச் செயல்படுவதைக் குறைத்திடவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன,” என்று கூறியிருக்கிறார். ஆயினும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெ னில், ஆட்சியாளர்கள், ஊழல்கள் மூலம் கொள்ளையடித்திட்ட பல லட்சம் கோடி ரூபாய்களையும் அவர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றி, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பயன்படுத்துவது தொடர்பானதாகும். இது குறித்து எதுவுமே கூறாது பிரதமர் அமைதி காத்திருக்கிறார்.

    பிரதமர், எதிர்பார்த்ததுபோலவே, கடந்த ஈராண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.5 விழுக்காடாக உயர்ந்திருப்பதை, ‘‘வரலாற்றுச் சாதனை’’ என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். ‘‘நாம் தேசிய அளவில் ‘உள்ளார்ந்த வளர்ச்சி’ (`inஉடரளiஎந பசடிறவா’), சர்வதேச அளவில் ‘உள் ளார்ந்த உலகமயம்’ (`inஉடரளiஎந படடியெடளையவiடிn’) என் னும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகி றோம். அதன் மூலம், இல்லாதவர்கள் பயன டைவார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாத வர்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு குறைந்திடும்,” என்று கூறியிருக்கிறார்.
    இதைவிடக் கொடூரமான ஜோக் வேறெது வும் இருக்க முடியாது. கடந்த ஈராண்டுகளில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 26 இலிருந்து 52ஆக உயர்ந்தது. தற்சமயம் மேலும் உயர்ந்து 69 ஆக மாறியிருக்கிறது. அவர்களின் ஒருங் கிணைந்த சொத்தின் மதிப்பு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) மூன் றில் ஒரு பங்காகும். அதே சமயத்தில் மறுபக் கத்தில், நம் நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர் அல்லது 80 கோடிக்கும் மேலான மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாது வாடிக்கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மிகவும் உள்ள ஏற்றத்தாழ்வு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டிருக்கிறதே யொழிய, பிரதமர் நம்மை நம்பச் சொல்வது போல் குறைந்திடவில்லை.

    பிரதமர் நாட்டின் எதிர்காலத்திற்காகக் காட்டிடும் வரைபடம் மிகவும் கவலை அளிக் கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. “நமக்கு உடனடிச் சவாலாக இருப்பதென்பது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடும் அதே சமயத்தில் வளர்ச் சிக்கான செயல்முறைகளையும் தக்க வைத் துக்கொள்ள வேண்டியநிலையில் நாம் இருப் பதுதான்,’’ என்று பிரதமர் கூறுகிறார். இவ் வாறு பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைப் பதற்கு, பிரதமர் பல்வேறு விதமான யோசனை களைச் சொல்லியிருக்கிறார். அதில் அவர் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுவது, நாட்டின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருமானம் குறித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண் டும் என்பதாகும். கடந்த ஈராண்டுகளில் அர சுக்கு வரவேண்டிய வருவாயைப் பெருக்கிட, அரசு மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் நம் பொருளாதார வளர்ச்சியைத் தேவையான அளவு நிலைநிறுத்திட உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ‘‘நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறையை’’க் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நட வடிக்கைகள் குறித்துத் தற்போது பேசுகிறார். இதன் பொருள் என்ன தெரியுமா? அரசாங்கம் வருவாயைப் பெருக்குவதற்கான வேலைக ளில் இறங்கும் அதே சமயத்தில், செலவினங் களைக் குறைப்பதற்கான வேலைகளிலும் இறங்கிட வேண்டும் என்பதேயாகும். அதா வது மக்கள் நலத்திட்டங்களுக்காக சமூக நலத் துறைகளுக்குத் தற்போது ஒதுக்கப் பட்டுவரும் அற்பத் தொகைகள்கூட மேலும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட இருக்கிறது என்பதேயாகும். இன்னும் சரி யாகச் சொல்வதென்றால், நாட்டின் பெருவாரி யான மக்கள் மீது மேலும் அதிகமான சுமை களைச் அரசு சுமத்த இருக்கிறது என்பதே இதன் பொருளாகும்.

    உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து உலக முதலாளித்துவம் எப்படித் தன்னைச் சரிப்படுத்திக்கொண்டதோ அதன் எதிரொலி தான் இது என்பது தெளிவு. பெருமுதலாளித் துவ நிதி நிறுவனங்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வதற் காக தங்கள் நாடுகளில் உள்ள அரசுகளிடமி ருந்து பொருளாதார ஊக்குவிப்புத் தொகை களைப் பெற்று, நெருக்கடியிலிருந்து வெளி வந்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் அர சாங்கங்களும் மிகப்பெரிய அளவில் நிதி களைக் கடனாகப் பெற்றன. இவ்வாறு பெற்ற கடன்களைச் சரிசெய்வதற்காக, தங்கள் செல வினங்களைக் குறைத்து, தங்கள் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி யிருக்கின்றன. முதலாளித்துவத்தின் குணம் என்னவெனில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்களைச் சரிப்படுத் திக் கொண்டு வெளியேற, தங்கள் திவால்தன் மையை அரசின் திவால்தன்மையாக மாற்றி டுவது என்பதுதான். ஒட்டுமொத்த விளைவு, மக்களின் மீது தாங்கொணா சுமைகள் விழும். இவ்வாறு தங்கள் மீது விழுந்த தாக்குதல் களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் முழுவதி லும் மக்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி யிருக்கின்றன.
    இத்தகைய நடைமுறைகளைத்தான் இந்தியாவிலும் கொண்டுவரப் போவதாக பிரதமர் நினைவுபடுத்தி இருக்கிறார். ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கத்தின் ஈராண்டு கால நிறைவு விழா, இவ்வாறு, மக்கள் கொண்டா டப்படக்கூடிய ஒன்றாக அமைந்திடவில் லை, மாறாக தங்கள் மீது மேலும் சுமைகள் விரைவில் விழப்போகின்றன என்று எச்சரிக் கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.

    அரசாங்கம் இவ்வாறு முன்கூட்டி எச் சரிக்கை செய்திருப்பது, மக்கள் இதற்கு எதி ராகப் போராடுவதற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. தங்கள் மீது அரசு ஏற்றப்போகிற சுமைகளுக்கு எதிராக மக்கள் திரள் நடத்த இருக்கும் மகத்தான போராட்டங் களின் வலிமைதான், மக்கள் இதுவரைப் பெற் றிருக்கின்ற உரிமைகளைப் பாதுகாத்திடு வதையும், சிறந்ததோர் வாழ்க்கைக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் பெரிய அளவில் தீர்மானித்திடும்.

                தமிழில்: ச.வீரமணி                                                                                         நன்றி:தீக்கதிர்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?