ஊத்தி மூடு,,,,,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் எழுந்த பிரச்னைக்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தீர்வு கண்டது. "நிதி அமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள், தன்னுடைய கருத்தை பிரதிபலிக்கவில்லை' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், தடுத்து நிறுத்தியிருக்கலாம்' என்ற குறிப்பை, கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இது, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதோடு, மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் உள்ளது போன்றும் செய்திகள் வெளியாகின. அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பிரணாப்பும், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்தக் குறிப்பு விவகாரம் தொடர்பாக, நியூயார்க்கில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திய இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில், காங்கிரஸ் தலைவர் சோனியா தீவிர ஆர்வம் காட்டினார். இதனால், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் இல்லத்தில், நேற்று மிக முக்கியமான ஆலோசனைகள் நடந்தன. டில்லி அரசியல் வட்டாரங்கள் அனைத்துமே, ஒரே இடத்தில் குவிந்ததுபோல இருந்த அந்த ஆலோசனைகளின் விளைவுகள் என்ன என்பது குறித்து அறிய, அனைத்துத் தரப்புமே ஆவலாய் இருந்தன. முற்பகலில் மட்டும், இரண்டு முக்கிய கூட்டங்கள் நடந்தன. காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை, ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சோனியாவுக்கு மிகவும் நம்பகமான அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், அகமது படேலும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவருடன், தீவிர ஆலோசனையில் சோனியா ஈடுபட்டார். அப்போது, நிதி அமைச்சகக் குறிப்பு வெளியானது உட்பட பல விஷயங்கள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் முடிந்ததும், 12.30 மணியளவில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கார், சோனியாவின் இல்லத்திற்குள் நுழைந்தது. ஏற்கனவே இருந்த அந்தோணி, அகமது படேல் ஆகியோருடன், பிரணாப்பும் இணைந்து கொள்ள, மீண்டும் இரண்டாம் கட்ட ஆலோசனை நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலையில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர், அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த சல்மான் குர்ஷித், "எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லை' எனக் கூறினார். இதன்பின், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும், மாலையில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்குச் சென்று, பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பது குறித்து, அவருடன் ஆலோசித்தனர். அப்போது, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பு குறித்து, இருவரும் தங்களது கருத்துக்களை, பிரதமரிடம் தெரிவித்தனர். மாலை 6 மணிக்கு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும், அப்போது பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும் தகவல் பரவியது.
ஆனால், அதற்கு முன்னதாக, தன் அலுவலகத்தில் இருந்து காரில் கிளம்பிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்துக்குச் சென்றார். இதையடுத்து, இருவரும் கூட்டாகச் சேர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரும் உடனிருந்தனர். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சிறிய அறிக்கையை, பிரணாப் முகர்ஜி வாசித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு ஜனவரியில் மீடியாக்களில் பல கதைகள் வெளிவந்தன. இந்த விவகாரம் குறித்து, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குறிப்பை, அதிகாரிகள் தரப்பு தயாரித்தது. நிதி அமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு நடவடிக்கை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அக்டோபர் 2003ல் பின்பற்றப்பட்ட கொள்கை தான், 2007-08லும் தொடரப்பட்டது. அந்த அடிப்படையில் தான், அதிகாரிகள் தங்களின் விளக்கங்களை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குறிப்பில், அனுமானமாகக் கூறப்பட்டுள்ளதும், அதில் உள்ள விளக்கங்களும் என்னுடைய கருத்தல்ல. இவ்வாறு, பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதன்பின் பேசிய சிதம்பரம், ""என்னுடைய சீனியரான பிரணாப் முகர்ஜி படித்த இந்த அறிக்கை, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள விஷயங்களை, முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது'' என்றார். பிரணாப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக டில்லியில் நடந்து வந்த பரபரப்பு அரசியல், தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "பிரச்னை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அவசரம் அவசரமாக இந்த அறிக்கையை காங்கிரஸ் மேலிடம் தயாரித்துள்ளது. இருந்தாலும், எதிர்க் கட்சிகள் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டு தான் இருக்கும். இந்தப் பிரச்னையால் ஏற்பட்டுள்ள பூகம்பம், இப்போதைக்கு முடிவுக்கு வராது' என்றன.
பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சர் : நிதி அமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு நடவடிக்கை. இந்த குறிப்பில், அனுமானமாகக் கூறப்பட்டுள்ள விஷயங்களும், விளக்கங்களும், என்னுடைய கருத்து அல்ல.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் : என்னுடைய சீனியரான பிரணாப் முகர்ஜி படித்த இந்த அறிக்கை, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது.
: "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், நிதி அமைச்சகத்தின் குறிப்பு வெளியானது தொடர்பாக, பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை வேடிக்கையாக உள்ளது' என, பா.ஜ., தெரிவித்துள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட குறிப்பு வெளியான விவகாரம், முடிவுக்கு வந்து விட்டதாக, நிதி அமைச்சரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று (நேற்று) பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை, வேடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில், இரண்டு அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னை முக்கியமானதல்ல. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்புக்கு, யார் பொறுப்பேற்பது என்பது தான் முக்கியம். பிரணாப் முகர்ஜியின் அறிக்கையால், மத்திய அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, மக்கள் இழந்து விடுவர். பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை ஏற்பதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அவருக்கு எதிரான சாட்சிகள் அதிகம் உள்ள நிலையில், இவ்வாறு அவர் கூறுவதை ஏற்க முடியாது. உடனடியாக, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், அவருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
[அ] சிங்கம் ?