வரப்போகும் சட்டம்.ஒரு பார்வை.
உணவுப் பாதுகாப்பு சட்டம்
கடந்த வாரத்தில் அமைச்சரவை கூடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை களைவது குறித்து விவாதித்தது. வறிய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வீணாய் கெட்டுப் போனாலும் போகலாமேயன்றி ஏழைகளுக்கு அதை வழங்க முடியாது என்று மண்மோகன் சிங் முழங்கியிருந்தார். அப்படியிருக்க திடீரென்று என்ன மாற்றம் எப்படி நேர்ந்தது? மாற்றமோ மாறுதலோ ஒன்றுமில்லை. மண் மோகன் ஏற்கனவே முழங்கியிருந்தது அரசின் கொள்கை நோக்கம், இப்போதைய சட்டவடிவம் மக்களை ஏமாற்றி அதை செயல்படுத்துவதற்கான உத்தி. அண்மையில் இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐநா அறிக்கை ஒன்றை தயாரித்தது. அதில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் தோராயமாக 23 கோடிக்கும் அதிகமானோர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழும் மரணங்களில் 33 நூற்றுமேனிக்கு பெரியவர்களும், 50 நூற்றுமேனிக்கு குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கின்றனர். மேலும், 6 கோடி குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்சியின்றியும், 2.5 கோடி குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றியும், 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றியும் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது, ‘வல்லரசு’ இந்தியாவின் நிலை ஆப்பிரிக்க கண்டத்தைவிட மிகவும் மோசம். ஒரு மாதத்திற்கு முன்னர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு தற்போது மறக்கப்பட்டுவிட்ட ஒரு செய்தி, வறுமைக்கோட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவு. நகர்ப்புறங்களில் 32 ரூபாயும், கிராமப்புறங்களில் 26 ரூபாயும் சம்பாதிக்க முடிந்தவர்களெல்லாம் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என்றார் திட்டக் கமிசன் துணைத்தலைவர் அலுவாலியா. எல்லா ஊடகங்களிலும் இது விமர்சிக்கப்பட்டது, விவாதிக்கப்பட்டது. எந்த மாற்றமும் வரவில்லை. ஏகாதிபத்திய நாடுகளால் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களும் உணவு தானியங்களுக்காக வழங்கப்படும் மானியங்களைக் குறைப்பது, ரேசன் கடைகளை நீக்குவது உள்ளிட்டவைகளை நோக்கமாக கொண்டிருக்கின்றன.
இந்த அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் தான் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐநா அறிக்கையை காரணமாக வைத்து நாட்டில் மக்கள் உணவுக்கு திண்டாடுகிறார்கள் எனவே அவர்களுக்கு உதவுகிறோம் என்று கூறிக்கொண்டு, வறுமைக்கோட்டை குறைத்து மதிப்பீடு செய்து கோடிக்கணக்கான மக்களை இலக்குக்கு வெளியே தள்ளிவிட்டு, மானியங்களை, ரேசன் கடைகளை ரத்து செய்யும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தை உருவாக்கி விட்டு மக்கள் எதிர்த்துவிடக் கூடாது என்பதற்காக உணவுப் பாதுகாப்பு என்று பெயரையும் வைத்திருக்கிறது அரசு. அனைவருக்குமான உணவுப்பாதுகாப்பு என்று டம்பமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் கூறப்பட்டிருக்கும் வரம்புகள் மக்களின் பட்டினியைப் பார்த்து கேலி செய்கிறது. 1. அந்தோதையா திட்டம், அன்னபூர்ணா திட்டம் போன்று தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உணவு வழங்கல் திட்டங்கள் அனைத்தும் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது நீக்கப்பட்டுவிடும். 2. திட்டக் கமிசனால் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் என்று கணக்கிடப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் உணவுப் பாதுகாப்பை வழங்கும். 3. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் போன்று தீவிரவாதத்தால்(!) பாதிக்கப்பட்ட அதாவது அரசை எதிர்க்கும் பகுதியிலிருக்கும் மக்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. 4. பொருளாதார நெருக்கடியில் அரசு இருக்கும் போது இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு தனக்குத்தானே வரம்பிட்டுக் கொண்டிருக்கும் இத்திட்டம் செய்யப்போவது என்ன? 1. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அக்குடும்பங்களுக்கு மாதம் தோறும் 25 கிலோ அரிசியோ, கோதுமையோ சலுகை விலையில் வழங்கப்படும். 2. இதற்கான செயல் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்து தீட்ட வேண்டும். 3. இதை உறுதிப்படுத்துவது குறித்தும், நிறைவேற்றத் தவறுபவர்களை தண்டிப்பது குறித்தும் வரைவுகள் ஏற்படுத்தப்படும். 4. உணவுக்குப் பதிலாக பணமாக கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இவைதான் வரவிருக்கும் உணவுப் பாதுகாப்பின் முதன்மையான அம்சங்கள். மேலோட்டமாக பார்க்கும் போதே தெரிகிறது, இதன் நோக்கம் ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு அல்ல என்பது. 2001ல் உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஒரு உத்திரவை அடுத்து பல மாநிலங்கள் குடும்ப வழங்கல் அட்டைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ வரை அரிசியோ கோதுமையோ வழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்னபூர்ணா, அந்தோதையா போன்ற திட்டங்களிலும் 35 கிலோ வரை அரிசியோ கோதுமையோ வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 20 கிலோ வரை அரிசி இலவசமாகவே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளையெல்லாம் ஒழித்துவிட்டு சலுகைவிலையில் மாதம் ஒன்றுக்கு 25 கிலோ வழங்குவது உணவுப் பாதுகாப்பா? இருப்பதையும் பறிப்பதா? மொழி தெரியா ஒரு வடமாநில தொழிலாளி சென்னையில் கட்டுமான வேலைகளுக்காக தினமும் போக்குவரத்திற்காக மட்டுமே பத்து ரூபாய்க்கு மேல் செலவழிக்க நேர்கிறது. ஒரு தேனீர் ஐந்து ரூபாய்க்குமேல் விற்கும் விலையில் ஒருவன் 36 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால் அவனை வறுமைக் கோட்டுக்கு மேலே வரம்பிடுகிறார்கள் என்றால், அதை அதிகாரிகளின் பார்வையில் ஏற்பட்ட வறுமை என்பதா? அல்லது பச்சை அயோக்கியத்தனம் என்பதா? வறுமை என்பது கிடைக்கும் ஊதியத்தில் மட்டும் இல்லை, உண்ணும் கலோரியிலும் இருக்கிறது. கடின உழைப்பு செய்பவர்களுக்கு அதிக கலோரிகளும் ஏனையவர்களுக்கு குறைந்த அளவு கலோரிகளும் தேவைப்படும். சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மனிதன் 2500 கலோரிகள் உட்கொண்டாக வேண்டும். இந்த அளவு கலோரி அவர்கள் உண்ணும் உணவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்பது சர்வதேச அளவீட்டு முறை. ஆனால் இந்திய அரசு இதை 1700 கலோரிகளாக நிர்ணயித்திருக்கிறது. இப்படி கலோரிகளைக் குறைப்பதும், வறுமைக்கோட்டு அளவை குறைவாக நிர்ணயிப்பதும் அறியாமையால் அல்ல, அயோக்கியத்தனத்தால். இப்படி குறைவாக நிர்ணயிப்பதால் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாக கணக்கு காட்டி அதன் மூலம் பலனாளிகளை குறைப்பதற்காகவே இது திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பல திட்டங்களின் மூலம் உணவு தானியங்களை பெற்றுக் கொண்டிருப்பவர்களை சதித்தனமாக வெளியேற்றி உணவு கிடைக்காமல் செய்வதற்கு உணவுப் பாதுகாப்பு என்று பெயர் சூட்டுவது சரியா? உணவுப் பறிப்பு என்று பெயர் சூட்டுவது சரியா? மேடைகள் தோறும், ஊடகங்கள் அனைத்திலும் வறுமையினாலும், முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் தான் மக்கள் தீவிரவாதங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், அந்தப் பகுதிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்று தான் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகளல்ல என்பதும், வறுமைக்கு பயந்து யாரும் தீவிரவாதிகள் ஆகிவிடுவதில்லை என்பதும் ஒருபுறமிருக்கட்டும், தற்போது தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்படாது என அரசு கூறுவதன் பொருள் என்ன? மக்களை மிரட்டுவது தான். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களின் கனிம வளங்களை தரகு பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக மக்களுக்கு எதிராக பசுமை வேட்டையை ஏவிவிட்டிருக்கிறது அரசு. தங்கள் வாழ்வாதாரங்கள் சூரையாடப்படுவதற்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவதை தீவிரவாதமாக சித்தரித்து வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக போராடினால் அந்தப் பகுதிகளில் எந்த அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் மக்கள் பட்டினியில் சாக விடப்படுவார்கள் என்று மிரட்டி எச்சரிப்பதைத் தாண்டி இதற்கு வேறு என்ன பொருள் இருந்துவிட முடியும்? அறைகுறையாக அந்த மக்கள் பெற்றுவறும் உணவையும் பறிப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்கும் போது அதற்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்று பெயரிடுவது எப்படி பொருந்தும்? ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு வந்து தொழில் தொடங்கும் போதும் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, நேரடி வாய்ப்பு மறைமுக வாய்ப்பு என்று அரசு அந்த நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாத விளம்பரதாரராக செயல்படுகிறது. இதுவரை தொடங்கிய நிறுவனங்களையும், அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் வேலையில்லாமல் யாரும் இருக்கமுடியாது எனும் அளவுக்கு அறிவிப்புகள் வந்திருக்கின்றன. இந்த வேலைவாய்ப்புகளை காரணம் காட்டித்தான் அரசுகள் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளையும், வரிவிலக்குகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இப்படி வழங்கப்படும் சலுகைகளையும் விலக்குகளையும் பொருளாதார நெருக்கடி என்று எந்த அரசும் எந்த பொழுதிலும் நிருத்தியதாகவோ குறைத்ததாகவோ வரலாறு இல்லை. லட்சக்கணக்கான கோடிகளை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தே கொட்டிக் கொடுக்கும் அரசு, ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்கு பொருளாதார நெருக்கடி வந்தால் நிறுத்திவிடுவோம் வரைவில் இருக்கும் போதே விதி ஏற்படுத்துவது எந்த அளவுக்கு கொடுமையானது? கொடூரமானது? அரசின் நோக்கத்திற்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்? இருபத்தைந்தாயிரம் பேர் மரணமடைந்தும், லட்சக் கணக்கானோர் பாதிப்படையவும் செய்த போபால் நச்சுக்கசிவு கொடுமையில் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை.
பெரும் அணைக்கட்டு திட்டங்களுக்காக தங்கள் வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் இழப்பீடுகளுக்காக இன்னமும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசு 25 கிலோவுக்கு பதில் பணம் கொடுப்பது குறித்து ஆலோசிப்பது மக்களுக்கு உணவு வழங்கலில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக அல்ல. இதன்பின்னே பெரும் சதித்திட்டமே மறைந்து கிடக்கிறது. ரேசன் கடைகள் மூலம் அரிசியோ கோதுமையோ மக்களுக்கு வழங்க வேண்டுமென்றால் விவசாயிகளிடமிருந்து அரசு பெருமளவில் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக அரசு நேரடியாக கொள்முதல் செய்வதிலிருந்து படிப்படியாக விலகி வருகிறது. மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருப்பதோடு, அவ்வாறு கொள்முதல் செய்வதற்கு வசதியாக கடைக்கோடி கிராமம் வரை சாலை வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உணவுக்குப் பதிலாக பணமாக கொடுப்பது என்பது கொள்முதலை முற்றாக கைவிடுவதும், ரேசன் கடைகளை மூடுவதுமே அரசின் நோக்கம் என்பதின் வெளிப்பாடு தான். மெய்யாகவே அரசு மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் எண்ணமிருந்தால் அது என்ன செய்திருக்க வேண்டும்? விவசாய நாடான இந்தியாவில் உணவு உற்பத்தியில் போதுமான இலக்கை எட்ட அனைத்து விதங்களிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் பல பத்தாண்டுகளாக அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது என்பது வெளிப்படை. நீர்நிலைகளை பராமரிக்க மறுத்தது, உர நிறுவனங்களை கொழுக்க வைப்பதற்காக வேதிஉரங்களை விளைநிலங்களில் கொட்டி நிலத்தை மலடாக்கியது, பணப்பயிர் திட்டங்களை ஊக்குவித்ததன் மூலம் உணவு தானிய உற்பத்தியிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியது
, மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருந்தும் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கண்டு கொள்ளாமல் விட்டது, விவசாயிகளுக்குத் தெரியாமல் மரபணு மாற்ற திட்டங்களை புகுத்தியது, விதை நெல்லுக்கும் அன்னிய நிறுவங்களிடம் கையேந்தும் அவல நிலைக்கு விவசாயிகளை கொண்டு வந்தது, விளைபொருளுக்கு உரிய விலை தராமலும், விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிக்கு தராமல் மறுத்ததும், வர்த்தகச் சூதாடிகளை அனுமதித்து விவசாயிகளை கருவறுத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக பசுமைப்புரட்சி எனும் புரட்டுத்திட்டம் என்று விவசாயத்திற்கு எதிராக இந்திய அரசின் நடவடிக்கைகளை கூறிக் கொண்டே போகலாம். விவசாயத்தை ஒழித்துவிட்டு அரசு எப்படி மக்களுக்கு உணவு வழங்கும்? அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஒவ்வொரு அசைவிலும் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் லாபத்தையும், அவர்களது வளர்ச்சியையும் தவிர வேறு எந்த விதமக்கள் நல்வாழ்வுக்கானஎண்ணமும் இல்லை என்பதுதான் தற்போதைய காங்கிரசு அரசின் கொள்கையாக உள்ளது.
Top 10 most polluted cities in the world | Artsy Spot
undefined