வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

2-ஜி உச்ச தீர்ப்பு?

 மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட"2ஜி அலைக்கற்றை' 122உரிமங்களை உச்ச நீதிமன்றம் நீக்கம்செய்து் ஆணையிட்டுள்ளது.
  2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டில் பயனடைந்து, அதன் பிறகு விதிகளை மீறி பங்குகளை விற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 வீடியோகான், ஸ்வான், அலையன்ஸ் இன்ஃபராடெக் நிறுவனங்களுக்கு தலா ரூ. 4 கோடி, எடிசலாட், டாடா டெலிகாம், யூனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 கோடி, லூப், எஸ்ஸôர், எஸ்-டெல், சிஸ்டெமா ஷாம் நிறுவனங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 இந்த அபராதத் தொகையில் 50 சதவீதத்தை உச்ச நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவிலும், மீதித் தொகையை பிரதமரின் பொது நிவாரண நிதியிலும் செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 "2ஜி அலைக்கற்றைக்கான உரிமங்கள் ஏல முறையில்தான் ஒதுக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறை குறித்த புதிய பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தர வேண்டும். அதையடுத்து ஒரு மாதத்தில் அதன் மீது மத்திய அரசு முடிவு எடுக்கவேண்டும். மொத்தத்தில், இன்றைய தேதியிலிருந்து நான்கு மாதத்துக்குப் பிறகு உரிம ரத்து அமலுக்கு வரும்' என உத்தரவிட்டுள்ளது.
  தீர்ப்பில் : இந்த விஷயத்தில், மத்திய அரசு பின்பற்றிய "முதலாவதாக வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு' என்ற முறை கண்டனம் செய்யப்படக் கூடியது. இது முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கு முரணானதும், பொது நலனுக்கு எதிரானதுமாகும்.


 தேசத்தின் மிக முக்கியமான பொதுச்சொத்தை, மிகக் குறைவான விலைக்கு ராசா ஒதுக்கீடு செய்துள்ளார். தேசத்தின் பொதுச்சொத்துக்கள் பொது நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேணடுமே தவிர, சில தனியார் நிறுவனங்களுக்காக அல்ல.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்பட்டிருந்தால், அதன் மூலம் நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.
 இந்த விஷயத்தில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு முரணான வகையில் உள்ளன. முறையற்ற வகையில் அலைக்கற்றை ஓதுக்கீடு செய்வதற்கு, அந்தப் பரிந்துரைகள் ராசாவுக்கு வசதியாக அமைந்துள்ளன.
 இந்தத் துறையில் அனுபவமில்லாத சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் நோக்கில், அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை அக்டோபர் 1, 2007-லிருந்து அந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதிக்குஅமைச்சர் தன்னிச்சையாக மாற்றியுள்ளார். சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த ஓதுக்கீடு நடைபெற்றுள்ளது. 1999-ம் ஆண்டின் தேசிய தொலைதொடர்புக் கொள்கையின் நோக்கங்கள் மீறப்பட்டுள்ளன.
 அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. சமூக அக்கறையுள்ள சில குடிமக்களின் முயற்சி காரணமாக இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாவிட்டால், அலைக்கற்றை என்ற பொது சொத்து, பணபலம் வாய்ந்தவர்களின் கைகளுக்குச் சென்றிருக்கும் .


  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையைக் கண்காணிப்பது தொடர்பான மனுவின் கோரிக்கை பற்றி மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணை விவரத்தைக் கண்காணிப்பு ஆணையத்திடம் சிபிஐ உடனடியாக அளிக்க வேண்டும்.
 "2ஜி வழக்கு விசாரணையை சிபிஐ நேர்மையாக விசாரிக்கவில்லை என்பதால் அதன் விசாரணையைக் கண்காணிக்க தன்னிச்சையான அமைப்பை நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் பொதுநல வழக்காடு மையம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இவரும் சுப்பிரமணியன் சுவாமியும் சேர்ந்து 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வழங்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மூன்று வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்து
தீர்ப்புவழங்கப்பட்டது.


 உரிமம் நீக்கம் செய்யப்ப்பட்டவர்கள்.
 யூனிடெக் (இந்தியா முழுவதும்) 22
 லூப் டெலிகாம் (மும்பை தவிர்த்த அனைத்து நகரங்கள்) 21
 சிஸ்டெமா (ராஜஸ்தான் தவிர்த்த பிற மாநிலங்கள்) 21
 டாடா டெலிகாம் (அசாம், ஜம்மு காஷ்மீர்,
 வடகிழக்கு மாநிலங்கள்) 3
 எடிசலாட் டிபி (பிகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரம்,
 தில்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகம், கேரளம்,
 ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு,
 உத்தரப் பிரதேசம் கிழக்கு, உத்தரப் பிரதேசம் மேற்கு) 15
 எஸ்-டெல் (அசாம், வடகிழக்கு மாநிலங்கள், பிகார்,
 ஒடிசா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) 6
 வீடியோகான் (பஞ்சாப் தவிர்த்த அனைத்து மாநிலங்கள்) 21
 ஐடியா (அசாம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், மேற்கு வங்கம், கொல்கத்தா வட்டம், வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா,
 பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்) 9
 ஸ்பைஸ் - ஐடியா (ஆந்திரப் பிரதேசம், தில்லி,
 ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள்) 4
 ------------------------------------------------------------------------------------


சிதம்பர ரகசியம் மாட்டும் இன்னமும் வெளியாக மறுக்கிறது.
 அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காகக் கட்டணம் நிர்ணயித்த விவகாரத்தில் ராசா தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்க முடியாது. அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் இதில் சமமான பங்கு உள்ளது. அதனால் சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது கருத்து தெரிவித்தஉச்ச நீதிமன்றம் 
 "சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பதை விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம். இது தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் கூறிவிட்டது.ஆக தற்போது அமைச்சர் ப.சிதம்பரம் சின்ன இடைவெளியில் தப்ப்பியுள்ளார்.
விசாரணை நீதிமன்றம் என்ன கூறிவிடப்போகிறது?
ஆனால் இத்தனை விவகாரத்திலும் மவுன குருவாக -சாட்சியாக இருக்கும் பிரதமர் ம்ன்மோகன் மட்டும் தப்பியுள்ளார்.அவரை உச்ச நீதிமன்றம் கண்டிக்காமல் ,அவரை மீறி ராசா செயல்பட்டதாக தெரிவித்துள்ளதுதான் 
நிரடுகிறது.
அவர் கடிதத்தைக்கண்டுகொள்ளாமல் ராசா செயல் பட்டால் அதை ஏன் அவர் தடுக்கவில்லை வாய்மூடி இருந்தார்.அவருக்கு அதிகாரம் இல்லையா?அல்லது வாயை யார் மூட வைத்தார்கள்?இதை உச்ச நீதிமன்றம் கவனித்திருக்கலாம்.குறைந்த பட்சம் தனது கண்டனத்தையாவது தெரிவித்திருக்கலாம் அல்லவா?
அது கிடக்கட்டும் இந்த 122 நிறுவன உரிமம் நீக்கத்தால் அந்நிறுவன சேவையை பயன் படுத்தும் வாடிக்கையாளடர்கள் பாதிப்படைவார்களா?அது பற்றி  மத்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஜே.எஸ்.சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தி வரும், மொத்த வாடிக்கையாளர்களில், 95 சதவீதம் பேர், 2008 ஜனவரிக்கு முன், உரிமம் பெற்ற ஆபரேட்டர்களின் சேவைகளுக்கு கீழ் உள்ளவர்கள். 2008 ஜனவரிக்கு பின், பெறப்பட்ட உரிமங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தவிரவும், இதற்கான நடைமுறைகளை உருவாக்க, நான்கு மாத அவகாசம் இருக்கிறது.
தவிர, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், விளம்பரம் வெளியிடும்படியும், சம்பந்தபட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம்.என்று கூறியுள்ளார்.
பேசாம எல்லோரும் பி.எஸ்.என்.எல் லுக்கு மாறிடுவோம்.இது போன்ற நேரத்தில் அதுதான் நல்லது.