கை பேசியால் உண்டான விபரீதமா?
சென்னைஅண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று.கருணாநிதி கட்டியது.அதனால் ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது.
நேற்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.
பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிகிறது.
இந்த விபத்தின் போது பேருந்து ஓட்டுநருக்கு கைப்பேசியில் அழைப்பு வந்ததாகவும்,அவர் அதை எடுத்துக்கொண்டே ஓட்டியதால் சரியாக வளைவில் திருப்ப இயலாமல் விபத்து ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
அப்படி நடந்திருந்தால் அந்த ஓட்டுநர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களில் செல்லும் போது கைப்பேசியில் பேசக்கூடாது.அதிலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசியை உடன் கொண்டு செல்லக்கூடாது என்றெல்லாம் இருக்கும் போது இவர் கொண்டு சென்றதுடன் பேசவும் முற்பட்டு இவவளவு பெரிய விபத்தை ஏற்படுத்தியதுக்கு கொலை முயற்சி,கொலைக்கு திட்டமிடல் போன்ற வழக்குகளின் பிரிவுகளில்தான் இவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அதுதான் மற்ற ஓட்டுநர்களுக்கும் பாடம் கற்றுத்தரும்.
ஒருவர் பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும் அதனால் விபத்து உண்டாகியிருக்கலாம் .என எழுதியிருக்கிறார்.வேடிக்கையானது. ஆடத்தெரியாதவர்கள் மட்டுமின்றி -வாகனம் ஓட்டத்தெரியாதவர்களும் தெருவை கோணம்-பாலம் கோணம் என்று ஆரம்பிப்பது சரியா?
எற்கனவே அது கருணாநிதி கட்டிய பாலம் இந்த விபத்துக்கு அதை கட்டிய அவர்தானே மூலக் காரணம்.அவர் சிறை நிரப்பும் முன் அவரை பிடித்து உள்ளே போட அம்மாவிடம் சொல்லுங்கள்.