ஜாடிக்குள் வரலாறை மறைக்காதீர்கள்...

இன்று காமராசர் பிறந்த நாள்.
எனக்கு காமராசரை ரொம்ப பிடிக்கும்.ஆனால் அது அவர் உயிருடன் இருக்கும் வரை இல்லை.அதாவது பிடிக்காட தலைவராகவே இருந்தார்.அப்போது திமுக -எம்ஜிஆர் என்று தமிழகம் பித்தாக இருந்த நேரம்.காமராசர் கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளேன்.
எனக்கு பிடித்த எம்ஜிஆருக்கு நேர் எதிரான தோல் வண்ணம்.ஆனாலும் அவரது வாட்டசாட்டமான தொற்றமும் அவரது நேரில் நம்முடன் பேசுவது போன்ற மேடை பேச்சும் என்னைக் கவரவே செய்தது.
அவரிடம் இயற்கையிலேயே தலைமைக்குரிய கவர்ச்சி இருந்ததை கவனித்தேன்.

இவை எல்லாம் இருந்தாலும் அவர் எம்ஜிஆருக்கு எதிராக அரசியல் செய்பவர் என்ற அன்றைய பாமர மன நிலையில் என்னவோ அவரை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
ஆனால் அவரை இழந்த பின்னர்.
தற்செயலாக நூலகத்தில் கிடைத்த காமராசர் வாழ்க்கை விபர நூல் ஒன்றின்மூலம்தான் அவரின் பெருமை,தியாக உணர்வு,அரசியல் நாகரிகம்,மக்கள் நல எண்ணங்கள்-திட்டங்கள் பற்றி  அறிந்து கொண்டேன்.அதுவரை அவரை எதிர் கட்சிக்காரராக மட்டும் எண்ணிய எண்ணம் சொல்லிக்கொள்ளாமல் ஒடிப்போனது.
உயிருடன் இருக்கும் வரை ஒரு நல்ல தலைவரை உணராமல்-மதிக்காமல் போன குற்ற உணர்வு வாட்டியது.

இன்று மதிய உணவு நான் கொண்டுவந்தேன் என்று பலர் சொல்லிக்கொண்டு திரிந்தாலும் அன்று ஏழை சிறார்கள் பள்ளி பக்கம் வராமல் இருக்க அவர்களின் ஏழ்மைதான் காரணம் என்றறிந்து அன்றே தொலைநோக்குடன் மதியம் உணவை பள்ளியில் அளித்ததன் மூலம் ஏழை வீட்டு குழந்தைகளும் கல்வி பெற வைத்தவர் காமராசர்.
விடுதலைப்பெற்ற இந்தியாவில் செய்ய வேண்டிய கட்டுமானப்பணிகளை விரைவாக செய்து முடிக்க முக்கிய காரணம் காமராசர்தான்.
சென்னை ரிசர்வ் வங்கி அருகே பாலம் கட்ட ஏகப்பட்ட தடைகளை கூறி கட்ட முடியாது என்றவர்களை.பொறியாளர் என்றால் தடைகளை எப்படி நீக்கி கட்டுவது என்றுதான் பார்க்க வேண்டும்.சாக்கு சொல்லி கட்டுவதை நிறுத்தக்கூடாது என்று கூறி கட்டவைத்தவர் என்பார்கள்.

முதல்வர் காமராசராக இருந்த போது விருது நகரில் தனது வயதான தாயார் குடி இருந்த வீட்டருகே தெருகுடிநீர் குழாயை வைத்த அதைகாரிகளை கடிந்து குழாயை தெருமுனைக்கு மாற்றியவர் அவர்.
தனது தாயார் செலவுக்கு பணம் கொஞ்சம் கூட அனுப்பிவைக்க கூறியதற்கு 
"உன் மகன் சம்பளம் இவ்வளவுதான் .அதற்குள் குடுமபம் நடத்தப்பார்"-என்றாராம்.
இன்று வம்சம் -வம்சமாக உட்கார்ந்து அனுபவிக்கும் அளவுக்கு சொத்தில்லாத அரசியல்வாதிகள் யார் இருக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு குற்ற சாட்டில்லாத அமைச்சர்கள் ஒருவரை இன்று காணமுடியாதே?

முதல்வர்கள்-அமைச்சர்களை விடுங்கள்.
சாதாரண மாநகராட்சி உறுப்பினராகி மூன்றாம் மாதமே ஸ்கார்பியோவில் வலம் வரும் அன்றாடங்காட்சிஅரசியல்வாதிகளை அன்றாடம் பார்க்கிறோம்.
மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர் காமராசர்.
ஆனால் அவர் இறக்கும் போது சில கதர் வேட்டி-சட்டைகளும் கையிருப்பாக ரூ100/-தான் வைத்திருந்தார் என்பது ஒரு உண்மையான செய்தி.
இப்போது என்ன இவர் இப்படியா அப்பாவியாக ,பிழைக்கத்தெரியாதவராக இருப்பார் என்றுதான் என்னம் வந்தது,
இன்று ச.ம.உறுப்பினர் சம்பளம் 50000/-மேல் வருகிறது.ஆனால் காமராசர் காலத்தில் ச.ம.உறுப்பினர் சம்பளம் மிக குறைவு.அதை சிலர் உயர்த்தலாமே என்ற போது'நாமெல்லாம் மக்களுக்கு சீவை செய்யுறோம் என்றுதானே அரசியலில் ஓட்டு வாங்கி வந்தோம்.சேவைக்கு சம்பளம் கேட்பது அயோகியத்தனம்னேன்.'
என்றாராம்.முதல்வர் காமராசர்.

ஆனால் இன்றோ சேவைக்கெல்லாம் வரி போடும் ஆட்சி அல்லவா இருக்கிறது'
ஆனாலும் காங்கிரசிலும் காமராசர் போன்ற உத்தம தலைவர்களுக்கு மரியாதை இல்லை. எதிரான போக்கே இருந்தது.அதனால்தானே ஸ்தாபன காங்கிரசு வந்தது.அவரும் அரசியலில் கிட்டதட்ட ஒதுங்கிய போக்கில் இருந்து விட்டார்.
இதை எல்லாம் விட இப்போதைய நிலை என்னை சற்று,சற்று என்ன ரொம்பவே வேதனை அடைய செய்கிறது.
அது இந்திய அளவில் கிங் மேக்கர்'என்ற பெயர் பெற்ற காமராசரை ஒரு சாதியின் அடையாளமாக-சாதீய தலைவராக குண்டு சட்டிக்குள் அடைக்கும் போக்குத்தான்.

சாதியை முன்னிலைப்படுத்தி அவருக்கு புகழ் மாலை சூட்டுவதும்,விழா கொண்டாடுவதும் சரியாகன செயல்கள் அல்ல.
காமராசர் தனது ஆட்சிக்காலத்தில் சாதி பார்த்து செயல் பட்டவர் அல்ல.சொல்லப்போனால் அவர் சேவை எல்லாம் ஏழைகளுக்கும் -இந்த நாட்டுக்கும்தான் .அவர் இந்தியாவின் தலைவர்களில் ஒருவர்.தமிழ்நாட்டின் தானைத்தலைவர் அவரை சாதி ஜாடிக்குள் போட்டு பூட்டி மறைத்து விடாதீர்கள்.
ஆனால் இன்று அவரை காங்கிரசார் கொண்டாடுவதில்லை.அவர்கள் குழு சண்டைக்கே நேரம் இல்லை.
சாதியினர்தான் பிறந்த நாளையே கொண்டாடுகிறார்கள்.அதுவும் ஒரு வேதனை தருவதுதான்.ஆனாலும் சாதி அடையாளம் மட்டுமின்றி கொண்டாடுங்கள்.

வ.உ.சிதம்பரனார்,முத்துராமலிங்கம் போன்றோர் அரசியலில் இருந்தாலும் இன்று அவர்கள் சார்ந்த சாதியினரால் குரு பூசை மட்டும் கொண்டாடப்படும்
அளவில் குறுகிப்போய் விட்டார்கள்.அதே நிலை காமராசருக்கும் வந்து கொண்டிருக்கிறது.

முத்துராமலிங்கத் தேவராவது தனது சாதிய அடையாளத்தையும் அரசியலில்தூக்கிப்பிடித்தார்.தனது சாதி சார்ந்தவர்கள் நலனுக்காக அதிகமாக உழைத்தார்.
ஆனால் வ.உ.சி,யும்,காமராசரும் இந்த நாட்டு விடுதலைக்காகவும்-மக்களுக்காகவும்  மட்டுமே உழைத்தவர்கள்.

வ.உ.சி. அரசியலிலும்-பொது வாழ்வை விட்டும் சிலரால் அதுவும் காங்கிரசாராலேயே போக்கடிக்கப்பட்ட துயரத்துக்கு ஆளானவர்.

ஆனால் காமராசர் அரசியலில் தவிர்க்க முடியாதவராகவே  மாறி  வாழ்ந்து மறைந்தவர்.

அவரை ஒரு தமிழக-இந்திய தலைவராகவே கொண்டாடுவோம்.காங்கிரசார் மறந்து போயிருந்தாலும் கூட.
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?