வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஈமு கோழி பறக்கிறது?


 எந்த நேரம் ஈமு கோழி பற்றி செய்தி வெளியிட்டோமோஇப்போது ஈமு விவகாரம் வெளியே வந்து விட்டது.
 கோபெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனத்தில் முதலீடு செய்த விவசாயிகள், பணத்தை திரும்பக் கேட்டு முற்றுகையிட்டுள்ளனர்.பெருந்துறையில், குரு என்பவருக்குச் சொந்தமான, "சுசி' ஈமு கோழி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, 

ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஈமு கோழிப் பண்ணை அமைத்துள்ளனர். முதலீடுக்கு ஏற்ப, ஈமு கோழி, தீவனம், கோழி வளர்க்க பந்தல் ஆகியவற்றை,இந்நிறுவனம் வழங்கியது.
முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை, நிறுவனமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. கோழி பராமரிப்பு செலவுக்கு, மாதம், ஒரு தொகையை விவசாயிகளுக்கு, நிறுவனம் வழங்கியது. ஆண்டுக்கு ஒரு முறை, போனசும் வழங்கியது. 
வழக்கம் போல் கடந்த மாதத்துக்கான பணம் சுசி வழங்கவில்லை.இதனால் இந்நிறுவனத்தை விவசாயிகள் அணுகினர். தங்களுக்கு பண்ணை வேண்டாம்; முதலீடு தொகையை திரும்பி வழங்குமாறு கேட்டனர். இத்தகவல் பரவி, ஏராளமானோர் குவிந்தனர். அனைவரும் பணத்தை திருப்பிக் கேட்டதால், நிறுவனத்தால் பணத்தை வழங்க முடியவில்லை.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் போலீசார், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறினர். தாராபுரம், மணக்கடவை சேர்ந்த சின்னசாமி, "பண்ணை அமைக்க, மூன்று லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளேன். அதை திரும்ப வாங்கித் தர வேண்டும்' என, புகார் அளித்தார். இதனால், பெருந்துறை போலீசார், கூட்டுச் சதி, திட்டமிட்டு மோசடி செய்தல் ஆகிய, இரு பிரிவுகளில், 8 பேர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
நிறுவனத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. "நிறுவன உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின், பணம் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறியதை அடுத்து, வெளியூர் விவசாயிகள் கலைந்து சென்றனர். உள்ளூர் விவசாயிகள் மட்டும் மூன்று நாட்களாக நிறுவனத்துக்கு வந்து, விசாரித்து செல்கின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் கூறியதாவது: இந்நிறுவனத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு, ஒப்பந்த பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், மூன்று மாதமாக நெருக்கடியில் சிக்கியுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவில்லை.விசாரணையில், 75 ஆயிரம் ஈமு கோழிகள் இந்நிறுவனத்தில் இருப்பது தெரிய வருகிறது. இந்நிறுவனத்தின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. பண்ணைகளில் உள்ள கோழிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு கணேஷ் கூறினார்.

இதற்கிடையே, நேற்றும் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் இந்நிறுவனத்துக்கு வந்தபடி இருந்தனர். அங்கு இருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 
மோசடி செய்யும் எண்ணம் சுசிக்கு இல்லாவிட்டாலும் கூட அனைவரும் ஒட்டு மொத்தமாக வந்து பணத்தை திருப்பித் தா என்றால் அது முடிகிற காரியமா?
நம் மக்கள் பணத்தை கட்டுவதிலும் மொத்தமாக குவிவார்கள் .அது நடமுறைக்கு சாத்தியமா என்றெல்லாம் பார்ப்பதில்லை.25%வட்டி ,30%போனஸ்,அது போக கட்டிய பணம் 10 மாதத்தில் இரட்டிப்பு,அப்போது ஒரு4பவுனில் தங்க  ஒட்டியாணம் இலவசம் என்றால் என்ன யாது என்று விசாரிப்பதோ-யோசிப்பதோ கிடையாது.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு தெரியாமல் கட்டிவிட்டு வருவார்கள்.
அதே போல் அந்த நிறுவனம் பற்றி பயம் வந்து விட்டால் ஒட்டு மொத்தமாக போய் பணத்தை திருப்பிக் கேட்பார்கள்.
அதனால் அவன் கதவை மூடி தலை மறைவாக விடுகிறான்.
தவறு மோசடி நிறுவனங்கள் மீது அல்ல.பணத்தை வைத்துக் கொண்டு ஏமாறத்தயார் என்று குறைவான நாட்களில் பணத்தை குவிக்கும் திட்டத்துடன் உள்ள மக்களிடம் தவறு உள்ளது.
இது ஈமு கோழியில் இருந்து முட்டை வந்ததா-முட்டையில் இருந்து ஈமு கோழி வந்ததா கதைதான்,