உடனே தூக்கிலிடுங்கள்-1,372 கடிதங்கள்

கசாப்பை உடனே தூக்கிலிடுங்கள்' என, வலியுறுத்தி சமூக சேவகர் ஒருவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனாதிபதிக்கு ஒருநாள் விடாமல், கடிதங்கள் எழுதி வருகிறார். மும்பையில், 2008, நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து, கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய, இந்த பயங்கரவாதிகளில் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல் லப்பட்டனர். 
அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான்.மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு, அதே சிறையில், அமைக்கப்பட்ட சிறப்புக் கோர்ட், மரண தண்டனை விதித்தது. அந்த மரண தண்டனையை, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கசாப், கருணை மனு அனுப்பியுள்ளான்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தன் நெருங்கிய நண்பரை பறிகொடுத்த, சமூக சேவகர் நாராயண் பாட்டீல் என்பவர், "பயங்கரவாதி கசாப்பிற்கு உடனே தண்டனை கிடைக்கும்' என, நம்பினார். நாட்கள்தான் உருண்டோடின. ஆனாலும், எதுவும் நடக்கவில்லை.

மனம் வெறுத்துப் போன நாராயண், 2008, டிசம்பரில் இருந்து, கசாப்பை தூக்கிலிட வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மகாராஷ்டிரா மாநில முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தினமும், கடிதங்கள் எழுதி வருகிறார். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, நாராயணன் கடிதம் எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் இல்லை.

மனம் நொந்த நிலையில், நாராயண் கூறியதாவது: சம்பவத்தன்று, மும்பை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில், என் நண்பரை, விட்டு விட்டு, நான் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், பயங்கரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில், என் நண்பர் பலியானார். என்னைப் போலவே, பலர் தங்களின் உற்றார் உறவினரை இழந்து தவிக்கின்றனர்.கசாப்பை உடனே தூக்கிலிடக் கோரி, நான்கு ஆண்டாக, ஜனாதிபதி, பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி வருகிறேன். அந்தக் கடிதங்களில், மகாராஷ்டிராவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். இதுவரை, 1,372 கடிதங்களை எழுதி உள்ளேன். ஆனாலும், தக்க தீர்வு கிடைக்கவில்லை.


"கசாப்பை தூக்கிலிடும் வரை, எந்த பண்டிகையையும் கொண்டாடக் கூடாது' என்ற வைராக்கியத்துடன், காலம் கழித்து வருகிறேன். கசாப்பையும், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய, அப்சல் குருவையும், ஒரே மாதிரியாக நடத்துவது தவறு.கசாப் செய்தது அட்டூழியம். அவனை நாளை தூக்கிலிடலாம் என்றால், அதை, ஏன் இன்றே செய்யக் கூடாது?இவ்வாறு நாராயண் துயரத்துடன் கூறினார்.

தினமலர் செய்தி
_____________________________________________________________________________________________________________________________________





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?