கட்சியும் இழப்புகளும்,
அன்னா கசாரே கெஜ்ரிவாலை கழட்டி விட்டு விட்டார்.கட்சி தொடங்கி ஆட்சி பிடித்து ஊழலை ஒழிக்கும் யோசனை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார்.
இதனால் கெஜ்ரிவால் அதிகம் பாதிக்கப் பட்டு விட்டார்.
அவரின் கட்சி,கொடி ,வாகன பேரணி அதை விட அமைச்சர் கனவு எல்லாம் அன்னாவால் கெட்டு குட்டிசுவராகப் போய் விட்டது.
அவர் கூடங்குளம்வரை வந்து அரசியல் செய்ததும் வீணாகிவிடுமோ?
ஆனால் கெஜ்ரிவால் அரசியல் ஆசை இன்னமும் அதிகமாகியுள்ளதே தவிர மறையவில்லை.
0 0 0 0 0 0
ப.சிதம்பரம் "இந்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல கோடிகள் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,பல தொழிலாளர்கள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும்" கண்ணீர் மல்க வருந்தியுள்ளார்.
நிலக்கரி,2ஜி,காஸ்மிக் அலை,கே.ஜி போன்ற இழப்புகளை விட இன்றைய இழப்பு மிக,மிக குறைவுதான்.மேலும் இது போன்ற இழப்புகளை உங்கள் காங்கிரசு அரசு இந்தியாவுக்கு உண்டாக்கக்கூடாது என்றுதான் இந்த போராட்டமும்.
இந்தியாவையே அந்நியருக்கு விற்கும் முயற்சியால் இந்தியாவையே நாம் இழந்து விடக்கூடாது என்ற பயம்தான் இது போன்ற போராட்டங்களுக்கே ஆதார மய்யம்.
1947க்கு முன்னர் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாக வியாபரத்துக்கு வந்து இந்தியாவையே வாங்கி மக்களை அடிமைப்படுத்திய அதே சக்திகள் இன்று சில்லரை விற்பனையில் நுழைந்து இந்தியாவை வாங்கி மீண்டும் முதலில் இருந்து அடிமைத்தனம் துவங்கி விடக்கூடாது.
தாங்கள்தான் விடுதலையை வாங்கிக்கொடுத்ததாக காங்கிரசு மார் தட்டும்.
இன்று அதே காங்கிரசுதான் அடிமைத்தனத்தையே வாங்கித்தர முயற்சிக்கிறது.
இழப்புகளை இந்தியாவுக்குதொடர்ந்து தரும் காங்கிரசுக்காரன் இப்படி பேசவே அருகதை கிடையாது.
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைக்கு ப.சி பேச்சு நல்ல உதாரணம்.
________________________________________
கரைந்த பிள்ளையாரும்,கரையாத 5 பவுனும்,
______________________________________
வேலூர் மாவட்டாட்சியர் அலுவலக அலுவலர் ஒருவர்.இவர்தனது சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து விழுந்து,விழுந்து கும்பிட்டார்.
போதாதற்கு அந்த சிலைக்கு 5 பவுன் தங்க செயினை அணிவித்து அழகுபார்த்து பூசைகள் செய்தார்.எல்லா செல்வமும் நீ தந்ததுதான்.நான் என்ன உனக்கு செய்யப்போகிறேன்.என கண்கள் கலங்க கும்பிட்டார்.
சிலையை கரைக்கும் நேரம் நெருங்கியதும் மாலையில் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் விநாயகர் சிலையை கரையச் செய்வதற்காக போட்டுள்ளார்.
ஆனால் கரைக்க அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை.
வீட்டுக்குச் சென்ற பிறகுதான் பிள்ளையாரை மட்டும் கரைக்க போட வில்லை.அத்துடன்5 பவுன் செயினும் கரைக்க கிணற்றுக்குள் போட்டது தெரியவந்தது.
சரி பிள்ளையாருக்கு சமர்ப்பணம் என்று விட்டு விட வில்லை பக்தகோடி அலுவலர்.
வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனே கைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு வீரர்கள், அந்த கிணற்றுக்குள் இறங்கி சிலை கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் செயினை கரையாமல் எடுத்து அலுவலரிடம் கொடுத்தனர்.
இந்த செயின் கரைப்பால் பிள்ளையார் கரைப்பு வேலூரில் பரபரப்பான செய்தியாகி விட்டது.
எல்லாம் கொட்டுத்த பிள்ளையாரையே கரைக்க முயன்றவருக்கு ,பிள்ளையார் கொடுத்த தங்கச் செயினை கரைக்க மனம் வர வில்லையா?
_________________________________________________________________________________
லட்சம் டன் வைரங்கள்,
__________________________
ரஷியாவில் உள்ள சைபீரிய பகுதியில் 62 மைல் அகலம் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது.
பூமி மீது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதிய விண்கல் இந்த பள்ளத்தாக்கை உருவாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இங்கு ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சுரங்கம் தோண்டி ஏதாவது தாது பொருட்கள் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பகுதியில் தோண்டிய சுரங்கத்தில் சிறு,சிறு பள,பளப்பான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அதை ஆய்வு செய்த போது அதில் ஏராளமாக வைரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பல லட்சம் டன் வைரங்கள் இங்கு இருக்கலாம் என்று கணக்கிட்டு உள்ளனர்.
இந்த வைரங்கள் உலகம் முழுவதற்கும் 3 ஆயிரம் வருடங்களுக்கு போதுமானதாகும்.
இதுவரை உலகில் வேறு எந்த சுரங்கத்திலும் இந்த அளவுக்கு வைரங்கள் கண்டு பிடிக்கபட்டதில்லை.
அதுமட்டுமல்ல இந்த வைரம் மற்ற வைரங்களை விட தரமானதாக உள்ளது. மற்ற வைரங்களை விட 2 மடங்கு வலுவானதாகவும் உள்ளது.
நம் இந்தியாவில் ஏன் விண்கல் மோதலே இல்லை?
அப்படி இருந்தாலும் பிஆர்பி போன்ற ஆட்கள் அமுக்கியிருப்பார்கள்.அதற்கு நம் அரசினரும் துணை போயிருப்பார்கள்?
_________________________________________________________________________________