செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஒரு கண்ணோட்டம்ஜவுளி நெருக்கடி தீர்க்க முடியாததா? 
----------------------------------------------- ------------------------
இன்றைய மின்,தண்ணீர் தட்டுப்பாட்டில் பாதிக்கப் பட்டு தற்கொலை செய்து கொள்வதில் விவசாயிகளுக்கு அடுத்தபடி நெசவாளர்கள் உள்ளனர்.
மத்திய,மாநில அரசுகள் இந்த பிரச்னையின் தீவிரத்தை குறைவாகத்தான் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர்.
உள்நாட்டில் விவசாயம்-நெசவு பொன்ற தொழில்களை அழிக்கும் கொள்கை முடிவுகளையே அரசுகள் எடுத்துக்கொண்டுவருகிறது.
உள்நாட்டின் தேவைகளுக்கு அடுத்த நாட்டில் இருந்தே பகாசுர நிறுவனங்களிடமிருந்து உணவு தானியங்கள்,துணிகள் பொருட்களை இறக்குமதி செய்தே அரசாண்டுவிடலாம் என்ற மடத்தனமான கொள்கை முடிவுகள் நம் இந்தியாவை சோமாலியா வரிசையில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
மின்வெட்டுப் பிரச்சனையை சமாளிக்க ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மாநில அரசு டீசல் மானியம் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் பெறவும் வலியுறுத்துவதுடன், சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கு மத்திய அரசு 90 சதவிகிதம் மானியம் தருகிறது. அதைப் பெறவும் மாநில அரசு முயற்சிக்க வேண்டும்.

பருத்தி விவசாயிகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கப்பட்டு வருகிறது. இது போல் எல்லா மாநிலங்களும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து பருத்தி கொள்முதல் செய்து தொழில் துறைக்கு வழங்கினால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும், தொழில்துறையினருக்கும் தேவையான மூலப்பொருள் கிடைக்கும்.
suran
 

உள்நாட்டு பனியன் உற்பத்திக்கு மத்திய கலால் வரியை நீக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. இந்த விசயத்தை நிதியமைச்சரிடம் பட்ஜெட் கூட்டத்துக்கு முந்தைய ஆலோசனையின்போது வலியுறுத்துகிறோம். அப்போது இங்கிருக்கும் தொழில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் தில்லிக்கு வந்து எங்களுடன் பங்கேற்க வேண்டும். வங்கி கடன் மறுசீரமைப்பு விசயத்திலும் தொழில் துறையினர் கோரிக்கை நியாயமானது. அதையும் அரசிடம் வலியுறுத்துவோம்.

அதேசமயம் தொழிலாளர்களின் குடியிருப்பு என்பது மிகவும் முக்கியமானப் பிரச்சனை. மத்திய ஜவுளித் துறையில் ஜவுளித் தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கும் திட்டங்கள் உள்ளன. இங்கிருக்கும் உற்பத்தியாளர் அமைப்புகள் ஜவுளித்துறை மானியம் பெற்று தொழிலாளர்கள் குடியிருப்புகளை ஏற்படுத்த எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒற்றுமையும், உறுதியும் இருந்தால் எல்லாவற்றையும் நிச்சயம் சாதிக்கலாம்.

உள்நாட்டுச் சந்தை

இன்றைய உலகப் பொருளாதார சூழ்நிலையில் 2013ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி பூஜ்ஜியம் சதவிகிதமாகவும், அமெரிக்காவின் வளர்ச்சி ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் திருப்பூர் ஏற்றுமதி தொழில் கூடிய விரைவில் நெருக்கடியில் இருந்து மீண்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏற்றுமதிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போதே, உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதற்கு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் நம் மத்திய அரசு நெருக்கடியைச் சமாளிப்பதாகச் சொல்லி ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை கொடுத்திருக்கிறது. நம் நாட்டின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை தொகை ரூ.5லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்த பற்றாக்குறையையும் தாண்டி ரூ.6ஆயிரம் கோடி கூடுதலாக பெருமுதலாளிகளுக்கு அரசு சலுகை அளித்திருக்கிறது. இதைச் செய்து விட்டு, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதாகச் சொல்லி சாமானிய மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும் விதத்தில் டீசல் விலையை உயர்த்தியும், சமையல் எரிவாயு விலையை ஏற்றி, சிலிண்டர் எண்ணிக்கையை குறைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக உற்பத்தி துறை வளர்ச்சி கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 6.7 சதவிகிதமாக இருந்தது, 2012ம் ஆண்டு உற்பத்தித்துறை வளர்ச்சி 0.1 சதவிகிதமாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு என்ன அர்த்தம்?

அரசின் வரிச்சலுகை மூலம் பெற்ற ரூ.5.28 லட்சம் கோடியை உற்பத்தியில் முதலாளிகள் ஈடுபடுத்தவில்லை. மாறாக இந்த தொகையை ரியல் எஸ்டேட் சூதாட்டத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்துள்ளனர். இதனால் ஒரு பக்கம் ரூ.5000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருக்கும் 54 தனிப்பட்ட குடும்பங்கள் வளர்ந்திருக்கின்றன. மற்றொரு பக்கம் 80 கோடி மக்கள் நாளொன்றுக்கு ரூ.20 கூட செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இப்படி இரண்டு முரண்பட்ட இந்தியர்கள் உருவாகியிருக்கின்றன.

எனவே தான் சொல்கிறோம்; பெருமுதலாளிகளுக்கு சலுகை தருவது தொழில் நெருக்கடியைத் தீர்க்க உதவாது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தால் தான் நெருக்கடி நிலை தீரும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வேட்டி, ஒரு சேலை கொடுப்பதாக இருந்தால்கூட ஜவுளித்துறை இப்போது இருப்பது போல் மூன்று மடங்கு உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இயற்கை வளத்தில், செல்வத்தில் பற்றாக்குறை இல்லை. ஆனால் அதை ஒருபக்கம் பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குகின்றனர். மறுபக்கம் 2 ஜி, சுரங்கம் போன்ற பெரும் ஊழல்களில் கொள்ளையடிக்கின்றனர். அலைக்கற்றை ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டதில் ரூ.1.76 லட்சம் கோடி இருந்தால் இந்தியாவில் பள்ளி செல்லும் வயதில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரை இலவச சீருடை, நோட்டு புத்தகம், மதிய உணவு வழங்கி இலவசமாக கல்வி வழங்க முடியும்.

சுரங்க ஊழல் தொகை ரூ.1.86 லட்சம் கோடியில் அனைத்து இந்திய குடும்பங்களுக்கும் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் மாதம் 35 கிலோ அரிசி வீதம் மூன்றாண்டுகளுக்குத் தரலாம். ஆனால் இதைச் செய்வதற்கு கொள்கையில் மாற்றம் தேவை. கொள்கை மாற்றம் ஏற்படுத்த ஒன்றுபட்ட வலிமையான போராட்டங்கள் மூலம் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு உழைக்கும் மக்களும், உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தொழிலைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு உற்பத்தியாளர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இருக்க முடியும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாங்கள் நாடாளுமன்றத்தில் அரசிடம் தொழில் துறையின் கோரிக்கைகளைக் கொண்டு செல்கிறோம். மறுபக்கம், இங்கிருந்து தொழிற்சங்கங்களும், தொழில் அமைப்புகளும் இணைந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

                                                                                                    - சீத்தாராம் யெச்சூரி 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suranஅமெரிக்க பத்திரிக்கையான நியூஸ்வீக் தனது கடைசி அச்சு பதிப்பை வெளியிட்டுள்ளது.80 ஆண்டுகள் வெளியான இதழ் இத்துடன் முடிவுக்கு வந்தது .
80 ஆண்டு விழாவை கொண்டாடிய கையோடு அச்சிட்டு வெளியிடுவதை நிறுத்தி விட்டது.
இனி நியூஸ்வீக் இதழை ஐ பேட் ,செல்பேசியில்தான் பார்க்க இயலும்.புத்தாண்டு முதல் "டிஜிடல் நியூஸ்வீக் குளோபல் "மட்டும்தான் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------