ஞாயிறு, 13 ஜனவரி, 2013

அன்பளிப்பு 'ரூ100'

காவிரி தண்ணீர் வராததாலும் கர்நாடக அரசு தராததாலும்  தமிழக நெற்களஞ்சியம் தஞ்சை வாடி நிற்கிறது.அங்குள்ள வயல்கள் காண்போர் மனதை அதிரச்செய்யும் வகையில் காய்ந்து கிடக்கிறது.இதுவரை காய்ந்த வயல்களைப்பார்த்து வாடிய விவசாயிகள் 11க்கும் மேற்பட்டவர்கள்  தற்கொலை,பலர் மாரடைப்பு என உயிரை விட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் வயல் வெளிகள்-பயிர்கள் நாசமானதற்கு நிவாரணம் கேட்டு போராடிவருகிறார்கள்.ஆனால் தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 13ஆயிரம் மட்டும் ஏக்கருக்கு தருவதாக அறிவித்துள்ளது.
ஆனால இன்றைய விதை நெல் விலை,உரங்கள் விலை யை சுட்டிக்காட்டி தாங்கள் செலவிட்ட   பணத்திற்கு  ஒத்து வரும் வகையில் ஏக்கருக்கு 25 ஆயிரம்,விவசாயிகள் கூலிகளுக்கு 10000 நிவாரணமாக வழங்கக் கூறி சாலைகளில் இரவு-பகலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கஞ்சித்தொட்டி திறந்து வருகிறர்கள்.
ஆனால் அவர்கள் நலத்தை புறந்தள்ளி விட்டு தமிழக அரசு பொங்கலைக் கொண்டாட அரிசி -சர்க்கரை தலா 100 ரூபாய் என்று கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.பொங்கலே விவசாயத்தின் முதல் அறுவடையை பொங்கி இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான்.
ஆனால் இங்கு அறுவடைக்கெ வக்கில்லை.விழாவை கொண்டாட மனது மற்றவர்களுக்கு எப்படி வரும்.அப்படி கொண்டாடுபவர்களும் மனதில் மகிழ்வுடன் அல்லாமல்-கடமைக்காக கொண்டாடும் நிலைதான்.
இந்த வகையில் அரசு 190 கோடிகளை செலவிட்டுள்ளது.இதை அந்த போராடி வரும் விவசாயிகளுக்கு அவர்கள் கேட்கும் நிவாரணமாகக் கொடுத்தாள் கூட மிச்சம்தான் வரும்.
அரசு மற்றவர்களுக்கு இந்த 100 ரூபாயை வாங்கி பொங்கலையும் கொண்டாட முடியுமா?
அந்த தொகையும் கூட பாதிக்கு மேல் அரசுக்கே  டாஸ்மாக் வழியாக போய்விட்டது.
இந்த விடயத்தில் கோவை பிள்ளையார் புரம் மக்கள் நமக்கு நல்லவழியை-காட்டியுள்ளார்கள்.
, அங்குள்ள 600 குடும்பத்தார்அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயைவாங்கி அதைஅரசுக்கு திருப்பி அனுப்ப முடிவுசெய்து அ த்தொகையை, "மணியார்டர்' செய்துள்ளனர்.
அதில், "டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்குக; தற்கொலையை தடுத்து நிறுத்துக' என்ற வாசகத்தையும் எழுதி அனுப்பினர்.
நூறு ரூபாயை திருப்பி அனுப்பிய அவர்கள்    அனைவரும்தினக் கூலிகள் என்பதுதான் இதில் முக்கிய விடயம் . துன்பத்தில் வாழும் அவர்களுக்குத்தான் துன்பத்தில் உள்ள விவசாயிகளின் நிலை புரிகிறது.
நினைத்தபோது ஏசி காரில் அலுவலகம் வந்து எண்ணிய போது  தோட்டத்துக்கு போய்விட்டு மாதாமாதம்  களைப்புக்காக மலைவாழ்விடம் சென்று ஒய்வெடுப்பவர்களுக்கு இந்த துன்பநிலைகள் எப்படி புரியும்.இப்போது பொங்கல் கொண்டாட 100 யார் கேட்டார்கள்.அந்த 100ரூபாய் போதுமா?
ஒன்று மட்டும் இந்த விவகாரத்தில் புரிகிறது.கருணாநிதி பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்ததற்கு போட்டியாகத்தான் இது .அது மட்டுமின்றி கருணாநிதி போல் பொருட்களாக கொடுக்காமல் 100 ரூபாய் கொடுத்தது.நியாவிலைக் கடைகளை ஒழிக்கும் முயற்சிக்கான உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் வெள்ளோட்டம்தான்  நினைக்கத் தோன்றுகிறது. 
பின்குறிப்பு:நான் இந்த 100 ரூபாயை வாங்கவில்லை.அதைவிட எனது வெள்ளைஅட்டைக்கு கிடையாது என்பதுதான் உண்மை.
___________________________________________________________________________________
பொங்கல் -தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------------------------------------------------
பொங்கல் வந்து விட்டது .தை பிறந்து விட்டது .இது பொங்கல்  மட்டும்தானா?தமிழ்ப் புத்தாண்டு பிறப்பும்தானா?
இந்த சந்தேகம் இரண்டு ஆட்சியாளர்களால் தமிழர்கள் மனதில் உருவாக்கி விட்டது.
தை .இதுதான் தமிழ் மாதங்களுக்கு தலையாய மாதமாக இருக்கும் .
இருக்கவும் முடியும்.
1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் தான் திருவள்ளுவர் ஆண்டு என்பது ந டைமுறைக்கு வந்தது .தமிழக அரசும்  ஆணையிட்டது. 
1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இப்போது  “திருவள்ளுவர் ஆண்டு 2043” . 

 திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள்.
மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார், “முன் காலத்தில் ஆண்டு பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் ஆண்டு பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். 
புதிய ஆடைகளைவாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள்.

இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” - என்று எழுதியிருக்கிறார்.

 சௌதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையில், “ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாளை  பழையன கழிக்கும்  போக் கியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண்டாடியிருக்கிறார்கள்.

சூரியன் தென்கோடிவரை  சென்று விட்டு  திரும்பி ஆரம்பிக்கும்  நாள்தான் உலக  நாள் ஜனவரி 14. ஆக உள்ளது.
அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14 அல்லது அதையொட்டி பிறக்கும்  தை மாதப்பிறப்புக்கு மட்டும்தான் இயல்பாக இந்த சிறப்பு அமைந்திருக்கிறது.
நம் முன்னோர்கள் தமிழர்கள் வழமை படி அதுதான் இளவேனில்கால அல்லது வசந்த கால பிறப்பு  .இடையில் வந்த -தமிழர்களை ஆண்ட மாற்று மொழிக்காரர்களால் இந்த மாத வழமையிலும்,பெயர்களிலும் பல மாற்றங்கள்.
அதில் சிதறி சித்திரை இடையில் புகுந்து ஆர்யர்களால்  முதலிடம் பெற்று அவர்கள் வசதிக்கேற்ப தமிழ் ஆண்டின் முதலாகிவிட்டது.கடும் கோடை வெப்பம் மிகுந்த சித்திரை தமிழ் ஆண்டின் முதலா?
இளம் வசந்தத்தின் பிறப்பான,அறுவடை கால பிறப்பான தை முதலாக இருக்க முடியுமா ?
என் எண்ணப்படி,முடிவுப்படி தை தான் தமிழர்களின் ஆண்டு  பிறப்பாக கொள்ளமுடிகிறது.
சித்திரை சிரித்தாள் என்று எழுதி வைத்ததற்காக அதை முதலாக எற்றுக்கொள்ள முடியாது .
__________________________________________________________________________________