"விஸ்வரூபம் "-பாமர ரசிகனின் பார்வை.



ரொம்ப நாள்கழித்தே பரபரப்பாக பேசப்பட்ட "விஸ்வரூபம்"படம் பார்க்க முடிந்தது.
காரணம்  கூட்டம் மற்றும் அதிகப்படியான கட்டணம்.
எப்போதுமே கூட்டத்துடன் படம் பார்க்கும் விருப்பம் கிடையாது.டிக்கட் விலையை விட அதிக கட்டணம் கொடுக்கவும்  வருத்தம்.
கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் எனக்கு இந்த படம்பார்த்தபின்னர்  எதிர்பார்புக்கு மாறாக இருந்து  விட்டது.
எனக்கு மட்டுமல்ல.என்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அதற்கு வசனங்கள் விளங்காதது முதல் காரணம்.அதற்கு திரையரங்கின் சதாரண ஒளியமைப்பும்-கலந்து கட்டி வரும் ஆங்கில-அராபிய-போஸான் [?]மொழி அமைப்பும் ரகசியமான குரலில் பேசும் முறையுமே காரணமாயிருக்கலாம்.கிட்ட தட்ட ஹேராம் பார்த்த போதான அனுபவம்தான் நினைவுக்கு வந்தது.
படம் உலகத்தரத்தில் இருந்தது உண்மைதான்.
ஆனால் ஜாக்கிசான் உட்பட ஹாலிவுட் படங்கள் தமிழாக்கத்தில் வரும் போது இதையும் அப்படி தமிழாவே தந்திருந்தால் ரசிக்கமுடிந்திருக்கலாம்.ஹாலிவுட் படங்களிலேயே தமிழாக்கத்தில்"ஆத்தா மாரியம்மா சாட்சியா"'நடுவுல கொஞ்சம்பக்கத்த  காணோம் "என்று வசனங்களில் விளையாடுவதை கமல் கண்டு கொண்டிருக்கலாம்.அது என்போன்ற பாமர ரசிகர்களை கொஞ்சம் மகிழ்வித்து மீண்டும் ,மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கும்.
ஆனால் இசுலாமியர்களை இழிவு செய்த இடங்கள் என்று ரீல் ,ரீலாகத் தேடினாலும் கிடைக்கவில்லை.
இசுலாமிய சகோதரர்களின்  மத வுணர்வை சிலர் அரசியல் காரணங்களுக்காக கிளறி விட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் அவர்களும்,தமிழக ஆட்சி யாளர்களும் ஆர்ப்பாட்டம் ,தடை என்று போயிருக்காவிட்டால் நிச்சயம் கமல்ஹாசன் இந்த படத்துக்காக செலவிட்ட 90 கோடிகளை மீண்டும்  எடுத்திருக்க முடியாது.
காரணம் என்னைப் போன்றவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள்.அவர்களை இது பொன்ற படங்கள் அது கமல் படமாகவே இருந்தாலும் மீண்டும் பார்க்கத்தூண்டாது,பெண்களும் வர வாய்ப்பில்லை.
மேலும் இது போன்ற படத்துக்கு 90 கோ டிகளு க்கு மேல் செலவிட்டு எடுத்தது அசட்டுத் தைரியம்.
கத்தி மேல் நடந்து செல்லும் முயற்சி.
அதில் காயம்படாமல் வெற்றி பெற்றதுதற்கு கமல் நிச்சயம் இசுலாமியத்தலைவர்களில் சிலருக்கும் ,ஜெயலலிதாவுக்கும்  நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
கெட்டதிலும் நல்லது அவருக்கு கிடைத்திருக்கிறது.
அவர்கள் மட்டுமில்லை என்றால் தான் கமல்ஹாசன் தனது சொத்துக்களை இழந்திருப்பார்.மீண்டும் அவர் பேட்டி கொடுக்க அதேவீடு கிடைத்திருக்காது.அதுதான் நடமுறை உண்மை.
இம்முறை தப்பியதில் தனது முயற்சி மகா வெற்றி தவறாக எண்னி  இது போன்ற படங்களை 100 கோடி அளவில் அவர் தயாரித்தால் அவரை இசுலாமியர்களொ,இந்துக்களோ,ஜெயலலிதாவோ ,கமல் ரசிகர்களோ யாராலுமே காப்பாற்ற முடியாது.வேறு திறமையை மதிக்கும்[?]மாநிலத்துக்கோ,வெறு நாட்டுக் கோ தான் போகவேண்டியதிருக்கும்.
கமல்ஹாசனின் ஆரம்பகாலம் இருந்தே அவரின் விசிறி என்ற முறையில் இதை சொல்ல எனக்கு உரிமை மட்டுமல்ல கடமையும் இருக்கிறது.
சரி. கமல் ரசிகனான எனக்கு உலகத்தரத்திலான கமலே சொல்லிய உலக அறிவும் பொது அறிவும் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்து ரசிக்கும் முறையை சொல்லி தந்தது -மற்றும்  அதில் உள்ள விவரங்களை விளக்கியது  "உலக சினிமா ரசிகன்"தள ம் வெளியிட்ட
VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம். தான் .
இப்படி எல்லாம் கூட படங்ககளை ரசிக்கலாமா ?என்ற வியப்பை தந்த அருமையான அலசல் கட்டுரை.
அதை உங்களுக்கு மீள்பதிவாக [அவரின் அனுமதிபெறவில்லை]தருகிறே ன் .

VISWAROOPAM - துளியூண்டு விமர்சனம்.

நண்பர்களே...
விஸ்வரூபம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற்று விட்டது.
பெற்ற வயிறு குளிர்ந்து விட்டது...என்பதை சமீபத்திய கமலின் பேட்டியில் உணர முடிந்தது.
“இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தோம்” என தமிழன்னை மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இஸ்லாமிய சகோதரர்களிடம் கமல் உரிமையுடன் பிரியாணி கேட்டதில் உள்ள நியாயங்களை இனி பார்ப்போம்.
அதே நேரத்தில், கமல் அமெரிக்காவிற்கு படம் நெடுகிலும் ஆப்படித்த இடங்களையும் விளக்குகிறேன்.
ஏனென்றால் பதிவர்கள் சிலர் திட்டமிட்டு,
விஸ்வரூபம் அமெரிக்காவை தூக்கி பிடித்திருப்பதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[ 1 ] விஸ்வரூபம் படத்தை  ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லராக’ படைக்க ஆசைப்பட்ட படைப்பாளி கமல் தனது முதல் ஷாட்டை  ‘தீமெட்டிக்காக’ புறாக்களில் ஆரம்பிக்கிறார்.
புறாக்கள் பறக்கும் கூண்டிலேயே, படத்தின்  டைட்டில்களை தொடருகிறார்.
டைட்டில் இறுதியில், ஒரு இஸ்லாமியர் ஒரு புறாவை பிடிப்பார்.
அடுத்த ஷாட்டில் பறக்க விடுவார்.
புறா அமெரிக்க கொடியை நோக்கி பறக்கும்.

புறாக்கால்களில்  ‘சீசியம்’ அடைக்கப்பட்ட குழல்களை கட்டி விட்டு, அமெரிக்க கண்காணிப்பு சாதனங்களை ஏமாற்றி...
மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக...
பிளாஷ்பேக்கில், ஒமர் கதாநாயகனிடம் விவரிக்கும் போதுதான்...
படத்தின் ஆரம்பக்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்கும்.

[ 2 ] இப்படி படம் முழுக்க, கேள்வியை ஒரு இடத்திலும்...
விடையை மற்றொரு இடத்திலும் வைத்து கமல் படைத்துள்ளார்.

[ 3 ] புரியாதவர்கள் படத்தை பலமுறை பார்க்க வேண்டும்.
சில புண்ணாக்கு பதிவர்கள், விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.

[ 4 ] கோடம்பாக்க ஜாம்பவான்களே  நடுங்கி...ஒடுங்கி கிடக்கிறார்கள்.

[ 5 ] ‘கமல் அமெரிக்க அடிவருடி’ என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.
ஆரம்பக்காட்சியில் அமெரிக்க கொடியை காட்டும் போது,
 ‘டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் வைத்திருப்பார்.
காமிரா  ‘செமி டாப் ஆங்கிளில்’ இருக்கும்.
நம்முடைய பார்வையில் அமெரிக்க கொடி கீழே இருக்கும்.
அமெரிக்க இயக்குனர்கள் பிற நாட்டுக்கொடியை,
இதே முறையில் ஷாட் வைத்து மட்டப்படுத்துவார்கள்.
பதிலடி கொடுத்து கமல் ஷாட் வைத்துள்ளார்.
இதெல்லாம் விளங்கி விடுமா ‘உண்மைத்தமிழனுக்கு’.

[ 6 ] கதாநாயகனை தமிழ் பேசும் இந்திய முஸ்லிமாக படைத்ததற்கு,
படைப்பாளி கமலுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டும்.
அவன் பிராம்மணனாக மாறு வேடமிட்டு அமெரிக்காவில் தங்கும் போதும் ‘தொழுவதற்கு’ செல்லும் இஸ்லாமிய வழமை மாறாத தன்மையுடன் இருப்பதாக படைத்து அதன் மூலம் திரைக்கதை திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

[ 7 ] ஒமரின் ஆட்கள் கதாநாயகனையும்,அவனது மனைவியையும் கட்டி வைத்து உதைத்து விசாரிக்கும் போது முதலில் தனது பெயர்  ‘தாபிக்’ எனக்கூறுவான்.
மேலும் மேலும் அடி விழவே...தனது பெயர்  ‘நாசர்’ என மாற்றிக்கூறுவான்.
இந்த இரண்டு பெயர்களுக்கும் உரிய கதாபாத்திரங்கள்
‘ஆப்கானிஸ்தான் பிளாஷ்பேக்கில்’ வருவார்கள்.

[ 8 ] ஒமரின் ஆட்கள் விசாரிக்கும் போது...
கதாநாயகனான, இந்திய முஸ்லீம் உளவுத்துறை அதிகாரி...
தனக்கு பிடித்தமான தாபிக்-நாசர் என்ற இரண்டு பெயர்களையும்...
தனது புனை பெயராக பயன்படுத்துகிறான் என காட்சி அமைத்துள்ளார் படைப்பாளி கமல்.
[ குழலூதும் கண்ணனை பிடித்ததால்தான்,  ‘முத்தையா’ கண்ணதாசனாக பரிணாமம் பெற்றார்]

[ 9 ] ‘தாபிக்’ ...என்பவர்  ஜிகாதி அல்ல என்றே ஒமர் அறிமுகப்படுத்துவார்.
தாபிக்,பண்புள்ள விவசாயி மற்றும் வியாபாரி என்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

‘நாசர்’ ...ஒமரின் மகனாக இருந்தாலும் தான் போராளியாக விரும்பவில்லை எனவும் டாக்டராவதே தனது லட்சியமாகக்கூறுவான்.
தாயிடம் விளையாடும் போது கூட அவன் டாக்டராக மாறி விளையாடுகிறான்.

[ 10 ] தாபிக், நாசர் இருவருமே, கதாநாயகனான- இந்திய உளவுத்துறை அதிகாரியின் நடவடிக்கையின் மூலமாகவே பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
இந்தக்குற்றவுணர்ச்சி கதாநாயகனுக்குள் ஊறிக்கிடப்பதை...
“ அழிக்க முடியாத பாவம் என் நெற்றியில எழுதியிருக்கு” என்ற வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி கமல்.

தாபிக், நாசர்...இந்த இரு காரெக்டர்களின் பெயரை,
கதாநாயகனான இந்திய முஸ்லிம் தனது புனை பெயராக பயன்படுத்துவதின் மூலமாக படைப்பாளி கமல் கூறும்  'REDEMPTION SEEKING' முயற்சி விளங்குகிறதா ?

[ 11 ] தாலிபனாக பிரதிபலிக்கப்படும் ஒமரின் ஆங்கில மொழி வெறுப்பு,
பெண்ணுரிமை மறுப்பு, பாட்டு...நடனம் போன்ற கலைகளின் மீது நாட்டமுடையோருக்கு வழங்கப்படும் தண்டனைகள்...
என படைப்பாளி கமல் மிகச்சரியான அளவில் இத்திரைக்கதையில்
 ‘ஆப்கன் மீது வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்ட விளைவுகளை’ பிரச்சனைகளாக தொட்டுக்காட்டி உள்ளார்.

[ 12 ] தாலிபன் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகத்தெரிந்து கொள்ள,
இரண்டு உலக சினிமாக்களை பரிந்துரைக்கிறேன்.

# ஒசாமா [ OSAMA \ 2003 \ Afghanistan \ Directed by Siddiq Barmak ]


# காந்தகார் [ KANDAHAR \ 2001 \ Iran \ Directed by Mohsen Makhmalbaf ]


[ 13 ] ஆப்கானிஸ்தான் கிராமத்தை,
படை விமானங்கள் குண்டு போட்டு சீரழித்திருப்பார்கள்.
சீரழிந்த மலைக்கிராமம் திரையில் காட்டப்படும் போது,
கழுகின் குரலை மட்டும் பின்னணி சப்தமாக ஒலிக்கச்செய்திருக்கிறார் படைப்பாளி கமல்.

கழுகு = அமெரிக்க தேசியப்பறவை = பிணம் தின்னும் குணம் கொண்ட பறவை.
.
கமலை,  ‘அமெரிக்க அடி வருடி’ என அலறும் அறிவாளிகளே!
இதற்கு வேறு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால் ?

[ 14 ] சரித்திரத்தின் பக்கங்களை உரசிக்கொண்டு பிறந்த வசனங்கள் இவை...
ஒமர் : அப்பன் இல்லாம வளர்ற பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க....
[ சிரித்து விட்டு ] சும்மா தமாஷ்.

விஸாம் : அப்பன் யாரென்றெ தெரியாத பசங்க...

அதை விட உஷாரா இருப்பாங்க...
[ இடைவெளி விட்டு ] தமாஷ். 

இந்த வசனத்துக்கு அர்த்தம் வேறொரு காட்சியில் கிடைக்கும்.

மூதாட்டி : பிரிட்டிஷ்காரன் வந்தான்....
ரஷ்யாக்காரன் வந்தான்....
அப்புறம் தாலிபான்...
அமெரிக்கா...
இப்ப நீ வந்திருக்க...

முன்னாடி வால் முளைத்த குரங்குகளா...


ஆப்கானிஸ்தானை சீரழித்தவர்களை...
மூதாட்டியின் வசனம் மூலமாக அம்பலப்படுத்துகிறார் படைப்பாளி கமல்.
அனைவருமே ஆப்கான் பெண்களை சீரழித்தவர்கள்தான்.
ஒமரின் தாயாரும் இப்படி சீரழிக்கப்பட்டவர்தான்.
ஒமரின் வயதை கணக்கிட்டு...
அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் நுழைந்தவர்களை கணக்கிட்டால்...
ஒமரின் தாயாரை சீரழித்தவர்கள் யாரெனெத்தெரியும்.

இந்த சரித்திர சோக விளைவுகளின் காரணகர்த்தாக்களை பற்றி என்றாவது
 ‘அமெரிக்க அடி வருடி’ பதிவாளர்கள் எழுதியிருக்கிறார்களா?

[ 15 ] “ அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்” ...
என்ற வசனம் நிறைய பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வசனம் பேசப்பட்ட பிறகு அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தெறிவதை படமாக்கியிருப்பார் படைப்பாளி கமல்.

அமெரிக்கர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல...
முதலில் நம்மிடம் நம்பிக்கையை விதைப்பார்கள்...
செயல்பாட்டின் மூலமாக தகர்த்தெறிவார்கள்...
என்றே இக்காட்சியின் மூலமாக விளக்குகிறார் படைப்பாளி கமல்.

இப்படத்திற்கு முழுமையான விமர்சனம்,
 ‘விஸ்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளி வந்த பிறகுதான் எழுதமுடியும்...
எழுத வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?