வியாழன், 4 ஏப்ரல், 2013

குண்டர் தடுப்பு...,

உடல் இளைக்க உதவிடும் வகைக்கு  உடலில் பொருத்தக்கூடிய [மைக்ரோச்சிப்] மின்னனுக் கணினிச் சில்லு ஒன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சில்லுகள் உடலில் பொருத்தப்பட்டவருக்கு அதிகம் பசிக்காது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது.அதன் மூலம் அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.
இ தனால் உடல் எடையை குறைக்க அதிக முயற்சி செய்யும் குண்டானவர்களுக்கு மிக்க பயன் கிடைக்கும்.அவர்கள் தங்கள் எடையை-உடலை குறைக்க பட்டனி கிடக்க வேண்டியதோ, அறுவை சிகிச்சை மூலம்  உடல் எடையைக் குறைக்க வேண்டியதோ இல்லை.இதற்காகவே  இதனை வடிவமைத்ததாக நிபுணர்கள்  தெரிவித்துள்ள னர்.
மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்ற வேகஸ் நர்வ்ஸ் எனப்படும் நரம்பிலே சேர்ந்து இருப்பதுபோல இந்தச் சில்லு உடலில் பொருத்தப்படும்.
விலங்குகளிடத்தில் இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் ஆரம்பிக்கவுள்ளன.
அதன் பின்னர் மூன்று ஆண்டுகளில் மனிதர்களிடத்திலும் இவை பரிசோதிக்கப்படும் என்று இது சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவரும் லண்டன் இம்பீரியல் காலேஜைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டூமாஸு மற்றும் பேராசிரியர் சர் ஸ்டீஃபன் ஆகியோர் கூறியுள்ளனர்.
வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சில்லுகள் பசி தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் .அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு அறிகுறி களை அனுப்பும்.
அளவாகவும் மெதுவாகவும் சாப்பிடவைப்பது இந்த சில்லுகள்  மூளைக்கு அறிவிப்புகளை  அனுப்பு ம் என்று பேராசிரியர் டூமாஸூ தெரிவித்தார்.
காக்காய் வலிப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடிய வகையில் வேகஸ் நரம்புகளில் பொருத்தப்படும் மைக்ரோச்சிப் சில்லுகளையும்  இம்பீரியல் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் முன்பு  உருவாக்கியிருந்தனர்.அது இப்போது பலருக்கு நல்ல பயனை தருகிறதாம் .இதன் மூலம் மாத்திரை செலவு மிச்சம்.குண்டர்கள் எண்ணிக்கையும் குறையும்.
[குண்டர் தடுப்பு சட்டம் தேவை இல்லாமல் போய் விடுமோ? ]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வழுக்கையும் -வாழ்க்கையும்,

தலயில் வழுக்கை விழுந்ததோடு போய்விடும் என்று பார்த்தால் இப்போது உயிருக்கே ஆபத்து வரலாம் என்கிறது ஆய்வு."வழுக்கை தலையர்களுக்கு  இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று.
முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக இவர்கள் கூறிவருகின்றனர்.இதற்காக 37,000  வழுக்கை -வழுக்கை இல்லாத ஆண்களிடையேநடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாம்.
தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் ஆய்வு கூறுகிறதாம்.
இதய உண்டாக முடி எப்படி கழிகிறது என்பதை கூட கவனிக்க வேண்டுமா?
இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் எப்படி வருகிறது என்று தெளிவாகத் தெரியவில்லை .
இது பொன்ற ஆய்வுகள் எல்லாம் முழு நம்பகத்தன்மை உண்டானதாக இருக்காது.எனவே வழுக்கையர்கள் எல்லாம் இதை  சிந்தித்தே இதய நோயை உண்டாக்கிக்கொள்ள வேண்டாம் .இது எனது ஆய்வு முடிவு.
ஆனால் வழுக்கைத்தலையை விட, புகை பிடித்தலும், உடல் பருமனும் இந்த இதய நோய் ஆபத்தை அதிகமாக உண்டாக்குகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 குற்றவாளிகள் "ஸ்கேன்"

"ஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா"? என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் .
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன் மூலம் ஒருவர் எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடிய வாய்ப்பு பற்றி புரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றன.
மூளையின் மேற்பரப்பில் அண்ட்டீரியர் சிங்குலேட் கார்ட்டெக்ஸ் என்ற பகுதி நமது நடத்தை, நமது உணர்வுப் பெருக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றுகிறது.
குற்றங்களைச் செய்தவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியவர்களது மூளையில் அண்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் என்ற குறிப்பிட்ட இந்த பாகத்தில் செயற்பாடுகள் குறைவாக இருந்தால் அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் குற்றவியல் சட்டம்  செயல்படும் விதம், குற்றவாளிகள் கையாளப்படும் விதம் போன்றவற்றில் இந்த ஆய்வின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் மொபைல் இமேஜிங் பிரிவின் இயக்குநராகவும் நியூமெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் இருக்கும் கெண்ட் கியெல் கூறியுள்ளார் .
 இந்த ஸ்கேன் மூலம் மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்புள்ளவர் என அடையாளம் காணப்படுபவர்களுக்கு, அவர்கள் திருந்துவதற்கு உதவும் உளநலப் பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் குற்றங்களை முளையிலேயே கிள்ளி விட முடியுமாம்.
சட்டென முடிவெடுக்கும்படியான கணினி விளையாடுகளை சிறைக் கைதிகளை விளையாட வைத்து, அந்த நேரத்தில் அவர்களது மூளைச் செயல்பாடுகளை எம் ஆர் ஐ ஸ்கேன் செய்து ஆய்ந்து அதன் மூலம்  பரிசோதனையை ஆய்வாளர்கள் நடத்தியுள்ள னர்.
என்ன வெல்லாமோ கண்டு பிடிக்கும் இவர்கள் 2-ஜி   விவகாத்தில் நடந்ததை கண்டுபிடிக்க எதையாவது கண்டுபிடிக்கலாமே?

தகவல்கள்  உதவி :"பி.பி.சி,'
------------------------------------------------------------------------------------------------------------------------------------