வியாழன், 16 மே, 2013

மாடி வீட்டு ஏழை ?

மத்தியில் ஆளும் காங்கிரசு ஆட்சியில் முறைகேடுகள் வாரா,வாரம் அணிவகுத்து லட்சம் கோடிகள் என்ற கணக்கில் வந்தாலும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இன்னமும் மாடி வீட்டு ஏழையாகத்தான் உள்ளார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து மனதுக்கு துன்பமாக இருக்கிறது.
நம்மால் உதவ முடியவில்லையே என்ற கழிவிரக்கம் தூக்கத்தை விரட்டி விட்டது.
இந்த செய்தியை படித்தால் உங்களுக்கும் அதே நிலை வரலாம்.எனவே இதயம் பலகீனமானவர்கள்,அடுத்தவர் துன்பத்தை,ஏழ்மையை தாங்கும் அளவு மன வலிமையற்றவர்கள் மேலே  படிக்க வேண்டாம் .
நேற்றைய நிலவரப்படி அவரின் கையில், ஒரு பைசா கூட இருப்பு  இல்லை என்றும், அவரின் மனைவி குர்சரண் கவுரிடம், 20 ஆயிரம் ரூபாய் மட்டும் அன்றாட செலவுக்காக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 அசையும் சொத்துகளின் மதிப்பு  4 கோடி ரூபாய் .
இதில் குறைந்தபட்ச சொத்தாக  வெறும் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள் ஒரு ஓட்டை மாருதி-800  கார் மட்டும் இருப்பதாக  அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின்  மனைவி குர்சரண் கவுர் கணவர் அளவுக்கு அவ்வளவு ஏழை அல்ல.
அவருக்கு மட்டும்  சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்.  3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் உள்ளன.
 சண்டிகாரில், இரண்டு மாடி வீடும், டில்லியில் ஒரு பிளாட்டு போன்ற குடிசைகள் மட்டும்  தனக்கு சொந்தமாக இருப்பதாக கூறியுள்ளார்  பிரதமர்.
 இவற்றின் மதிப்பு வெறும்  7 கோடி ரூபாய்கள் மட்டும்தான்  என தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்திலிருந்து  மாநிலங்கள வைக்கு  தேர்வு செய்யப்பட்டதால் கவுகாத்தியிலும், பிரதமருக்கு ஒரு வீடு உள்ளது.
இந்த வீடு அசாம் முன்னாள் முதல்வர் ஹிதேஷ்வர் சைக்யாவுக்கு சொந்தமானது .இந்த வீட்டுக்கு  மாதம் தோறும் மிகவும் துன்பங்களுக்கிடையிலேயும்  700 ரூபாய் வாடகை கொடுப்பதாகவும் தன் சொத்து பட்டியல் அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரதமர் தொழிலில் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய்கள் வரை வருமானம் கிடைப்பதாகவும் சொல்லியுள்ளார்.
கணக்கு உங்களைப்போலவே எனக்கும் எங்கோ உதைக்கிறது.
முன்னாள் உலக வங்கி மேலாளர்,இன்றைய உலக பொருளாதர  புலிகளில் ஒருவரான மன்மோகன் சிங்கின் கணக்கை சாமானிய நம்மால் புரிந்து கொள்வது இயலாத ஒன்று.
இப்போது ஏன் இந்த கணக்கு வழக்கு வெளியானது என்று பார்க்கிறீர்களா?
பிரதமர் மன்மோகன் சிங்'ன் தற்போதைய எம்.பி., பதவிக் காலம், ஜூன், 14ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதேபோல், அசாமிலிருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொருவரின் பதவிக்காலமும் முடிவடைவதால் இரண்டு இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்திலிருந்து  ஐந்தாவது முறையாகமாநிலங்கவை செல்ல  பிரதமர் மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது " 1991ம் ஆண்டு முதல் மாநிலங்கவை உறுப்பினராகி பிரதமர்  பணியாற்றி வருகிறேன். தற்போது ஐந்தாவது முறையாக தேர்வாக உள்ளேன்.
அசாம் மாநிலத்தின்,இந்தியாவின்  விரைவான வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வறுமை மற்றும் நோயை ஒழிக்க முற்றிலும் பாடுபடுவேன்.[இதுதான் உங்களின் விரைவா?]"
என்று பேசி விட்டு காரில் ஏறி பறந்தார்.
[இன்னமும் 10 ஆண்டுகள் இவரை பிரதமாராக வைத்துக்கொள்ள நமக்கு தலை எழுத்தா? ]
 வேட்பு மனுவில்  சொத்து பட்டியல் குறித்த அறிக்கையையும் இணைத்திருந்தார். அதைத்தான் இவ்வளவு நேரமும் படித்தீர்கள்.
பிரதமர் தொழில் மாதம் 40 லட்சம் மட்டுமே வருமானம் பார்க்கும் அவருக்கு தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் நிலக்கரி,2ஜி,3ஜி,கேஜி போன்றவற்றில் தொடர்பு இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------