இசுலாமிய நாடுகளில்


வீசும் 


பகுத்தறிவுப் புயல்

- இளையமகன்
நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களுக்கு கடவுளுடன் வாய்க்கால் வரப்புச் சண்டை எதுவும் இல்லை. பின் ஏன் கடவுள் மறுப்பைப் பேச வேண்டும்? இந்தக் கேள்வி எழுவது இயற்கைதான். உலக மனிதர்கள் அனைவரும் உடன்பிறப்புகள். வாழும் நிலத்தால், இயற்கைச் சூழலால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை, இடையிடையே கடலே இல்லாமல், ஒரே நீளமாக நிலமாகவே இருந்திருந்தால் இவ்வளவு வேற்றுமைகள் இருந்திருக்காதோ என்னவோ? இத்தனை மதங்கள் இருந்திருக்கக்கூட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். கொஞ்சம் முரண்பாடுகளுடன் மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.
மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதாக மதவாதிகளால் சொல்லப்படுகிறது. ஆனால், மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் நடக்கும் தீமைகளைப் பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மதங்கள் தொடங்கப்பட்ட காலங்களில் அந்த நாள் சமூகத்துக்கு மதத்திற்கான தேவைகூட இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தேவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அப்படியே இருக்குமா என்ன? காலம் மாறும் போது கருத்துகளும் மாறும். இது இயற்கை நியதி. உலகின் இயங்கியல். அதனால்தான் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேவை மாறாமல் இருந்திருந்தால் புதிய மதங்கள் தோன்ற வேண்டிய அவசியம் இருக்காதே!
மதங்களும் காலத்திற்கேற்ப தங்களைச் சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டு தம்மைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எந்த மதமும் இதிலிருந்து தப்ப முடியாது. இதற்குக் காரணம் பகுத்தறிவின் வளர்ச்சிதான், வேறல்ல. அய்ரோப்பாவின் நோயாளி என வர்ணிக்கப்பட்ட துருக்கியை முஸ்தபா கமால் பாட்சா மாற்றி அமைத்தார். அந்த மண்ணின் இஸ்லாமியர்கள் அதுவரை பின்பற்றிய உடை, மொழி, தோற்றம் என அனைத்திலும் மாறுதல்களைச் செய்தார். அவரைத்தான் அம்மக்கள் துருக்கியின் தந்தை என்றழைக்கின்றனர். பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவுக்கு முஸ்தபா கமால் பாட்சாதான் மானசீகம். ஆனால், ஜின்னாவின் மரணம் அந்நாட்டினை முழு மதவழிப்பட்ட நாடாக மாற்றிவிட்டது வரலாற்றின் சோகம்.
அறிவியல் வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே அந்த மாற்றங்களை அந்நாடுகள் சந்தித்ததென்றால், அறிவியலுடன் தொழில்நுட்ப ஊடகவியலும் அனைத்து மக்களையும் சென்றடைந்து, உலகத்தையே இணைத்து வரும் இந்தக் காலத்தில் மாற்றம் நடைபெறாமலா இருக்கும்?
மிகுந்த கட்டுப்பாடான மதச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சில ஆண்டுகளாக பகுத்தறிவுக் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.
கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே உண்மை இதழில், பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா? என்ற தலைப்பில் பாகிஸ்தானில் இளைஞர்கள் பகுத்தறிவுக் கொள்கையுடன் மதத்தைத் துறந்து வருவதைப் பதிவு செய்திருந்தோம். ஆண்கள் மட்டுமல்லாமல், அதீத கட்டுப்பாடுகள் காரணமாக இஸ்லாமியப் பெண்களும் இந்த அடக்குமுறைகளை எதிர்த்துத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இரானின் கடவுள் மறுப்பாளர்களும் (கிலீமீவீ) கடவுள் கவலையற்றோரும் (கிரீஸீஷீவீநீ) தங்களுக்கென திறந்துள்ள முகநூல் பக்கத்தில் சுமார் 49000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மதங்களுக்கும், மூடநம்பிக்கைக்கும், பெண்ணடிமைக்கும் எதிரான தங்கள் கருத்துகளை எழுத்து, ஓவியம், புகைப்படம், காணொளி வாயிலாக, மிகச் சரியான தர்க்க வாதங்களோடும், எளிமையாகப் புரியும் விதத்திலும் பகிர்ந்து வருகின்றனர். அறிவியலின் துணையோடு அத்தனை மதங்களையும் தகர்த்தெறிகிறார்கள்.  பதில் கொடுக்க முடியாமல், தடுமாறி வருகின்றனர் மதவாதிகள். கட்டற்ற இணையதளங்களில் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள வக்கில்லாமல், அவற்றிற்குத் தடை கோரவும், அப்படி எழுதுபவர்களைத் தாக்கவும் தொடங்கியுள்ளனர். பகுத்தறிவுக் கருத்து பேசுவோரைத் தாக்குவது காலம் காலமாக நடப்பதுதான். இதற்கெல்லாம் பயந்து அவர்கள் ஒருபோதும் ஒடுங்கிவிடவில்லை என்பதைத்தான் வரலாறு நெடுகவும் நமக்குச் சொல்கிறது. ஈரான், பாகிஸ்தான், டுனிசியா என்று நமக்கு ஆங்காங்கே தெரியும் நாடுகள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளில் பரவலாக பகுத்தறிவுக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வங்காளதேசத்தில் மதத்திற்கெதிரான கருத்துகளைத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டது நாமறிந்தது. இப்போது அங்கே குறிப்பிடத்தக்க அளவில் மதச்சார்பற்றவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் பலர் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். வங்காளதேச அறிவுலகில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அங்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை மதவாதிகள் மிகுந்த வெறுப்புணர்வோடு எதிர்கொள்கின்றனர்.
இவ்வாண்டின் தொடக்கம் முதலே நாத்திகக் கருத்துகளை எழுதும் வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. கருத்தைக் கருத்தால் சந்திக்கும் வன்மையற்றவர்களின் நடவடிக்கை இப்படித்தானே இருக்கும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஆசிஃப் என்ற வலைப் பதிவர் மீது மிகக் கடுமையான கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தையும், நபியையும் இழிவுபடுத்துவதாக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு முன்பும் தொடர்ந்தும் இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் வங்காளதேசப் பத்திரிகையாளர்கள். 2004-ஆம் ஆண்டு கவிஞரும் இலக்கியவாதியும், நாவலாசிரியருமான ஹுமாயுன் ஆசாத் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெர்மனியில் மரணத்தைத் தழுவினார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நாத்திக எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் எழுந்து வருகிறது மதவாதிகளிடமிருந்து! மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் ஆசிஃப் உள்ளிட்ட மூன்று வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டனர்.  மொத்தம் 84 நாத்திக எழுத்தாளர்களின் பெயர்ப்பட்டியலை இஸ்லாமிய மதவாதிகள் வங்கதேச அரசிடம் வழங்கியுள்ளனர் என்றும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்றும் பத்திரிகைகள் சொல்கின்றன.
தொடர்ந்து பல்லாண்டுகாலமாக வங்கதேச நாத்திகர்களுக்கும் இஸ்லாமிய மதவாதிகளுக்கும் இணையதளத்தில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. எனினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாத்திக எழுத்தாளர் அஹ்மத் ரஜிப் ஹெய்டர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், 1971இ-ல் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையின் முடிவில் ஜமாத்--_எ_ இஸ்லாமி மதவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் மீதும் குற்றச்சாட்டு உறுதியாகி, அவர்கள் தண்டனைக்குட்பட வேண்டியிருக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாலும் இப்போது இந்தப் போராட்டங்கள் வலுத்துள்ளன. வங்கதேச அரசு நாத்திக எழுத்தாளர்கள் சிலரின் வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. இஸ்லாம் மதவாதிகளுக்கெதிராக மதச்சார்பற்ற எழுத்தாளர்களும், அவர்தம் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, மூன்று எழுத்தாளர்கள் கைதுக்கும், வலைத் தளங்கள் தடை செய்யப்படுவதற்கும் எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எதிராக மதவாதிகளும் பெருமளவில் கூடி, இஸ்லாமுக்கு எதிராக எழுதுவோரை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், இஸ்லாமைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இப்போது உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள், மனிதநேய அமைப்புகள், நாத்திகர்கள் வங்கதேச நாத்திகர்களுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தஸ்லீமா நஸ்ரின் உள்பட பலரும் தங்கள் ஆதரவை மதச்சார்பற்ற எழுத்தாளர்களுக்குத் தெரிவித்துள்ளனர். வங்கதேசம் தவிர மொராக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளிலும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. அதற்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கருத்தைக் கருத்தால் சந்தித்து வளர்ந்ததே இன்றைய உலக வளர்ச்சி. ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு; அந்தக் கருத்தை மறுக்கவும் மற்றவர்க்கு உரிமை உண்டு; ஆனால், நீ இந்தக் கருத்தைச் சொல்லாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார் பெரியார்.
எதையும் நம்பாதே உன் அறிவால் ஆராய்ந்து பார் என்பது பகுத்தறிவு; அறிவியல். ஆனால், நான் சொல்வதை அப்படியே நம்பு; ஆய்ந்து பார்க்காதே என்கிறது மதம். மதவாதிகளோ மதங்களுக்கு எதிரான கருத்துகளையே பேசக்கூடாது என்கின்றனர். மரணதண்டனை கொடு என்று அரசிடம் வேண்டும்போதும், தாங்களே தாக்குதல் நடத்தும்போதும் ஒரு விசயத்தை மதவாதிகளே தெளிவாக ஒப்புக் கொள்கிறார்கள்.- அது கடவுள் இல்லை; அதற்குச் சக்தி இல்லை. எனவேதான் நாங்கள் அரசிடம் முறையிடுகிறோம் என்பதுதான்.
எந்தக் காலத்திலும் -அறிவு _ மதவாதத்திற்கும்- _ஆதிக்கத்திற்கும் அடங்கியிருக்காது. உலகத்தின் வளர்ச்சிக்கு மதங்கள் மடிவதும், மனிதம் வளர்வதும் இன்றியமையாதது. காலம் அதைநோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மதவாதிகளின் பதற்றம் நமக்கு உணர்த்துவது மதம் ஆட்டம் காண்கிறது என்பதையே! நாமும் அதையே எதிர்பார்க்கிறோம்.
இன்னும் வேகமாக பகுத்தறிவுக் கருத்துகள் பரவ எதிர்ப்பு அவசியம்தானே. முடிந்தால் அறிவுத் தளத்தில் நின்று மோத மதவாதிகள் தயாராகட்டும். -பகுத்தறிவாளர்கள் தயார்! இல்லையேல், உலகம் மதவாதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு முன்னேறிக் கொண்டேயிருக்கும். மற்றபடி, இந்த மிரட்டல் வன்முறை, மரணதண்டனை எல்லாம் அறிவு வளர்ச்சியை ஒரு நாளும் தடுக்க முடியாது.

நன்றி;விடுதலை. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?