கடல் தினம்
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
"அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்'
என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.
பூமி, ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டுள்ளது. பூமியில் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில், 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இதனால் வானில் இருந்து பார்த்தால், பூமி ஊதா நிறத்தில் காணப்படும்.
உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும், ஆதாரமாக கடல் விளங்குகிறது. கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு தண்ணீர் பயணித்து, பின் மழையாக நிலப்பகுதியில் விழுகிறது.
ஆறுகள் வழியாக சென்று மீண்டும் கடலில் கலக்கிறது.
கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது.
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 ----முதல் 80 சதவீதம் கடல் மூலமாக கிடைக்கிறது.
நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது.
கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தவிர பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால், ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன.
உலகில் 10 கோடி பேர் உணவு, வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன்பெறுகின்றனர்.
கழிவு நீர் கடலில் கலப்பது; எண்ணெய் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடலை பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லையெனில், மனித வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்படும்.
உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ.,. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது.
நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா ) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
கடல் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------