இணைய பலூன்கள்
இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது.
லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும்.
இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு உருவாக்கப்பட்டவை.
நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது.
இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.
இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை.
பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது.
கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.57 லட்சம் கோடி அமுக்கியது யார்?
வியாழக்கிழமை (20.6.2013) அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,719 என்ற அளவில் நிலைத்தது. 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் ஏற்பட்ட 704 புள்ளி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த வீழ்ச்சியே மிகப் பெரிது என்றும் 1,650 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின என்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ரூ 1.57 லட்சம் கோடி யாருக்கு இழப்பு?
இந்த வீழ்ச்சிக்கு காரணம் வாஷிங்டனில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் சேர்மன் பென் பெர்னான்கே, அமெரிக்க பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளதாக கருதுவதாகவும், அதனால் சந்தையில் வெளியிடும் டாலர்களின் அளவு 2014 முதல் குறைக்கப்படலாம் என்றும் தெரிவித்ததுதான் என்று முதலாளித்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகமாகப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தாம் வாங்கியிருந்த பங்குகளை பெருமளவில் விற்று டாலராக மாற்றிக் கொண்டன என்றும் அதனால் பங்குகளின் விலையும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
அன்னிய நிதி நிறுவனங்கள் எப்போது இந்த பங்குகளை வாங்கின?
ஆனால், இலவசமாகக் கிடைக்கும் டாலர்களை தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை விட பங்குச் சந்தைகளில் போடுவது லாபகரமானது என்று அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் டாலர்களை கொண்டு வந்து கொட்டின. அதாவது, நம் நாட்டுக்கு எந்தப் பொருட்களையும், சேவைகளையும் கொண்டு வராமலேயே அமெரிக்க அரசு செயற்கையாக உருவாக்கிய டாலர்களை கொண்டு வந்து பங்குகளை வாங்குகின்றன. பொருத்தமான நேரத்தில் பங்குகளை விற்று லாபத்தை திரும்ப எடுத்துச் செல்கின்றன. இது 2009-ம் ஆண்டு முதல் நடந்தது. இந்த கால கட்டத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 9,700 அளவிலிருந்து 20,000 வரை ஊசலாடியது டாலர்களின் பாய்ச்சலுக்கு ஏற்றபடி நடந்தது என்று சொல்லலாம்.
இப்போது, அமெரிக்காவில் கிடைக்கவிருக்கும் மலிவான டாலரின் அளவு குறையப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குகளை விற்று டாலராக மாற்றிக் கொள்கின்றன. இது நாள் வரை இந்திய ரூபாயில் இந்திய நிறுவனங்களின் பங்குகளாக இருந்த அன்னிய நிறுவனங்களின் மூலதனம் டாலராக மாற்றப்பட்டுள்ளது.
அதிகமான ரூபாய்கள் சந்தையில் டாலராக மாற்றப்பட்டதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் விலை அதிகமாகும். உதாரணமாக, இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும். சமையல் எண்ணெய், செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள் போன்றவற்றின் விலையும் உயரும்.
இதனால் இறக்குமதிகளின் மதிப்பு உயர்ந்து அதற்கு ஈடாக ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வெளிநாடுகளில் மலிவான விலையில் விற்பது சாத்தியமாகும். அதனால் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களும் கனிம வளங்களும் , மதிப்பு குறைந்த இந்திய ரூபாயில் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களும் வெளிநாடுகளுக்கு பெருமளவு இந்திய முதலாளிகளால் ஏற்றுமதி செயயப்பட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.
இந்திய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததால், தமக்குத் தேவையான மூலதனத்துக்காக இந்திய முதலாளிகள் நிதிச் சந்தையில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலைகளை உயர்த்தி அந்த செலவை சரிக்கட்டிக் கொள்வார்கள். மக்களுக்கு விலைவாசி அதிகமாகும்.
இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான். பணத்தின் மதிப்பு குறைவால் தேசிய முதலாளிகள் நட்டம் அடைவார்கள். தரகு முதலாளிகளோ விலை உயர்வு, ஏற்றுமதி-இறக்குமதியை மாற்றிப் போட்டு இலாபத்தை தொடருவார்கள்.
1990-களில் ‘இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கிறது; அதனால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது; இதை சரிக்கட்ட, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நமது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்;’ என்று மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய திறந்து விட்டார் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங்.
“அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி பங்குகளை வாங்குவதால், இந்தியாவில் டாலர்கள் கிடைப்பது அதிகமாகும். இந்திய முதலாளிகள் நேரடியாக அமெரிக்க சந்தைகளில் தமது பங்குகளையும் கடன் பத்திரங்களையும் விற்று டாலர் நிதி திரட்டுவதற்கும் வழி ஏற்படும்.” என்பதுதான் மன்மோகன் சிங் தலைமையிலானவர்களின் பொருளாதாரக் கொள்கை.
ஆனால், இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட மூலதனம் தரகு முதலாளிகளை மட்டுமே வளப்படுத்தியிருக்கின்றன. அம்பானி ஆண்டிலியா மாளிகை கட்டியிருக்கிறார், விஜய் மல்லையா கிங் ஃபிஷர் காலண்டர் படப்பிடிப்பு நடத்துகிறார், சீனிவாசன் ஐபிஎல் போட்டிகளில் சூதாடுகிறார்.
இந்திய ரூபாயின் மதிப்பு மூன்றரை மடங்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது (1 டாலர் வாங்க ரூ 17 கொடுத்த நிலை மாறி 1 டாலருக்கு ரூ 60 கொடுக்க வேண்டியிருக்கிறது). 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிதி அமைச்சராக இருக்கும் ப சிதம்பரம் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருப்பதால் அன்னிய முதலீட்டை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று 1990-களில் மன்மோகன் பாடிய அதே பல்லவியை பாடுகிறார் என்பதுதான் இந்த கொள்கைகளின் மோசடித்தனத்தை நிரூபிக்கிறது.