மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி,
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு
பேர் மட்டும்தான்.
கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர்
என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்!
டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக்
கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம்
நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13
கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்!
இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம்,
நகர்ப்புறத்தில்மாதம் தலா ரூ.1,000 சம்பாதிக்கும் என்று வைத்துக் கொண்டால்,
(மாதம் ரூ.5,000) அவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிக் குதிக்கும் வல்லமை
பெற்றுவிட்டார்கள் என்று பொருள்.
கிராமப்புறங்களில் தலா மாதம் ரூ.816
சம்பாதிக்கும் குடும்பம் (மாதம் ரூ.4,080), ஏழைக் குடும்பம் என்ற
நிலையிலிருந்து விடுபட்டுவிடுகிறது.
இந்தக் கணக்கீடு தனிநபர் நுகர்வுத் திறன் அடிப்படையிலானவை. இந்த
நுகர்வுப் பொருள் என்பது பெரும்பாலும் அடிப்படை உணவுப் பொருளாகப்
பட்டியலிடப்பட்டு, அவற்றை வாங்கும் சக்தி உள்ளவர்களை ஏழையர் பட்டியலில்
இருந்து நீக்கி - அல்லது மேலுக்கு உயர்த்தி - விடுவதுதான் இந்த
கணக்கீடுகளின் வேலையாக இருக்கிறது.
டெண்டுல்கர் கணிப்புமுறை சரியல்ல என்று பல தரப்பிலும் கருத்து
கூறப்பட்டு, ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழுவை திட்டக் கமிஷன் நியமித்துள்ள
நிலையில், அந்தக் கமிஷன் 2014-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் (ஒருவேளை
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு) தனது கணிப்புமுறை ஆலோசனைகளை வழங்கும்
என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இவ்வாறு ஓர் அறிக்கையை மத்திய அரசு
வெளியிடுவதன் நோக்கம் தங்களது ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வு, நாணய
மதிப்புக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, நிதி நெருக்கடி
போன்ற பிரச்னைகளுக்கு நடுவிலும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது என்கிற மாயத்
தோற்றத்தை ஏற்படுத்தத்தான் என்று தோன்றுகிறது.
இந்தியாவில் மூன்றுவேளை உணவு உண்பவன் ஏழை கிடையாது என்பதுதான் அடிப்படை
கணிப்புமுறை என்றால், பிச்சைக்காரர்களில் பலரும்கூட வறுமைக்கோட்டைத் தாண்டி
அப்பால் விழுந்துவிடுவார்கள். இந்தியாவில் ஏழ்மை என்பதை இன்றைய தேதியில்
வெறும் நுகர்வுப்பொருள் தொடர்புடையதாகக் காண்பது சரியல்ல.
நகரத்தில் ரூ.5,000-க்கு அதிகமாக சம்பாதிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம்
வறுமைக் கோட்டுக்குள் வராது. டெண்டுல்கர் கணிப்புமுறை அதைத்தான்
நிறுவுகிறது.
அப்படியானால் 5 பேரும் வேலை செய்கிறார்கள் என்று கருதத்
தேவையில்லை, இது சராசரிதான் எனப்படுகிறது.
இருப்பினும்கூட, ஒரு குடும்பத்
தலைவன், தலைவி இருவர் மட்டுமே வேலைசெய்து, நகர்ப்புறத்தில் மாதம் ரூ.15,000
சம்பாதித்தாலும் (நகரப்புறத்தில் ஒரு சித்தாள் கூலி நாளுக்கு ரூ.300)
குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை.அதுதான்
ஏழ்மை.
அரசுப் பள்ளியில் பெரும்பாலும் தரமான கல்வியில்லை என்று
தெரிந்திருந்தும் ஒருவேளை மதிய உணவுக்காகக் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு
அனுப்பும் குடும்பங்கள் - நகரம் என்றாலும் கிராமம் என்றாலும் - அனைத்துமே
ஏழைக் குடும்பங்கள்தானே?
எந்த நகரத்தில் வீட்டு வாடகை - அது குடிசை என்றாலும்கூட -
ரூ.2,000க்குக் குறைவாக இருக்கிறது?
நகரத்தின் பாலங்களுக்கு அடியிலும்,
நடைபாதையிலும் படுத்துறங்குபவர்களை விடுங்கள். மாதம் 3,000 ரூபாய் கொடுத்து
நாற்றமடிக்கும் குடிசைகளிலும், தாற்காலிகக்
கட்டடங்களிலும் வசிப்பவர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருத
முடியுமா என்ன?
என்னதான் சேவையுணர்வுடனான சிகிச்சையோ, சுகாதாரமான சூழலோ, தரமான
மருந்துகளோ இல்லாமல் போனாலும்கூட வேறு போக்கிடம் இல்லாமல், அரசு
மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெறும் அனைத்துக் குடும்பங்களும் ஏழைகள்
அல்லாமல் வேறென்ன?