‘வரலாறு காணா விலைவாசி உயர்வு’

 - எனும் வாக்கியம் எக்காலத் திற்கும் பொருந்தும் போலும்! அந்த அளவுக்கு முந்திய காலத்தைவிட அதற்கு அடுத்த காலத்தில் அது உயருகிறதே தவிர, குறைந்தபாடாய் இல்லை. இப்போதும் இதே நிலைதான்.
 ‘உயர்ந்தவன் யார் ?
கிராமவாசியா- நகரவாசியா?
 இல்லை,
 'விலைவாசி’!'
எனும் கந்தர்வனின் கவிதை நித்திய உண்மையாகிப் போனது.
நல்ல பொன்னி அரிசி விலை கிலோ ரூபாய் ஐம்பதைத் தாண்டிவிட்டது.பருப்பு விலை நூறை எட்டிவிட்டது.நல்லெண்ணைய் விலை லிட்டர் இருநூற்றி ஐம்பதை நெருங்கிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புகூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.விலைவாசி உயருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இந்த வேகத்தில் அது எகிறும் என்று நினைத்த தில்லை. 
முந்திய காலங்க ளுக்கும் தற்போதைய காலத் திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் & இந்தப் படுவேகம் தான்.
நுகர்வோர் விலைவாசிப் புள்ளியானது ஆண்டுக்கு 9%க்கும் மேலே உயர்ந்து வருகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலையானது கிட்டத்தட்ட 11 % உயர்ந்து வருகிறது. “ இது மிகவும் அதிகம்தான்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் (7.6.13 இல்) ஒப்புக் கொண்டிருக்கிறார். நாட்டின் நிதியமைச்சரான ப.சிதம்பரமும் இதை ஒப்புக்கொண்டுவிட்டு, குடுகுடுப்பைக்காரன் நல்ல சேதி தருவது போல, “ராபி விளைச்சல் நல்லதாக அமையும்போது உணவுப் பொருள் விலைவாசி குறையும்” என்று (6.6.13. இல்) சொல்லியிருக்கிறார். ஆக, ஆட்சியாளர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இயற்கையாகப் பார்த்துக் கண் திறந்தால் தான் உண்டு!
இந்த நாட்டின் தற்போதைய அவல நிலையே இதுதான். “ஆன்லைன்” வர்த்த கம் எனப்பட்ட ஊக வணிகம் உள்ளிட்ட சகல மோசமான சக்திகளையும் கட்ட விழ்த்துவிட்டு,அவை சந்தையைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிவைப்பதை ஆட்சி யாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களது “தலையிடாக்” கொள்கை வினோதமானது. முரட்டுக் காளைகளை அவிழ்த்து விடுவார்கள்.
ஆனால் அவற்றை மீண்டும் பிடித்துத் தொழுவத்தில் கட்டிப்போட மாட்டார்கள். மோசமான சக்திகளை அனுமதித்தார்களே,அது தலையிடும் கொள்கையல்லவா?“ஆன்லைன்” வர்த்தகத்திற்கு அவர்கள் அனுமதி தராமலிருந்திருந்தால் விலைவாசி இவ்வளவு கொடுமையாக உயர்ந்திருக்காது.
இதற்கு இன்னொரு காரணம், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள எண்ணை நிறுவனங்களை அனுமதித்தது.சக்கரங்கள் சுழன்றால்தான் பொருள்கள் இடம் மாறும்.அவை சுழல எண்ணை வேண்டும்.அவற்றின் விலையை இஷ்டத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றால்,அவை சுமந்து செல்லும் சகல பொருட்களின் விலையும் உயரத்தான் செய்யும்.குறிப்பாக டீசல் விலை உயர்வு லாரி வாடகையையும் ரயில் கட்டணத்தையும் உயர்த்துகிறது.
கேட்டால் ‘உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் என்ன செய்ய முடியும்?’ என்று அப்பாவிகள் போலக் கேட்கிறார்கள்.உண்மை என்னவென்றால், அது உயர்ந்தாலும் உயராவிட்டாலும் எண்ணை மீது அரசு விதித்துள்ள அநியாய வரிகளே இவ்வளவு அதீத விலைக்கு அடிப்படைக் காரணம்.வரிகளைக் குறைத்தாலே போதும் எண்ணை விலை குறைந்துபோகும். அதற்குத் தயாராயில்லை அரசு.
இப்போது இன்னொரு விவகாரம் வந்து சேர்ந்திருக்கிறது.ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டதால், இறக்குமதிக்கு அதிக செலவாகிறது என்கிறார்கள். அது உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஓர் அமெரிக்க டாலர் கிடைத்தது. இப்போது கிட்டத்தட்ட 59ரூபாய் கொடுத்தால்தான் அது கிடைக்கும்!
இந்தியாவின் “நாணயம்” படு மோசமாக வீழ்ந்துவிட்டது! ஆனால், இதற்கு யார் பொறுப்பு? இந்த நாட்டின் ஏழைபாழைகளா? சாட்சாத் ஆட்சியாளர்கள்தாம் பொறுப்பு. அவர்கள்தாம் தாராளமயம் & தனியார்மயம் & உலகமயம் எனச் சொல்லி இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தோடு கோர்த்து விட்டவர்கள்.
வளர்ச்சி உலகமயமானால் நல்லது.ஆனால் தளர்ச்சி உலகமயமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவானது தனது நெருக்கடியை “உலகமயம்”என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளின் தலையில் சுமத்தி வருகிறது.மிக அண்மை யில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவுக்குக்கூட அமெரிக்க அரசின் நிதி நடவடிக்கைகளும்,அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுமே காரணம் என்கின்றன பத்திரிகைகள் (டைம்ஸ் ஆப் இன்டியா, 19.6.13).
அமெரிக்காவின் இத்தகையத்தாக்கு தல்களை எதிர்கொள்ளும் வல்லமை மிக்கதாக, சொந்தக் காலில் நிற்கக் கூடியதாக இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்காதது யார் குற்றம்?
ஆட்சியாளர்களது குற்றமே என்பதில் சந்தேகம் வேண்டாம். அமெரிக்கா & ஐரோப்பாவின் பொருளாதாரச் சேட்டை களை எல்லாம் எதிர்த்து முறியடித்து நிற்க பக்கத்தில் உள்ள சீனாவால் முடிகிறது என்றால், நம்மால் ஏன் முடியாது? விஷயம், அத்த கைய சுயசார்பு பொருளா தாரக் கொள்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான்.
அதற்கு ஆட்சி யாளர்கள் தயாராக இல்லை.இவர்கள் கரடுதட்டிப் போனவர்கள், சகலத்திற்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளையே நம்புகிறார்கள். ஏழை மக்கள் தரும் வரிப்பணத்தை எடுத்து இதே பெருமுதலாளிகளது கார்பரேட் நிறுவனங்களுக்கு மானியங்களாகக் கொடுத்து,அவர்கள் காப்பாற்றட்டும் இந்தியாவை என்று கையைக் கட்டி நிற்கிறார்கள். அப்படித் தரப்படும் மானியம், வரிச்சலுகைகள் மட்டும் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்துலட்சம் கோடி ரூபாய்!
இது இந்திய அரசினுடைய வரவு&செலவு திட்டத்தில் உள்ள நிதிப்பாற்றாக்குறையாகிய அதே ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்குச் சமம்.அதை வெட்டி இதைச் சரிசெய்தால் விலைவாசி குறையும்.அல்லது அந்தத் தொகையைக் கொண்டு மத்திய அரசே களத்தில் இறங்கினால் எத்தனையோ வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.அதனால் வெகு மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்து விலைவாசி உயர்வை அவர்க ளால் எதிர்கொள்ள முடியும்.இரண்டும் செய்யாமல் நாட்டைப் பெரும் கார்பரேட் நிறுவனங்களின் கொட்டடியில் கட்டிப் போட்டு விட்டார்கள், பாவிகள்.
தனியார் துறையே கூடாது, அதன் பங்களிப்பே தேவையில்லை என்பதன்று எனது வாதம். அதை மட்டுமே ஓர் அரசு நம்பியிருப்பதுதான் நாட்டின் அவலம் என்கிறேன்.தனியார் துறையின் செயல் பாட்டைக் கண்காணித்துக் கொண்டே, பொதுத்துறையின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்கிறேன்.
தற்போது அரசானது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் வாபசாகிக் கொண்டிருக்கிறதே,அது கூடாது என்கிறேன். ‘பொதுநல அரசு’ எனும் மகத்தான கோட்பாட்டைக் கைவிடு கிறதே, அதை வேண்டாம் என்கிறேன்.
அரசாங்கம் என்றால் மக்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது?அது சாலை போடும், பேருந்துவிடும், மருத்துவமனை கட்டும், மருந்து தரும், பள்ளிக்கூடம் கட்டும், கல்வி கொடுக்கும், குழாய் அமைக்கும், குடி தண்ணீர் தரும் & இப்படித்தான் நினைப்பு இருந்தது. இவற்றை ஒவ்வொன்றாய்க் கழட்டிவிட்டு விட்டது அரசு.சாலைபோட்டு காசு அடிக்கும் வேலை தனியார் கம்பெனி களுக்குத் தரப்பட்டுவிட்டது.
அரசு மருத்துவமனைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. தனியார் மருத்து வமனைகள் கொழிக்க கண்ஜாடை காட்டப்படுகிறது. கல்வி இலாகாவானது சரஸ்வதியிடமிருந்து பிடுங்கப்பட்டு லட்சுமியிடம் கொடுத்தாகிவிட்டது.
இதிலே இப்போதைய உச்சம் குடிநீர் விநியோகமும் தனியார் வசம் போய்ச் சேர்ந்தது. சமீபத்தில் சென்னையில் குடிநீர் விநியோக நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதும் மக்கள் தவித்துப் போய்விட்டார்கள். அப்போது தான் தெரிந்தது மாநகரத்தார் குடிநீருக்கு ஆட்சியாளர்களை நம்பவில்லை,தனியார் நிறுவனங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் என்பது.
ஒரு லிட்டர் பச்சைத் தண்ணீரின் விலையும்,பதப்படுத்தப்பட்ட அரை லிட்டர் பாலின் விலையும் ஒன்று. சுத்தமான குடிநீருக்கு அவ்வளவு கிராக்கி, அவ்வளவு விலை!
“யுனிசெப்” நிறுவனத்தின் கணக்கின் படி இந்திய மக்களில் கால்வாசிப் பேருக்குத்தான் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடிநீர் கிடைக்கிறது.மற்றவர்கள் எல்லாம் வெளியிடங்களிலிருந்து அதை எடுத்து வருகிறார்கள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட சிரமங்கள், அவமானங்கள் என்கிறது அதனுடைய அறிக்கை.
பத்து லட்சம் பேருக்கும் அதிகமா னோர் வாழும் இந்திய நகரங்கள் 35.இதில் எந்தவொரு நகரமும் இடைவிடாது குடிநீர் விநியோகம் செய்வதில்லை.சில மணி நேரம் அது வந்தாலே ஆச்சரியம்.
சுத்தமான குடிநீரின் அவசியம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.அசுத்த நீரின் வழியாகவே பல வியாதிகள் பரவுகின்றன.இந்தியாவில் வயிற்றுப் போக்கு நோயின் காரணமாக மட்டும் தினசரி 1600 பேருக்கும் மேலானோர் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வியாதிக்கு மூலகாரணம் அசுத்த நீர். இருநூறு பேரைச் சுமந்து செல்கிற ஜம்போஜெட் விமானங்கள் எட்டு தினசரி விழுந்து நொறுங்கினால் எத்தனை சாவு நேரிடுமோ அத்தனை! அப்படி விமானங்கள் விழுந்தால் இந்த நாட்டில் எவ்வளவு களேபரம் எழும்!
ஆனால் தினசரி இத்தனை ஏழைபாழைகள் செத்துக் கொண்டிருப்பது பற்றிக் கவலைப்படுவார் இல்லை!
இதிலே கண்மாய்கள் வறண்டு போகின்றன என்பது மட்டுமல்ல, கண்மாய்களே காணாமல் போகின்றன! மதுரையில் எனது வீடு உள்ள பகுதியில், நான் அதைக் கட்டும்போது பக்கத் திலிருந்த கண்மாய் இப்போது இல்லை.
விளைவு என்னவென்றால், இந்தக் கோடைப்பருவத்தில் நிலத்தடி நீர் வற்றிப் போய்விட்டது. பணத்துக்கு லாரியில் தண்ணீர் வாங்கி மேலே தொட்டியில் நிரப்புகிறோம் அந்தப் பகுதியில் உள்ள சகலரும்.
நிலமும்,நிலத்தடி நீரும் வரன் முறையின்றிப் பயன்படுத்த,பெரும் தலைவர்களுக்கும், பெரும் கம்பெனிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் வற்றாத பூமித்தாயின் மார்பும் வற்றிப் போனது.குடிநீருக்காக மட்டுமல்லாது குளிக்கிற நீருக்காகவும் தனியார் நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை நாட்டில் வந்துவிட்டது.

இவ்வளவும் எதனால்?அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதால்,அரசு அரசாக இல்லாமல் ஆகிவருவ தால்.
போகிற போக்கைப் பார்த்தால்,சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிற வேலையைக் கூட தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு “அக்கடா”என்று இருக்கலாம் என்று நினைப்பார்கள் போலும்!

இந்தத் தனியார்மயச் சிந்தனை யிலிருந்து விடுபட்ட, அரசின் பொறுப்பை உணர்ந்து, மக்கள் நலனுக் காகத் தேவையான தலையீடுகளைச் செய்கிற கொள்கைகள் நடப்புக்கு வரவேண்டும்.

அப்படி வந்தாலொழிய விலைவாசி கட்டுக்குள் வரப்போவதில்லை, தண்ணீருக்கும் தனியார் நிறுவனங்களை நம்புகிற நிலை மாறப் போவதில்லை.

வருகிற காலம் மக்களவைத் தேர்தல் காலம். மத்தியில் புதிய ஆட்சி பற்றி, பு-தியவர்களின் ஆட்சி பற்றிப் பேசப்படுகிறது. 
 அதற்கும் முன்னால் பேசப்பட வேண்டிய விசயம், புதிய, நல்ல மாற்றுக் கொள்கைகள் பற்றி.

மனிதர்களைப் பற்றிப் பேசுவது எளிது,கொள்கைகளைப் பற்றிப் பேசுவது கடினம்.

 ஆனாலும், என்றைக்கு தேசம் அந்தக் கடின வேலையை மேற்கொள்கிறதோ,

அன்றைக்கே அதற்கு விடிவு!
                                                                                                                                           -அருணன் 
suran
 







suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?