புதன், 21 ஆகஸ்ட், 2013

சிங்கள-இந்தி " கஃபே"

இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர்.
suran
இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார். 

திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு  மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.
படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் வெளியிடக் கூடாது என்றும் அதனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இத்திரைப்படம் குறித்து கருத்துவெளியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்ச பணம் கொடுத்து, சோனியா காந்தி இயக்கி, இந்திய றோ உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் “காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு, ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
suran
விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும், இந்திய அமைதிப் படையும், சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்று இப்படத்தைப் பார்த்த பலரும் வலியுறுத்தியுள்ளனர். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தைக் காண்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை, இத் திரைப்படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி ‘மெட்ராஸ் கபே’ என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறீலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்குத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் ‘ஜப்னா’ என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு, பிறகு ‘மெட்ராஸ் கபே’ என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜோன் ஆப்ரகாம், யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது போல் சித்தரித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாகச் சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது.
suran
மெட்ராஸ் கபே திரைப்படத்தைப் பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களைத் தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் – மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இலங்கையில் வரும் நவம்பரில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பௌத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தைத் தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இப்படத்தைத் தடை செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,:
‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.
ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, இலங்கை அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.
suran
எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளபாடங்களையும் தந்தது யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு. அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டது.
தற்போது பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.
ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் திரைப்படம் ஆகும். 
 இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், இரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சவை, இருமுறை சந்தித்து உள்ளான்.
 இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். 
இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான்.
suran
1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவராக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும்.
நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஓகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு’ என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தார். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம். 1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கொமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது.
எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர். ‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன. நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, இலண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

suran
இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான றோ, பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார்.
இந்திய உளவு நிறுவனம் றோ, விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜொனியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1993 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.
இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த துரோகத்தை மறைக்கவும், கொடிய இந்திய அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜோன் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும். என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்? ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சவுக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
suran
1984 இல், புதுடில்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? 
தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? 
சோற்றால் அடித்த பிண்டங்களா? 
 தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன.
இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும். 
ஓகஸ்ட் 23 ஆம் திகதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்! 
 தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர்,
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்’ என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதேவேளை, புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்தப் படத்தை திரையிட்டால் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவும் தயாராகிவருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இப்படத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.

நன்றி: ஈழமுரசு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல...  கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.
suran
* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
*  பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
*  நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை
பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

-