வளர்ச்சியும் வீழ்ச்சியும்
மொபைல் போன் உலகில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக திகழ்ந்த நோக்கியா நிறுவனத்தை, சாப்ட்வேர் தொழிலில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் மைக்ரோசாப்ட் 720 கோடி டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) கொடுத்து சொந்தமாக்கியுள்ளது.
பின்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்ட நோக்கியா நிறுவனம் எவ்வளவு வேகத்தில் சிகரத்தை எட்டியதோ அதே வேகத்தில் யாரும் எதிர்பாரத வகையில் பெரும் சரிவையும் சந்தித்துள்ளது. இதன் பின்னணியை ஆராயும்போது கிடைக்கும் தகவல்கள் சுவாரசியமானவை.
உச்சத்தில் இருந்த நோக்கியாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாறிக் கொண்டே இருந்தது. எளிமையான கையால்தல் மட்டுமே செல்போனின் இலக்கணம் ஆகாது என்று உணர்த்தும் வகையில் அழகான, கவர்ச்சியான, புதுமையான செல்போன் மாடல்களை சந்தைக்கு கொண்டு வர தொடங்கியது தென்கொரியாவின் சாம்சங். 2007ல் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.
யாரும் தொட முடியாத சந்தைப் பங்கு இருந்ததால் விளம்பரம் செய்வதிலும் நோக்கியா ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சாம்சங்கும் ஆப்பிளும் புதிய விளம்பர உத்திகளை கையாண்டன. அதையடுத்து, 2007ல் ஸ்மார்ட்போன் சந்தையில் 49.4 சதவீதமாக இருந்த நோக்கியாவின் ஆதிக்கம், அடுத்த ஆண்டுகளில் 44, 41, 34 என்று தொடர் சரிவை சந்தித்தது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதல பாதாளத்தில் விழுந்து 3 சதவீதம் ஆனது.
நேர்த்தியான செல்போன் தயாரித்த நோக்கியாவால், போட்டியாளர்கள் அளவுக்கு வேகமான இயக்க முறை மென்பொருளை இணைத்து அளிக்க இயலவில்லை. சாப்ட்வேரில் கவனம் செலுத்த தவறியதால் ஹார்ட்வேர் முக்கியத்துவம் இழந்து பின்தங்கியது. எனவே, 3ஜி உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப செல்போன்களை வாங்க விரும்பிய மக்கள், நோக்கியா பக்கம் திரும்பவில்லை.
டுயல் சிம் எனப்படும் இரட்டை சிம் கார்டு போன்களை மக்கள் விரும்பி வாங்குவது தெரிந்தும் நோக்கியா சமீபகாலம் வரை அதில் ஆர்வம் காட்டவில்லை. மக்களின் விருப்பங்களும் தேவைகளும் மாறி வருவதை நோக்கியா உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது. அந்த சூழ்நிலையில், 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா தனது போன்களில் ஆபரேடிங் சிஸ்டமாக அறிமுகம் செய்தது.
எனினும், கூகுள் நிறுவனத்தின் இலவச ஆபரேடிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்பாடு அதற்குள் மிக உயர்ந்த இடத்தை தொட்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆப்பிளின் ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டமும் தனிப்பெயர் பெற்றிருந்தது. எனவே, இழந்த சந்தைப் பங்கை நோக்கியா மீட்க முடியவில்லை.
இந்த நேரத்தில் நோக்கியாவின் புதிய தயாரிப்புகளான லூமியா போன்கள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக தகவல் பரவி பல நாடுகளிலும் விற்பனை விறுவிறுப்பானது. அதை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை கையகப்படுத்தும் யோசனைக்கு மைக்ரோசாப்ட் வடிவம் கொடுத்தது. ஹார்டுவேர், சாப்ட்வேர் இணையும் பந்தம் இருவருக்கும் நன்மை தரும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் நம்புகிறார்.
2010ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி எலூப் பதவி விலகினார். நோக்கியா நிறுவனத்தில் சேர்ந்தார்.
நோக்கியாவுக்கு மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சப்ளை தொடங்கியது.
நோக்கியா நிர்வாகத்தில் பல மாற்றங்களை எலூப் கொண்டுவந்தார். 65 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளில் பாதிப்பேரை வெளியேற்றினார். இதே காலகட்டத்தில் நோக்கியா போன்களின் விற்பனை தரைமட்டம் ஆனது. இழப்பு அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனத்தை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
எலூப் மீண்டும் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது.
ந
நன்றி:தினகரன்
ன்றி:தினகரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 7,850 அவர்களின் சொத்து மதிப்பு 93,500 கோடி டாலராகவும் (56.10 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது.
இதில், பெரும் பணக்கார பெண்களின் எண்ணிக்கை, 1,250 ஆகவும், அவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு, 9,500 கோடி டாலர் (5.70 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கும் உள்ளது. இது, இந்தியா நீங்கலாக, இதர "பிரிக்ஸ்' நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா) உள்ள பெரும் பணக்கார பெண்களின் எண்ணிக்கையை விட, அதிகமாகும். இது, கடந்த ஓராண்டில், 3 கோடி டாலருக்கும் (180 கோடி ரூபாய்) அதிகமாக, பெருஞ்சொத்து வைத்துள்ள தனிநபர்கள் குறித்து, வெல்த்-எக்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஓராண்டில், இந்திய மக்கள் தொகை, 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும், இதர "பிரிக்ஸ்' நாடுகளை விட, இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில், 120 பேர் அதிகரித்துள்ளனர். அதே சமயம், இதே காலத்தில், இந்திய பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டை விட, 5.3 சதவீதம் குறைந்து, 19 ஆயிரம் கோடியில் இருந்து, 18 ஆயிரம் கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள, பெருங் கோடீஸ்வரர்களில், 3 - 4.90 கோடி டாலர் அளவிற்கு சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 1,300 கோடி டாலர் என்ற அளவிற்கு உள்ளது. நாட்டில், 90 சதவீதத்திற்கும் அதிகமான பெரும் பணக்காரர்கள், டில்லி, மும்பை, சென்னை, பெங்களுரு, ஐதராபாத், அகமதாபாத், புனே, கூர்கான், ஜெய்பூர், கோல்கட்டா ஆகிய, 10 முக்கிய நகரங்களில் வசிக்கின்றனர். இவற்றில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், மும்பை மற்றும் டில்லியில் வாழ்கின்றனர். சர்வதேச அளவில், கடந்த ஓராண்டில், பெருஞ் சொத்து வைத்துள்ள தனி நபர்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவாக, 1,99,235 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 27.8 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதில், 23 சதவீதம், அதாவது, 6.50 லட்சம் கோடி டாலர் அளவிலான சொத்து மதிப்பு கொண்ட பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2,170 ஆக உள்ளது.
உலகளவில் உள்ள, பெருங் கோடீஸ்வர்களில், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. கடந்த ஓராண்டு நிலவரப்படி, உலகளவில் உள்ள, பெருங் கோடீஸ்வரர்களில், ஆண்களின் எண்ணிக்கை, 1,75,730 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை, 23,505 ஆகவும் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எச்ஐவி" தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்!
மனிதர்களிடம் எயிட்ஸ் நோயை
தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸ் தொற்றை முற்றாக அழிக்கவல்ல சாத்தியக்கூற்றை
தாங்கள் கண்டறிந்திருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை
தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கு சமமான தொற்று
குரங்குகளிலும் காணப்படுகிறது. குரங்குகளிடம் காணப்படும் இந்த தொற்றை
எஸ்ஐவி தொற்று என்று மருத்துவ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். மனிதர்களின்
எச்ஐவி தொற்றைவிட நூறுமடங்கு அதிக வீரியம் மிக்க வைரஸ் குரங்குகளிடம் இந்த
எஸ்ஐவி தொற்றை ஏற்படுத்துகிறது.இப்படியான எஸ்ஐவி வைரஸ் தொற்றுக்கு உள்ளான குரங்குகளிடம் நடத்திய ஆய்வில், அந்த குரங்குகளின் எஸ்ஐவி தொற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியும் என்று அமெரிக்காவில் இருக்கும் ஓரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
நேச்சர் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளின்படி, எஸ்ஐவி வைரஸ் தொற்றுக்குள்ளான 16 குரங்குகளுக்கு இந்த விஞ்ஞானிகள் தங்களின் புதிய தடுப்பு மருந்தை அளித்தார்கள். அதில் ஒன்பது குரங்குகளிடம் இருந்த எஸ்ஐவி தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டதாகவும் மற்ற ஏழு குரங்குகளிடம் தங்களின் தடுப்பு மருந்து செயற்படவில்லை என்றும் கூறும் இந்த விஞ்ஞானிகள், இதே முறையை பயன்படுத்தி மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கான தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ பேராசிரியர் லூயிஸ் பிக்கர், குரங்குகளின் எஸ்ஐவி தொற்றை முற்றாக குணப்படுத்தி விட்டோம் என்று உறுதியாக மார்தட்டிக்கொள்ள முடியாது என்றாலும், இன்றைய நிலையில், பாதிக்கப்பட்ட 16 குரங்குகளில் ஒன்பது குரங்குகளின் உடலில் எஸ்ஐவி வைரஸ் தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டது என்றே எல்லாவிதமான மருத்துவ பரிசோதனைகளும் தெரிவிக்கின்றன. இது ஒரு முக்கிய, நம்பிக்கையளிக்கக்கூடிய சாதனை என்றார்.
குரங்குகளை பாதிக்கும் இந்த எஸ்ஐவி வைரஸ் மனிதர்களை தாக்கும் எச்ஐவி வைரஸைவிட நூறுமடங்கு தீவிரமானது. இதன் பாதிப்புக்குள்ளான குரங்குகள் இரண்டே ஆண்டுகளில் இறந்துவிடும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இவற்றால் உயிர் பிழைக்க முடியாது.
இப்படிப்பட்ட மோசமான வைரஸை குணப்படுத்துவதற்கு மருத்துவ ஆய்வாளர்கள் வேறொரு வைரஸின் உதவியைத் தான் நாடினார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல். பாலின நோய்களை தோற்றுவிக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சிஎம்வி என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் வைரஸை எடுத்துக்கொண்ட ஆய்வாளர்கள், இந்த வைரஸின் தீவிரமான பரவும் தன்மையை மட்டும் விட்டுவிட்டு, அதன் நோய் உண்டாக்கும் தன்மையை நீக்கிவிட்டார்கள்.
இந்த சிஎம்வி வைரஸானது, ராணுவ வீரனைப் போல உடலின் ஒவ்வொரு செல்லிலும் சென்று அங்கிருக்கும் எஸ் ஐ வி வைரஸை தாக்கி அழிக்கும் வேலையை செய்தது என்கிறார் பேராசிரியர் பிக்கர்.
அதே சமயம், இந்த சிஎம்வி வைரஸ் சில குரங்குகளின் உடலில் ஏன் செயற்படவில்லை என்பதற்கான விடை தங்களிடம் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். எஸ்ஐவிக்கும் சிஎம்விக்கும் இடையிலான போரில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு சமயம் சிஎம்வி வைரஸ் வெற்றி பெறுகிறது, அதேசமயம் மூன்றில் ஒரு சமயம் எஸ்ஐவி வைரஸ் வெற்றி பெறுகிறது என்கிறார் அவர்.
தமது ஆய்வின் முடிவுகள் எச் ஐ வி தொற்றை முற்றாக குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறும் பேராசிரியர் பிக்கர், குரங்குகளிடம் தாங்கள் கையாண்ட அதே அணுகுமுறையை மனிதர்களின் எச் ஐ வி வைரஸ் தொற்றை குணப்படுத்தவும் கையாள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான அமெரிக்க அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளின் மனிதர்களின் எச்ஐவி தொற்றுக்கான தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------