ஒரு கம்யூனிஸ்ட் கலைஞனின் கதை.

பாவலர் ஓம் முத்துமாரி.
இவரை அவரது நிகழ்ச்சி ஒன்றின் போதுதான் தற்செயலாக பார்த்தேன்.
அதுவும் கூட்டம் எதற்காக கூடியுள்ளது என்று எட்டிப்பார்த்த போதுதான் அவரின் கலை நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.
ஆனால் சிறிது நேரம் பொழுதை போக்கலாம் என்று பார்க்க ஆரம்பித்து இரண்டு மணி நேர நிகழ்ச்சியின் முடிவில்தான் பிரமிப்புடன் வெளியேறினேன்.
நாட்டு நடப்பை பொதுவுடமை தத்துவங்களை இனிமையான் வசிகரிக்கும் குரலில் பாடுவதுடன் ஆட்டமும் பாவலர் போடுவதை காண கொடுத்துவைக்க வே ண்டும் .அ திலும் அவர் கிழவியாக வந்து காதில் பாம்படத்துடன் சுழன்று  ஆடி  நாட்டு  நடப்புகளை கிண்டல் செய்து பாடுவதை பார்க்க வேடிக்கையாக இருப்பதுடன் மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் வைத்துவிடும்.
அவர் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை .



பாவலர் ஓம் முத்துமாரி மறைந்துவிட் டார்.
 மண்ணில் புதையுண்டாலும் 70 ஆண்டுகாலம் ஆடிய அவரது கால்களின் சலங்கை ஒலிச் சத்தம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
...

“வறுமை நமக்கு மாமன் முறை
சிறுமை நமக்கு தம்பி முறை
பொறுமை நமக்கு அண்ணன் முறை
பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை
எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்குது பாத்தீகளா - நல்லஏரைப் பிடித்து உழுகும்தங்கக் கம்பிகளா’’

கரகரப்பான அவரது குரலில் அவரே எழுதி அவரே மெட்டமைத்துப் பாடிய பாடல் களில் தமிழகமே கட்டுண்டு கிடந்தது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய முத்து மாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான கலைஞராகப் பரிணமித்துக் கட்சி யின் மேடைகளில் எப்போதும் அரிவாள் சுத்தியல் நட்சத்திர பேட்ஜ் அணிந்துதான் ஆடுவார்.பாடுவார்.தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அநேகமாக மாதத்தில் 20 நாட் களாவது கட்சிமேடைகளில் ஆடிப்பாடும் ஓர் இடதுசாரிக் கூத்துக்கலைஞராகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் அவர்.

1948ல் மகாத்மாகாந்தி சுடப்பட்டபோது முத்துமாரிக்கு வயது 15. துடிப்புமிக்க இளை ஞனாக காங்கிரஸ் இயக்கத்தில் முத்துராம லிங்கத் தேவரின் ஓர் உண்மைத் தொண்ட னாக மதுரையில் சுற்றிக்கொண்டிருந்தார். காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லீம் என்கிற பொய்ப் பிரச்சாரத்துக்கு ஆளான இந்துக்கள் முஸ்லீம் மக்களைத் தாக்கியும் அவர்களின் கடைகளைச் சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டார்கள். மதுரையிலும் அப்பாவி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கு டன் சுட்டது இந்துதான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லும் விதமாக தெருத்தெருவாக ஊர்வலங்கள் நடத்த தேவர் தன் தொண்டர்களை அனுப்பினார்.

“சொந்த சுதந்திரம் தந்த நம் காந்தியை
இந்து கொன்றான் என்றால் இருப்பதா இறப்பதா?
வந்தே மாதரம்....’’
என்று பாடியபடி அந்த ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்தார் முத்துமாரி.

அந்த வயசிலேயே அரசியலில் எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? என்று அவரிடம் கேட்டபோது,“அந்த வயசென்ன அதற்கு முன்பே ஏழு வயசிலேயே நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறிப் பாட ஆரம்பித்துவிட்டேன். நான் பிறந்த ஊரான சோழவந்தானில் என் அப்பா ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரிடம் கணக் கப்பிள்ளையாக வேலை பார்த்துக்கொண் டிருந்தார். அப்போது கருப்பபிள்ளை மற்றும் சிங்கப்பிள்ளை என்று இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் சோழவந்தானில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

காங் கிரஸ் பள்ளிக்கூடம் ஒன்றும் அவர்கள் நடத்தி வந்தார்கள். அது இலவசப் பள்ளி. பை நிறையப் புளியமுத்து (எழுத்துப் பழக) கொண்டுபோனால் போதும். வெள்ளைக் காரன் நடத்திய பள்ளியில் மாசம் ஒண்ணே கால் ரூபாய் பணம் கட்ட வேண்டும். நான் காங்கிரஸ் பள்ளியில் படித்தேன். அங்கு பக லில் பாடம் நடக்கும். ராத்திரிகளில் கூட்டம் நடக்கும். எங்களுக்கு அதில் பாரதியார் பாட்டு, வள்ளலார் பாட்டு எல்லாம் பாடக் கற்றுத்தரு வார்கள். வெங்கிடு சுப்பய்யா, பூர்ணசுந்தரம் பிள்ளை என்று ரெண்டு பேர்தான் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது. காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் நடக்கும் மேடைகளில் ஏற்றி இந்தப் பாடல்களைப் பாட வைப்பார்கள். முத்துராமலிங்கத் தேவர் வந்து எங்களுக்குப் பாடமெல்லாம் நடத்தியிருக்கிறார். எந்தத் தலைவர் வந்தாலும் பள்ளிக்கு வந்து பையன் களிடம் பேசுவது வழக்கம்.


பாட்டு மட்டும் இல்லை.

படிக்கிற பையன்கள் குரூப் ஒன்று வாடிப் பட்டி வீரப்பன் என்கிற மாணவன் தலைமை யில் எந்நேரமும் இதே வேலையாக ஊரைச் சுற்றிக்கொண்டிருப்போம். எங்களுக்கு மெயின் வேலை என்னான்னா போஸ்ட் ஆபீஸ் மீது கல்லெறிவது, தண்டவாளத்தைப் பேர்த்து எடுப்பது, அப்புறம் தினசரி வந்தே மாதரம் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக ஊர் வலம் போவது, முடிவில் காங்கிரஸ் ஆபீசில் போய் மிட்டாய் வாங்குவது. இதில் பலமுறை போலீஸ் வந்து பசங்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். அங்கே ஆளுக்கு நாலு அடி கொடுத்து விரட்டிவிடுவார்கள். அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்தால் அங்கே யும் பொறுக்க முடியாத அடி விழும். ஆனால் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படமாட் டோம். அடியைத் துடைச்சிட்டு மறுநாளும் கல்லெறியப் போய்விடுவோம்.

காங்கிரஸ் இயக்கப் பாடல்களை ஏழு வயசிலேயே பாடத் துவங்கிய முத்துமாரியின் மனம் இயல்பாகவே கலையின் பாதையில் பால்யம் தொட்டே பயணப்படத் துவங்கியது. நாட் டில் எது நடந்தாலும் அது பற்றிய பாடல்களைத் தேடிப்பிடித்து மனப்பாடம் செய்து தெருக்க ளில் பாடும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டது.1949ல் அப்பா காலமாகிவிட்ட பிறகு குடும்பத்தோடு சொந்த ஊரான செவலூருக்கு வந்தார். அப்போது பஞ்ச காலம். புண்ணாக்கு தான் சாப்பாடு. ஆகவே அதை புண்ணாக்குப் பஞ்சம் என்பார்கள். என்ன பஞ்சமாக இருந் தாலும் அவரது கலைப் பைத்தியம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவர் தரத்துப் பையன்களாக ஒரு ஆறு பேரைச் சேர்த்துக் கொண்டு சினிமா மெட்டில் சில பாடல்களை எழுதி பயிற்சி கொடுத்து ஒரு குழுவை உருவாக் கினார். அன்று தொடங்கிய பயணம்தான். 1952 வாக்கில் அவர் மதுரையில் பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகச் செயலாளராக இருந்தார். கட்சி மேடைகளில் பாடுவார். அவ ரும் உசிலம்பட்டி மொக்கையனும் ஆபிசிலேயே கிடப்பார்களாம்.. அவரும் பாடுவார். பின்னா ளில் அவர் ராஜபாளையத்தில் எம்.எல்.ஏ. ஆனார். அதுபற்றி ஒரு நேர்காணலில் முத்து மாரி கூறுகிறார்: “மூக்கையாத் தேவர்தான் எனக்கு பாவலர் என்கிற பட்டத்தைக் கொடுத்தார். அதன் பிறகுதான் நான் பாவலர் ஓம் முத்துமாரி என்று அழைக்கப்பட்டேன்.

தேவர் பேசும் மேடைகளில் நான் முன்பாகப் பாடுவேன். சோழவந்தான், புதுக்கோட்டை, கிருஷ்ணாபுரம், நத்தம்பட்டி, சிவகாசி, மதுரை என்று முத்துராமலிங்கத்தேவர் பேசப் போகிற எல்லா ஊர்களுக்கும் நானும் போய் மேடையில் பாடுவேன். தேவர் என்னைத் தம்பி என்றுதான் அழைப்பார். அவர் இளை ஞர்கள், சிறுவர்கள் யாரையுமே ‘டே’ போட்டு பேசவே மாட்டார். தம்பி என்றுதான் அழைப் பார். பார்வர்டு பிளாக் மேடையில் கம்யூ னிஸ்டுகளைத் திட்டியும் நான் பாடியிருக் கிறேன். காலம் என்னைப் பின்னாளில் கம் யூனிஸ்ட் கட்சிக்கே கொண்டுவந்து சேர்க் கும் என்று அப்போது தெரியாதில்லையா?ஆனால் தேவர் கேட்டுக்கொண்டதற் கிணங்க மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி யில் தோழர். பி. ராமமூர்த்திக்காக பிரச்சாரம் செய்யப் போனேன். அப்போது அவர் சிறை யில் இருந்தார். ஜெயிலில் இருந்தபடியே அவர் ஜெயித்தார்.முத்துராமலிங்கத் தேவர் மறைவுக்குப் பிறகு பார்வர்டு பிளாக் ஐந்தாக உடைந்தது.

அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ்நாடு பார்வர்டு பிளாக், மதுரை பார்வர்டு பிளாக், ஆண்டித்தேவர் பார்வர்டு பிளாக், ஜனநா யகக் காங்கிரஸ் என்று பல பெயர்களில் மூக் கையாத் தேவர், சசிவர்ணத் தேவர், முத்தி ருளத் தேவர், ஆண்டித்தேவர், காலேஜ் ஹவுஸ் ஓனர் சிங்கராயர் போன்ற தலைவர் கள் ஆளுக்கொரு திசையாகப் போனார்கள். நான் மதித்து உழைத்த இயக்கம் இப்படி யாகிப் போனதில் மனம் வெறுத்து நான் ஊருக்கே திரும்பிவிட்டேன். அதற்கு பிறகு நான் மதுரைப் பக்கமே போகவில்லை.அதன்பிறகு கல்யாணம் செய்துகொண்டு முக்கூடல் சொக்கலால் பீடிக் கம்பெனியில் சேர்ந்து பீடி விளம்பரத்துக்காகக் கூத்து போட ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் சொக்கலால் கம்பெனியை விட்டு விலகி மணி மார்க் பீடிக்காக நாடகம் போட்டேன். பீடியைப் பற்றி பாட்டு ஒன்றும் இருக்காது. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள்தான் கூத் தில் இருக்கும். இடையிடையே பீடி விளம் பரம் செய்துகொள்வார்கள். என்னுடைய கம்பெனி ஏஜெண்டு கூத்தாடியாகத் திரிவது எனக்குப் பிடிக்கவில்லை என்று முதலாளி சொன்னார். நான் உன் கம்பெனியே வேண் டாம் என்று முழுக்குப் போட்டு-விட்டு கூத் தாடப் போனேன்.

முதலாளிக்கே பிடிக்காத கூத்து, கூட வாழும் பெஞ்சாதிக்குப் பிடிக் குமா? என்னுடைய மனைவிக்கும் இப்படி ஒரு கூத்தாடியோடு வாழப் பிடிக்கவில்லை. ரெண்டு மாசம் என்னோடு இருப்பாள். பிறகு பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு ஆத்தா வீட்டுக்குப் போய்விடுவாள்.மனைவி கூட வாழாததால் வீடற்றுத் திரிந்தார் முத்துமாரி. கூத்துக்குப் போய் விட்டு கழுகுமலையில் பொதுமடத்தில் படுத்துக்கொள்வது, கூத்து இல்லாத நாட் களில் கையில் காசும் இல்லாது சத்திரங் களில் பட்டினியாகப் படுத்துக்கிடப்பது, காடு கரைகள் தோப்பு துரவுகளில் பொழுதைக் கழிப்பது என்பதாக மாறும் வாழ்க்கை. இந்த நாட்களில் சுடுகாட்டுக் கருப்பையா, அருவா வேலு, கொள்ளைக்காரத் தங்கையா போன்ற கொள்ளையர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் பின்னாட் களில் போலீஸ் என்கவுண்டர்களில் கொல் லப்பட்ட பிறகு அவர்களின் வாழ்க்கையை கதைப் பாடல்களாக வடிக்க இந்த நட்பு ஒரு காரணமாகவும் உதவியாகவும் இருந்தது. இப்பாடல்களைக் கோணங்கி தான் நடத்திய கல்குதிரை இதழில் வெளியிட்டுள்ளார். ஒரு ஆறு மாசம் கொளக்கட்டாக் குறிச்சி என்கிற ஊரில் பலசரக்குக் கடை நடத்திப் பார்த் திருக்கிறார். என்ன வேலை பார்த்தாலும் மதியம் மூணு மணிக்குப் பிறகு கடையைப் பூட்டி ஆடப்போகிற வாழ்க்கை எதைத்தான் விட்டு வைக்கும்? அவர் மிகவும் மதித்த கரகக் கலைஞர் ஓம் பெரியசாமியின் மறைவுக்குப் பின் தன் பெயரோடு ஓம் என்பதைச் சேர்த்துக் கொண்டு பாவலர் ஓம் முத்துமாரியானார்.“நிகழ்ச்சிகளில் பொதுவுடைமைப் பாடல்களைப் பாடுவதைக் கேட்டு சங்கரன் கோவில் சிபிஎம் செயலாளர் கவிஞர் சி.ப. பெருமாள் மற்றும் தோழர் சர்க்கரை என்னைப் பார்த்துப் பேச வந்தார்கள்.

சிவகாசி ஞானன் ஜனசக்தியில் என்னைப் பற்றி எழுதி என் பாடல்களைப் பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்தார். ஆனாலும் எந்த இயக்கத்தோடும் சேராமல்தான் இருந்தேன். பீடி போடப் போகும் கடைகளில் ஒன்றாக மேலாண்மை பொன்னுச்சாமியின் கடையும் இருந்தது. அப்போது அவர் டவுசர் போட்ட பையனாக எனக்கு அறிமுகம்.”1986ல் தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் முதன்முதலாகக் கலந்து கொண் டார். அப்போது முதல் அவர் இயக்கத் தோழ ராகிவிட்டார். அவரது தனிப்பாடல் களைத் தொகுத்துப் புத்தகமாக தமுஎசவின் நெல்லை மாவட்டக்குழு “வரப்பு வெளியில் றெக்கை ரெண்டு’’ என்கிற பெயரில் சென்னை புக்ஸ் வெளியீடாக 90ல் கொண்டுவந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார்கள். “அப்புறமாக தோழர் கே. பாலகிருஷ்ண னும், தோழர் எஸ்.ஏ. பெருமாளும் வந்து, “நீ தமுஎச மேடைகளில் பாடினால் போதாது, கட்சி மேடைகளிலும் பாட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டதால்,


“சேவல் கூவிருச்சு
செவ்வானம் வெளுத்திருச்சு
செம்மலர் பூத்து மணம் பரப்புதுங்க - நாட்டில்
தீக்கதிர் போல ஒளி தெரியுதுங்க....’’

என்று புது ரூட்டில் வண்டி கிளம்புச்சு.” என்று சிரித்தபடி நேர்காணலில் சொன்னார் முத்துமாரி.

1986க்குப் பிறகு இடதுபக்கம் முழுமை யாகத் திரும்பிய அவரது பயணம் இறப்பு வரை இடையறாது தொடர்ந்தது. சாகும்போது அவருக்கு வயது 85. வறுமைக்கும் வாழ்க்கை நெருக்கடி களுக்கும் மத்தியில் 1933ல் பிறந்து வெள் ளைக்காரனை எதிர்த்தும், பிறகு காங்கிரசை எதிர்த்தும், பாஜகவை எதிர்த்தும் மக்கள் மத்தியில் சுயமரியாதைக் கருத்துக்களையும் பொதுவுடைமைக் கருத்துக்களையும் பரப்பு கிற அரசியல் கலைஞராக ஜொலித்து நின்ற வாழ்க்கை பாவலர் முத்துமாரியின் வாழ்க்கை, அவருடைய சுயசரிதையை நாடக்கலைஞர் ச.முருகபூபதி “கிழக்குத் திசையின் கூத்துக் கலைஞன் ஓம் முத்துமாரி” என்கிற நூலாக அனன்யா பதிப்பக வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார். தன்னைப் போன்ற சக கலைஞர்கள் வாழ்வுரிமை காத்திடும் நோக்குடன் 1985 முதல் நலிந்த கலைஞர் நல வாழ்வுச் சங்கம் நடத்தினார்.

தலித் கலைஞரான வாத்தியார் சோலையப்பனைத் தலைவராகவும், ஓம் முத்துமாரியைச் செயலாளராகவும் கொண்டு அச்சங்கம் முறையாக இயங்கி வருகிறது. தமிழக அரசால் கலைமாமணி விருது அளிக் கப்பட்ட கௌரவமும் அவருக்கு உண்டு. ஏராளமான கலைஞர்களுக்கு ஓய்வூதியமும் உதவிகளும் கிடைக்க அயராது பாடுபட்டார். தன் மகன் முருகனையும் ஒரு கூத்துக் கலைஞராக ஆக்கிவிட்டார்.தமுஎகசவால் மூ.சி.கருப்பையா பாரதி நினைவாக நிறுவப்பட்ட ‘நாட்டுப்புற கலைச் சுடர்’ விருது முதன்முறையாக பாவலர் ஓம் முத்துமாரிக்குத்தான் வழங்கப்பட்டது.70 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கொள் கைப் பிடிப்புடன் இடையறாது இயங்கிய தனித்துவமிக்க கலைஞரான பாவலர் ஓம் முத்துமாரியின் கால்சலங்கைகள் இன்னும் நம் மனங்களில் கம்பீரத்துடன் குலுங்குகின்றன.

“எங்கே இருக்குது பாலம்? அது
எப்படி இருக்கிற பாலம் - அந்த
பொங்குமாக்கடலுக்குள்ளே இருக்குன்னு
புலம்புறே அலங்கோலம்.
ராமர் ரதமுன்னு ஊரு ஊராப் போயி
ரத்தக் களறியா ஆக்குன
ராத்திரி பகலா செங்கல்லைச் சுமந்து
நாட்டையே கேவலமாக்குனே
கண்ணுக்குத் தெரிஞ்ச பாபர் மசூதி
யைகடப்பாறைகளாலே தாக்கினே - கண்ணுக்குகாணாத பாலத்தை இடிக்காதே என்று
கடபுடா வேலைகள் செய்யிறே...
எங்கே இருக்குது பாலம்?

                                                                                                                           -ச.தமிழ்ச்செல்வன்




 ஓவியம் : ஸ்ரீரசா
நன்றி:கருப்பு கருணா [முகனூல் பக்கம்]
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?