ரகசியங்களை திருடும் வைரஸ்
ரகசியங்களை திருடும்
புதிய வைரஸ்
இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
இத்தனைக்கும் இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும் வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ், கடைகளில் கார்டு உரசும்போது அந்த கார்டில் உள்ள கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், காலாவதி தேதி, சிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட்டு எண்ணையும் திருடி விடுகிறது. எனவே, பிஷ்ஷிங் மெயில் போன்றவை குறித்து உஷாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள ஒயர்லெஸ் நெட்வொர்க்குகள், பொது இணையதள மையங்களில் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என அவசர நிலைக்கான இந்திய கணினி செயல்குழு (சிஇஆர்டி) அறிவுரை கூறியுள்ளது.
இதை சமாளிக்க் பண பரிவர்த்தனை பாதுகாப்பு விஷயத்தில் நாம் கூடுதலாக கவனம் செலுத்தினால் போதும். பாதுகாப்பதும், அதை நழுவ விடுவதும் நம் கையில்தான் உள்ளது. உங்கள் டெபிட் கார்டுக்கான தனிநபர் அடையாள எண் (பின்) கேட்கும் வியாபார மையங்களில், ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
மேலும் பின் நம்பர் அழுத்தும் இடத்திலும், கார்டு உரசும் இடத்திலும் வித்தியாசமாக எதாவது பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். என்னதான் நவீன வசதிகள் வந்தாலும், கையில் பணம் கொடுத்து வாங்கினால்தான் பாதுகாப்பு என்று பழைய நடைமுறைகளையே பயன்படுத்துபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------