செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இணைய வாக்கு [ஐ.வோட் ]

suranஇணையம் மூலமாக வாக்கைப் பதிவுசெய்வது ஐ-வோட். இணையத் தொடர்பு இருக்கும் ஒரு கணினி யின் மூலம் ஒரே இணையதளத்தில் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவுசெய்யும் வாக்கு உங்கள் கணினியில் இல்லாமல் வேறு இடத்தில் உள்ள மைய சர்வரில் சேமித்துவைக்கப்பட்டு, அட்டவணையிடப்பட்டு, தேர்தல் முடிவுகளில் உள்ளடக்கப்படும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கணினி, கைபேசி, அல்லது தேர்தலுக்காக அரசு ஏற்படுத்தும் கணினி மையம் என்ற ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.
 
ஒன்று, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதில்லை. வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கான நேரமும் சிரமமும் மிச்சம். எனவே, ஐ-வோட் பயன்பாட்டில் இருந்தால், வீட்டில் இருந்தவாறே பலரும் வாக்களிக்க முன்வரலாம். 2009-ல் நடந்த பொதுத்தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித் தனர். இந்த சதவீதம் ஐ-வோட் முறையில் உயரும்.
இரண்டு, இப்போது இருப்பதுபோல் லட்சக் கணக்கான வாக்குச்சாவடிகளும் அவற்றுக்கான பாதுகாப்புச் செலவும் மிச்சம். இதனால் மட்டுமே, பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். சட்டம்- ஒழுங்குக்கும் எந்த ஆபத்தும் வராது. கடந்த முறை, எட்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் இருந்தன. இரண்டரை லட்சம் போலீஸ்காரர்களும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். பல லட்சம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடிகளை நிர்வகித்தனர்.
மூன்று, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாது. ஒரு தேர்தல் கணினி சேவை மையத்தில் மதியம் 12 மணிக்குக் கலவரம் ஏற்பட்டு, வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். ஐ-வோட் மூலம் போடப்படும் வாக்குகள் மைய சர்வரில் சேமிக்கப்படுவதால், வாக்குப் பதிவு பாதியில் நிறுத்தப் பட்டாலும், அதுவரை பதிவான வாக்குகள் பத்திரமாக சர்வரில் இருக்கும். மறு வாக்குப்பதிவில், அதுவரை வாக்களிக்காதவர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும். எனவே, வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது சிரமம், மறுவாக்குப்பதிவு செய்வது எளிது.
நான்கு, இப்போது ஒரு வாக்குச்சாவடியில் நான்கு அல்லது ஐந்து அரசு ஊழியர்கள் இருந்தால் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். வாக்காளரை அடையாளம் காண்பது, வாக்கு செலுத்த அனுமதிப்பது, வாக்கு செலுத்தப்பட்டதற்கான குறியை இடுவது என்று பல வேலைகள் உண்டு. இவை எதுவுமே ஐ-வோட்டில் வேண்டாம். இந்த அனைத்து வேலைகளையும் கணினியே செய்யும்.
suran
உங்களை அடையாளம் கண்டால் மட்டுமே அது வாக்களிக்க அனுமதிக்கும். நீங்கள் ஒருமுறை வாக்களித்தால், மறுமுறை வாக்களிக்க முடியாது. அல்லது உங்களை மீண்டும் அடையாளப்படுத்திக்கொண்டால் மட்டுமே மீண்டும் உங்கள் வாக்கை மாற்றியமைக்க முடியும்.
ஐந்து, நாடு முழுவதும் ஒரு சில நாட்களில் மொத்தத் தேர்தலையும் நடத்தி முடிக்கலாம். இப்போது இருப்பதுபோல ஒரு மாதத் தேர்தல் திருவிழா நடத்த வேண்டியதில்லை.
ஆறு, நம்மில் பலர் வியாபாரம், வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்கிறோம். நாம் சென்ற இடத்திலிருந்து இணையதளம் மூலமாக வாக்களிக்கலாம். விடுதிகளில் உள்ள மாணவர்கள் வாக்களிக்காமல் இருப்பது அதிகரித்துவருகிறது. இவர்களுக்கும் ஐ-வோட் பயனுள்ளதாக இருக்கும்.
ஏழு, முதியோர், உடல் ஊனமுற்றோர், உடல் நலம் குன்றியவர்கள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கலாம். பார்வையற்றவர்கள்கூட ஹெட்ஃபோன், குரல் அடையாளக் கருவி போன்றவற்றைப் பயன்படுத்தி யாருடைய துணையும் இல்லாமல் வாக்களிக்கலாம்.
 
ஐ-வோட் முறையைச் செயல்படுத்துவதில் இரண்டு அடிப்படைச் சிரமங்கள் உள்ளன. ஒன்று, கல்வியறிவு. இரண்டு, ஐ-வோட் பயன்படுத்த எல்லா இடங்களிலும் இணைய வசதி இருக்க வேண்டும். இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருந்தாலும், அதில் 16.4 இணையச் சந்தாதாரர்கள்தான் உள்ளனர் என்றும், எட்டில் ஏழு பேர் கைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் டி.ஆர்.ஏ.ஐ. கூறுகிறது. ஐ-வோட் முறையில் உள்ள கடும் சவாலும் சிரமமும் இல்லாமல் இல்லை.
ஐ-வோட் முறையை எதிர்ப்பவர்களின் காரணங்கள் தொழில்நுட்பரீதியானது. உலக அளவில் நம்பகமாக வாக்களிக்கும் முறை என்பது “ஒருவர் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும், அவ்வாக்கு ரகசியமானதாக இருக்க வேண்டும், அளிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி, வாக்குச் சாவடியில் வாக்களிப்பதன் மூலமாகவும், அதற்குப் பிறகு, வாக்குச்சீட்டுகள் பாதுகாக்கப்பட்டு வெளிப்படையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதன் மூலமாகவும் மேற்கண்ட விஷயங்களை உறுதிசெய்ய முடியும்.
ஐ-வோட் முறையிலும் ஒருவர் தன்னிச்சையாக, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்ய முடியும். ஆனால், அவ்வாக்கு ரகசியமாக உள்ளதா, அளிக்கப்பட்ட வாக்குகள் வேறு ஒருவரால் மாற்றப்பட்டனவா, அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனவா என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.
suran
உண்மையான வாக்காளர் நீங்கள்தான் என்பதைக் கணினி கண்டறிய நவீன மின் அட்டை தேவைப்படும். எஸ்தோனியா நாட்டில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் ஒரு மைக்ரோசிப் உண்டு. அதை அடையாளம் காண்பதற்கான சாதனமும் கணினியில் உண்டு. அல்லது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அந்த மென்பொருளைப் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், மின் கையொப்பம் போன்ற தொழில்நுட்பங்களும் தேவை. இவையெல்லாம் இருந்தால் மட்டுமே நம்மால் ஐ-வோட் அளிக்க முடியும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது சாத்தியமில்லைதான்.
சில மென்பொருட்களைப் பயன்படுத்தி, அளிக்கப்பட்ட வாக்குகளை மைய சர்வரில் பாதுகாத்து எண்ணிக்கையில் சேர்க்க முடியும். மைய சர்வரில் இந்த வாக்குகள் திருடப்படாமல் இருப்பதைக்கூட ஓரளவுக்கு உறுதிசெய்யலாம். ஆனால், உங்கள் வீட்டில் உள்ள கணினியில் வைரஸ் இருந்தாலோ, அல்லது வேறு வகையில் உங்கள் வாக்குகளைத் திருத்தியனுப்பும் வசதியை வேறு ஒருவர் பெற முடிந்தாலோ, ஐ-வோட் முறை நம்பகத்தன்மையை இழந்துவிடும்.
உலகில் பல தனியார் நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் ஐ-வோட் முறையைப் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் உள்ளன. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளும் இதுதான்,
“ஐ-வோட் முறையைப் பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டில் அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும்.” முதல்கட்டமாக எங்கெல்லாம் அஞ்சல் வாக்குகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஐ-வோட் முறையின் பயன்பாட்டை நாம் அறிமுகப்படுத்தலாம்.
எஸ்தோனியா என்ற வட ஐரோப்பிய நாட்டில், 2013-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் 1,33,808 பேர் இணையதளம் மூலமாக ஐ-வோட் என்ற வாக்கைச் செலுத்தினார்கள். இது அந்தத் தேர்தலில் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளான 6,30,050-ல் கிட்டத்தட்ட 21% ஆகும். இதற்கு முன்னர், 2011-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1,40,764 பேர் ஐ-வோட் செலுத்தினர்.
எஸ்தோனியாவின் மக்கள்தொகை 13 லட்சம்தான். இங்கு 80% மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் மூலமாக கைபேசி இணையப் பயன்பாடும் அதிகம். 2005-ல் ஐ-வோட் எனப்படும் ‘இணையவாக்கு’ இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம் நாட்டு தபால் வாக்குக்குச் சமம். 2005-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 9,317 பேர் மட்டுமே அங்கு ஐ-வோட் பயன்படுத்தினர்.
பின்னர், படிப்படியாக ஐ-வோட் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 2007-ல் நடந்த அந்த நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் 30,243 பேரும், 2011-ல் நடந்த எஸ்தோனியா நாடாளுமன்றத் தேர்தலில் 1,40,764 பேரும் ஐ-வோட் அளித்தனர்.
ஐ-வோட் அங்கு பிரபலமாகிவருவதால், தேர்தல் செலவுகளும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டிய செலவும் நேரமும் மிச்சம். இதனால், தேர்தலில் வாக்காளர்களின் பங்கு உயரவில்லை என்றாலும், வரும்காலங்களில் இது உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுபோன்ற ஐ-வோட் ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து மற்றும் பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஐ-வோட் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்கள், வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கும் அமெரிக்க ராணுவத்தில் தங்கள் மக்கள் வேலை செய்யும்போது அவர்களின் ஐ-வோட்டை ஏற்றுக்கொண்டன. நம் நாட்டில்கூட குஜராத் மாநிலம் காந்திநகர் நகராட்சித் தேர்தலில் 2011-ல் சிலரால் ஐ-வோட் பயன்படுத்தப்பட்டது.
 
- இராம. சீனுவாசன்,
இணை பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
 seenu242@gmail.com
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
 
பாஜக தேர்தல் அறிக்கை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது.எப்படியாவது இந்தியாவில் மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் மோடி குறி உள்ளது தெரிகிறது.நல்லாட்சி தருவதாக வாக்களிக்களித்து வாக்குகளைக் கேட்கும் அதே வேளையில் ராமர் கோவிலை கட்டுவோம் என்ற மதவெறி வாக்கையும் தருகிறது.ஏற்கனவே கடலில் உள்ள மண் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று சேது சமுத்திரத் திட்டத்தையே கேள்விக் குறியாக்கியது போதாது என்று ராமர் கோவில் உறுதி வேறு .இன்றைக்கு இந்தியா எதிர் நோக்கியுள்ள பிரச்னைகள் சவால்களுக்கு ராமர் கோவில்தான் மாற்றா?தீர்வா?இது மதவெறி அல்லாது வேறு என்ன?எத்தனை கோவில்கள் பாழடைந்துள்ளது அதை முதலில் கண்டு கொளுங்கள்.புதிய கோவில் கள் இப்போது தேவை இல்லை.இருக்கும் சாமிகளை கும்பிடவே நாள் காணாது.

பாஜக தேர்தல் அறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது. | படம் ஆர்.வி.மூர்த்தி.

suran
==
===========================================================

வருமான வரி

 சேமிப்பது எப்படி?

 
வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு.
80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)
இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.
2. ஆயுள் காப்பீடு
இதிலேயும் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.
suran
3. வீட்டுக்கடன் அசல்
நாம் வீட்டுக்கடன் வாங்குபோது மாதா மாதம் EMI கட்டவேண்டும். இதை இரண்டாக பிரிப்பார்கள் 1. அசல் 2. வட்டி. ஆரம்பத்தில் அசலை குறைவாக எடுப்பார்கள், வட்டி அதிகம் எடுக்கப்படும். ஒருவர் கட்டக்கூடிய அசலை இந்த வருமான வரி விலக்கில் காண்பிக்க முடியும்.
4. தேசிய சேமிப்புத் திட்டம் (NSC)
இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
இதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாதுகாப்பு அதிகம் விரும்புவர்கள் இதில் முதலீடு செய்வார்கள். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். 8.7% தற்போதைய வட்டி. ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. இந்த கணக்கை தபால் நிலையம் மற்றும் வங்கியில் தொடரலாம்.
6. தபால் நிலைய வைப்பு நிதி
இதற்கு ஒருவர் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும், அத்துடன் 8.5% வட்டி கிடைக்கும், இதிலும் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். இது ஒரே ஒரு தடவை செய்யக்கூடிய முதலீடு.
7. முதியோர் சேமிப்பு திட்டம் (SENIOR CITIZEN SAVINGS SCHEME)
இதில் முதலீடு செய்பவர்களுக்கு வயது குறைந்தது 60 வருடம். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு 55 வருடம். ஒவ்வொரு காலாண்டும் வட்டி கிடைக்கும், வருடத்திற்கு 9.2% இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். வருமான வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குதான். இதில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து ஆண்டு வரை எடுக்க முடியாது.
8. 5 வருட வங்கி டிபாசிட்
பாதுகாப்பு கருதுபவர்கள் ஐந்து வருடம் இதில் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒரு லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை.
9. கல்விக் கட்டணம் (TUITION FEES)
ஒருவர் தன் குழந்தைக்கு செலவிடும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகும் கல்வி பயிற்றுக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) இந்த பிரிவில் எடுத்துகொள்ளலாம். இது வருடா வருடம் வேறுபட வாய்ப்புள்ளது. நாம் செலவிடும் கல்விக் கட்டணம் எல்லாவற்றையும் இதில் காண்பிக்கமுடியும்.
10. முத்திரைத் தாள் பதிவு கட்டணம்
ஒருவர் நிலம்,வீடு வாங்கும்போது, இந்த செலவுகள் இன்றியமையாதவை. அதற்கு ஆகக்கூடிய செலவுகளான ஸ்டாம்ப் டூட்டி, பதிவு கட்டணம் ஆகியவற்றை இந்த 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கில் (1 லட்சம் வரை) காண்பிக்கமுடியும்.
11. மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)
இதில் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம்(லாக் இன் காலம்) குறைவு.
suran
சாராம்சம்
மேலே சொன்ன 11 வகையான திட்டத்தில் அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரே திட்டத்திலோ, பல திட்டத்திலோ சேர்ந்து சேமிக்கலாம். வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் இதை திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும்.
இதில் சில நாம் செய்யக்கூடிய செலவுகளை காண்பிக்கவும், சில பிரிவுகள் மேலும் நாம் சேமிக்கவும் உதவுகிறது. அவ்வாறு சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். இதை ஒரு தொல்லையாக கருதாமல் நமக்கு சேமிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து செயல்படுவது நல்லது.
வேலைக்கு சேர்ந்தவுடன் பெரும்பாலோர் சொல்லும் சொல், எனக்கு வருமானம் போதவில்லை, அதுவே சில வருடங்களுக்கு பிறகு, என்னுடைய வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்கிறார்கள். இதைப்பற்றி நான் படித்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது, அது ஆங்கிலத்தில் சொல்வது எளிது, நான் தமிழிலும் முயற்சித்திருக்கிறேன்.
“A fine is a tax for doing wrong. A tax is a fine for doing well.”
நகைச்சுவையாக சொன்னால் "அபராதம் என்பது ஒருவர் செய்யும் தவறுக்கான வரி, அதே சமயம் வரி என்பது ஒருவர் நன்றாக செயல்பட்டால் அரசாங்கம் நமக்கு விதிக்கும் அபராதம்”
எப்படி பணம் சம்பாதிப்பது நம்முடைய கடமை என்று நினைக்கிறோமோ அதே மாதிரி சம்பாதித்த பணத்தை சரியாக சேமிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இதற்கு சோம்பல்பட்டு தேவையற்றவைகளை முதலீடு செய்து அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்தவித பிரோயோஜனமும் இல்லை. சேமிப்போம், நன்கு பயன் பெறுவோம்.
 --நன்றி ;தமிழ் இந்து   
 padmanaban@fortuneplanners.com

==========================================================================