மூடப்படும் சர்க்கஸ் அகாடமி




சிரக்குணி சர்க்கஸ் அகாடமி
இந்தியாவின் ஒரே சர்க்கஸ் அகாடமியும் மூடப்படவுள்ளது. இதை அகாடமி என்று கூறுவது கூட ஒரு நக்கல் என்று அதை நேரில் பார்த்தவர்கள் கூறுவார்கள். இதன் கூரையில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகள் கூட கீழே விழுந்து நொறுங்கி பலகாலம் ஆகி விட்டது. இந்த அகாடமி கண்ணூர் மாவட்டத்தில் தலசேரி அருகே சிரக்குணி எனும் ஒரு தூங்குமூஞ்சி கிராமத்தில் உள்ள ராஜ்கமல் டாக்கீஸில் இந்த அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு இப்போது ஒன்பது மாணவர்கள் தான் பயிலுகிறார்கள்.
அவர்களும் நேபாளம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் இருந்து வந்த சர்க்கஸ் குடும்பத்து குழந்தைகள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க ஒரு ஆசிரியர்தான் உள்ளார். இந்த அகாடமியை மூட தீர்மானித்துள்ளனர். தலசேரியை இந்திய சர்க்கஸின் தொட்டில் என்று கூறுவார்கள். தலசேரி பிரிட்டிஷ் அரசின் எல்லைச்சாவடியாக இருந்தது. இந்தியாவில் சர்க்கஸ் முதன்முதலாக அரங்கேறியதும் இங்குதான். சர்க்கஸ் ஆர்வலர் விஷ்ணு பந்த் சாட்ரே என்பவரால் 1880ம் ஆண்டு பிரபல கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவப்பட்டது. அது தலசேரிக்கு வந்தது. இந்திய சர்க்கஸின் முன்னோடியான இவர் உள்ளூர் பேசல் எவான்சலிக்கல் மிஷன் பள்ளியில் களரிப்பயட்டு ஆசிரியராகவும், சீருடற்பயிற்சி ஆசிரியராகவும் இருந்த கீலேரி குன்னிகண்ணனைச் சந்தித்தார்.
அவருடைய திறமை சாட்ரேயைக் கவர்ந்தது. இருவரும் சேர்ந்து 1888ம் ஆண்டில் தலசேரியில் ஒரு சர்க்கஸ் பள்ளியைத் தொடங்கினர். அந்தப் பள்ளியில் படித்த பலர் நாடெங்கும் பிரபலமான சர்க்கஸ் கலைஞர்களாக அடையாளம் காணப்பட்டனர்.” அப்போது வேலைகள் கிடையாது. சர்க்கஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. மக்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர்.” என்று ஜம்போ மற்றும் ஜெமினி சர்க்கஸ் நிறுவனங்களின் 94 வயதான உரிமையாளர் ஜெமினி சங்கரன் கூறுகிறார்.ஆனால் காலம் மாறி விட்டது. இந்த சர்க்கஸ் பள்ளி 2010ம் ஆண்டில் அகாடமியாக மாற்றப்பட்டது. “ இதை நாங்கள் பெரிதாக எதிர்பார்த்தோம். ஒவ்வொரு குழுவிலும் இருபது மாணவர்களை சேர்த்து உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்ற முயன்றோம் என்று அதன் தலைமை நிர்வாகி வேலாயுதன் கூறுகிறார்.
மேலும் நான்கு ஆண்டுகளாகியும் ஒரு கேரள மாணவன் கூடச் சேரவில்லை என்று அவர் கூறுகிறார். அவருடைய கூற்றை தர்மடோம் தொகுதியின் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.நாராயணன் கடுமையாக ஆட்சேபிக்கிறார். இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடாமல் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுவது எவ்வாறு சரியானதாக இருக்கும் என்று அவர் வினவுகிறார். இது ஒரு அரசு நிறுவனம். இதை வியாபார நிறுவனமாக பார்க்கக்கூடாது. நிதியைக் காரணம் காட்டி இதை மூடக்கூடாது என்று தர்மடோம் பஞ்சாயத்து தலைவர் பி.எம்.பிரபாகரன் விமர்சிக்கிறார். வணிக நோக்கத்தோடு ஒரு அரசு நிறுவனத்தைப் பார்க்கக் கூடாது என்று சர்க்கஸ் அகாடமிக்காக குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
சட்ட மன்ற உறுப்பினர் நாராயணன் மேலும் கூறுகையில் அகாடமி இருக்கும் வாடகைக் கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அரசு அகாடமிக்காக ரூ.1.25 கோடி நிதியளித்தும், வசதிகளைக் கூட்டுவதற்கும், உடற்பயிற்சிக்கூடம் அமைக்கவும் நேர்மையான முயற்சிகள் இல்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். இதை மூடுவது எளிது என்று கூறும்போது பிரபாகரன் இதற்கு புத்துயிர் ஊட்டுவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் சர்க்கஸ் கம்பெனிகள் மாணவர்களை அனுப்பி வைக்க தயாராக உள்ளன என்றும் கூறுகிறார்.இந்த அகாடமியில் பல முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இதை ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச அகாடமியாக மாற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் நிதியோடு இதை ஒரு சீருடற்பயிற்சிக்கூடமாக மாற்றுவதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார்ப்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அகாடமிக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.90 ஆயிரம் செலவிட்டு வருகிறது. இதற்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கு பத்து ஏக்கர் நிலத்தை குண்டூர் மாலா பகுதியில் ஒதுக்குவது குறித்த முன்மொழிவை இன்றைய நிலையில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பி.பாலகிரண் கூறுகிறார். மேலும் கண்ணூரில் இருக்கும் விளையாட்டு வளாகத்துடன் இதை இணைக்கும் முன்மொழிவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படவில்லை.தகுந்த முன்னேற்பாடுகளுடன் அகாடமி திறக்கப்படாததுதான் இதன் பிரச்சனை என்று முன்னாள் சர்க்கஸ் கலைஞர் ஸ்ரீதரன் சம்பாட் கூறுகிறார்.

இங்கு ஒரு பாடத்திட்டமும், பயிற்சி அட்டவணையும் இல்லை. வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பயிற்சிக்காக இங்கு வருகிறார்கள் அவர்களின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பும் இல்லை. இங்கு போதுமான சாதனங்களும், ஆசிரியர்களும் இல்லை. இவைகளை எல்லாம் சீர்செய்து அகாடமிக்கு புத்துயிர் அளித்து மீண்டும் நடத்துவதற்குரிய பணிகளை கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு செய்திட வேண்டும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?