கச்சத் தீவு
இந்தியாவால் இலங்கையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட ஒரு தீவாகிவிட்டது கச்சத்தீவு. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு அனுகூலமாகவும் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களின் பிடி தளரவும் கச்சத்தீவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
தமிழகத்தின் ஒருபகுதியாக இருந்த கச்சத்தீவை எப்படியாவது மீண்டும் மீட்டுவிட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது கேலிக்குரியதாகவே மத்திய ஆட்சியாளர்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீர் அறிவியல் நோக்கில் கச்சத்தீவைச் சுற்றி நிகழ்ந்துவரும் மாற்றங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது, உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கு முக்கியமான ஒன்று. வரலாற்று ஆவணங்களின் படி, கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது.
1974இல், இந்திய அரசு, கச்சத்தீவை தமிழ் நாட்டின் எதிர்ப்பையும் மீறி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததால், இந்திய மீனவர்கள், தங்கள் மீன்பிடி படகுகளை ஓய்விற்கு நிறுத்த முடியாமலும், வலைகளை உலர வைக்க முடியாமலும், ஏன் அதன் தூரத்து சுற்று வட்டாரங்களில் மீன்பிடிக்க இயலாமலும், பலவகையான உயிர் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
எந்த அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஆனால், பூமியின் அமைப்பையும், நடைபெறும் புவியியல் மாறுதல்களையும் படம் எடுக்கும் செயற்கைக்கோள் படங்களையும், புவியின் தரைமட்டம் மற்றும் கடல் கீழ் தரைமட்டம் ஆகியவற்றையும் காண்பிக்கக் கூடிய வான் வெளிசார், 'ஈ டோப்போ' படங்களையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த, ஒரு நிலப்பரப்பு என்பது தெரிகிறது. கிட்டத்தட்ட, 7,000 கி.மீ.க்களுக்கு மேலான நீளமுடைய, இந்திய கடலோரப் பகுதி, ஒரு நேர்கோடு போல் இல்லாமல், குவியமாகவும், குழியாகவும் மாறி மாறி அமைந்து வளைந்தும், நெளிந்தும், சில இடங்களில் முக்கோண வடிவமாகவும், கடலுக்குள் நீட்டியபடியும் அமைந்துள்ளது.
இவ்வமைப்பு, இந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் கடற்கரையின், இதுபோன்ற அமைப்பிற்கு, இந்தியத் தட்டில் ஏற்பட்டபடி இருக்கும் வளைவுகள் மற்றும் வெடிப்புகளே காரணம். நீர் அறிவியலும் கடலின் பயணமும் வங்கக் கடற்கரை ஓரமாக ஆண்டுதோறும் நிகழ்ந்துவரும் இரண்டு முக்கிய நீரோட்டங்களும், கடலோரப் பகுதிகளை தொடர்ந்து வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் அறிவியலில் இதை வாட்டர் கரண்ட் என்கிறார்கள். இந்திய கிழக்கு கடற்கரை ஓரத்தைப் பொறுத்தவரை, இந்த நீரோட்டமானது, பெப்ரவரி முதல் ஒக்ரோபர் வரை, (ஒன்பது மாதங்களில்), தெற்கே கன்னியாகுமரியில் இருந்து இலங்கையைச் சுற்றி, வடக்காக கடற்கரை ஓரமாக ஓடி, மேற்கு வங்கத்தில் இருந்து தெற்காக, கடிகாரம் சுற்றுவது போல் திரும்பி, அந்தமான் வரை செல்கிறது.
நவம்பர் முதல் ஜனவரி வரை (மூன்று மாதங்கள்) உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில், அந்தமானில் இருந்து திரும்பி, இந்நீரோட்டம் கடிகாரச் சுற்றிற்கு, எதிர்மறையாகச் சுற்றி வங்கதேசக் கடற்கரை ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரை வழியாக, தெற்காக ஓடி, தமிழக கடற்கரையை அடைகிறது.இதுபோன்று, ஒரு வருடப் பருவத்தில், இரு திசைகளிலும் சுற்றும் கடலோர நீரோட்டம், அலைகள் கொண்டு வரும் கடல் கீழ் மணலோடு, வங்கக் கடலில் கலக்கும் இந்திய நதிகளின் மணலையும் தன்பால் இழுத்துக் கொண்டு சுற்றும் போது, குவியான மற்றும் முக்கோண கடற்கரை ஓரங்களை அரித்தும், குழிவடிவக் கடலோரப் பகுதிகளில் மணல் துகள்களை கொட்டவும் செய்கிறது.
இந்த இரண்டு இந்நீரோட்டங்களால் கொட்டப்பட்ட மணலே திருநெல்வேலி, ராமநாதபுரம்,தூத்துக்குடி கடலோரப் பகுதியில் முயல்தீவு, உப்புத் தண்ணீர் தீவு, நல்லத் தண்ணீர் தீவு என்று பல தீவுகளாகவும், நதிகளின் முகத் துவாரங்களில் மணல் மேடுகளாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் கடற்கரை மணல் மேடுகளாகவும் தென்படுகின்றன.
இவ்வாறு தெற்காக, மூன்று மாதங்களில் ஓடும் கடல் நீரோட்டம், தமிழகத்தில் வேதாரண்யத்திற்கும், யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையே நுழைந்து, கடிகாரச் சுற்றிற்கு எதிர்மறையாகச் சுற்றுகிறது. இவ்வாறு, கடல் நீரோட்டம் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றாக வடக்கிலும், கடிகாரம் சுற்றும் திசையில் தெற்கிலும், ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுற்றுவதால், நீரோட்டச் சலனமற்ற, இவ்விரு நீரோட்டங்களுக்கும் இடைபட்ட ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம், ராமேஸ்வரம், பிசாசு முனை வரையிலும் நீரோட்டம் கொண்டு வந்த மணல் கொட்டப்பட்டு, நீளமான நிலப்பகுதியாக உருவாகி உள்ளது. இவை, செய்மதிப் படத்தில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் நன்கு தெரிகிறது. பிசாசு முனையில் இருந்து, வடக்கிழக்கே திரும்பும் இதே நீரோட்டம் ராமேஸ்வரம், பிசாசு முனையில் மணலைக் கொட்டிய பின், எஞ்சிய மணலை பிசாசு முனைக்கு வடகிழக்கே கொட்டி, கச்சத்தீவாக உருவாக்கி உள்ளது.
ராமேஸ்வரம், பிசாசு முனையில் இருந்து கச்சத்தீவு வரை, இவ்விரு நிலப்பகுதிகளுக்கும் இடையேயுள்ள தொடர்ச்சி, கடல் மட்டத்திற்கு கொஞ்சம் கீழே மஞ்சள் நிறத்தில், செய்மதிப் படத்தில் நன்கு தெரிகிறது. கடல் நீரோட்டம், இதே திசையில் சுற்றினால், கூடிய விரைவில் ராமேஸ்வரத்தில் உள்ள பிசாசு முனையும், கச்சத்தீவும் இன்னும் 750 ஆண்டுகளில் இணைந்துவிடும் என்று நீர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேற்கே ராமநாதபுரத்தில் இருந்து, கிழக்கே மண்டபம் வரை காணப்படும் மணல் மேடுகள், 3,500 ஆண்டுகள் வயது கொண்டவையாக, கார்பன் வயதுக் கணிப்புகள் காண்பிப்பதால், ராமேஸ்வரம், பிசாசு முனை, கச்சத்தீவும், 3,500 மற்றும் 3,000 ஆண்டுகள் வயது கொண்டவையாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால், யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள இந்தியாவை நோக்கி, வளைந்து காணப்படும் டேல்ப் தீவு உள்ளிட்ட தீவுகள், 4,000 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட களிமண், மணல், மணற்பாறைகள் கொண்ட படுகைப்பாறைகளாகும்.
ஆகவே, இவ்வுண்மைகள் எல்லாம், கச்சத்தீவு நிலவியல் ரீதியாக, இந்தியாவின் ஒரு பாகமே என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் இந்தியா – இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்ப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என கச்சை கட்டிக்கொண்டு நீதிமன்றத்திலும் வாதிடுகிறது
இந்திய அரசியல் கச்சத்தீவை தமிழர்களுடையதாக்குவதில் தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
நன்றி:மலரும்.
-----------------------------------------------------
உலகை தற்போது மிரட்டிவரும் எபோலோ வைரஸ், மேற்கு ஆபிரிக்காவின் கொங்கோ மாநிலத்தில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியது. அதன் காரணமாகவே இதற்கு 'எபோலா' எனப் பெயர் வந்தது.
1976இல் தொடங்கி ஆபிரிக்காவில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோயான இது, தற்போது தெற்கு ஆபிரிக்காவில் வேலை செய்துவிட்டு நாடு, எபோலோ எச்சரிக்கை காரணமாக நாடு திரும்பும் பலருக்கும் இந்த வைரஸின் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவி மும்பை, தமிழ்நாடு போன்ற இடங்களில் எபோலோ வைரஸ் தொற்றுடன் வந்த பல கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஏன் பயம்? எதனால் பரவும்? ஆபிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது மிகக்குறைவு என்பதும் மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததாலும் இதுபற்றிய பயம் உலக மக்களை அச்சுறுத்தக் காரணமாக இருக்கிறது. எபோலா வைரஸானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல.
விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. என்ன அறிகுறிகள்? ஒருவருக்கு எபோலா வைரஸின் தொற்று ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும் என்பதையும், அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.
முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய ஐந்து முதல் பத்து நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள். எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும். காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும். குறிப்பாக தலைவலி வரும்.
இந்த வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும். கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும். வைரசின் தாக்குதல் அதிமாகிவிட்டால் எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும். வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும். வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.
குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும். சிலருக்கு நெஞ்சு வலி வரும்.
அதுமட்டுமின்றி மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும். உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும். எப்படித் தடுக்கலாம்? நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால் பரிசோதனைக் கூடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும்போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும். எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப் போட்டு கழுவி விட வேண்டும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துவந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.