25 இல் ”வாலி”[ப]க் கவிஞர்/
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!
வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை. சில்க்காக இருந்தால் சந்தன நிறம். இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
'பொய்க்கால் குதிரை', 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்', 'ஹே ராம்' என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!
'எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்' - கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தகங்கள் எழுதிஇருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை கவிஞர் வாலி. பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தக் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும். ரமணத் திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப் பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி இதுவரை திரையிசைப் பாடல்களாக 15,000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப் பாடல்கள் கணக் கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போகும்!
1966-ல் வாங்கிய MSQ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக்கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்திவைத்திருக்கிறார் வாலி!
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்சுக்கு எழுதி அனுப்பியதுதான் மிகவும் வெற்றிபெற்ற 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' பாடல். இதைஅனு பவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந் திருக்கிறார்!
17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி. அவற்றில் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக் குருவி, ஒரே ஒரு கிராமத்திலே இப்படி எழுதிக்கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
1966-ல் 'மணிமகுடம்' படப்பிடிப்பின்போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. 'அவதார புருஷன்' விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்-சிவாஜி இருவ ருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர் எப்பவும் 'என்ன ஆண்டவனே' என்று அழைப்பார். சிவாஜிக்கு வாலி 'என்ன வாத்தியாரே'!
பத்மஸ்ரீ, பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத் தமிழ் மாநாடு போன்றவற்றில் இவரது பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம், ஏ.எல்.ராகவன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன், பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமை விரும்பி அல்ல. எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக்கொடுத்தால் கவிதை வந்து விடும்!
வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு, திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தைவிட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
வாலியின் இஷ்ட தெய்வம் முருகன். எப்பவும் அவரின் உதடுகள் 'முருகா' என்றுதான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுது வதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு, அவர்களின் திறன், ஸ்டைல் எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாகப் பேசுவார். போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்ப்பொடி ரொம்பப் பிரபலம். 'இன்று தோசை, மிளகாய்ப்பொடிக்கு வழியிருக்கா' என்று அடிக்கடி எம்.ஜி.ஆர். வந்துவிடுவாராம்!
எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
2005-ல் ராஜ் டி.வி. வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக 'என்றென்றும் வாலி' என விழா எடுத்தது. 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள். வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணிவிடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
ஸ்ரீரங்கத்தில் 'பேராசை பிடித்த பெரியார்' என்னும் சமூக நாடகத்துக்கு 'இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்?' என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
நன்றி:விகடன். | ||
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- |