நீதிபதி குன்ஹா தீர்ப்பு சரியானதே!-
மக்களின் வரிப்பணமே
ஜெயலலிதா
சொத்து குவிக்க
பயன்படுத்தப்பட்டுள்ளது!
-மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில் ஒரு விமர்சனம் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 53.60 கோடி ரூபாயை ஊழல்களினால்தான் பெற்றார் என்பதை நீதிபதி சரியான முறையில் நிரூபணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இது நேர்மையான வாதமா?
இந்த விமர்சனம் துவக்கநிலையில் பார்த்தால்கூட செல்லத்தக்கது அல்ல. நீதிபதிக்கு இப்பணத்திற்கு ஆதாரத்தை தேட வேண்டிய அவசியமில்லை. குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரின் தெரிந்த வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் அவரிடத்தில் இருந்தாலே அவர் குற்றவாளி என்று நிரூபிக்க நீதிபதிக்கு போதுமான ஆதாரமாகும்.
ஊழல் தடுப்புச்சட்டம் 1988ன் பிரிவு (13)(1)(இ) இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது, முதலாவது பாகம் குற்றம் சாட்டும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிந்த வருமானத்தின் அளவை நிரூபிக்க வேண்டும்,
அரசு ஊழியரின் சொத்துக்கள் அவரது வருமானத்திற்கு அதிகமானது என்பதையும் வெளிக்கொணர வேண்டும். இந்த நிபந்தனை பூர்த்தியானவுடன் அரசு ஊழியரின் கரங்களிலுள்ள அவரது வருமானத்திற்கு அதிகமான சட்டவிரோதமான பணம் ஊழல்கள் மூலமாக பெறப் பட்டதுதான் என்று சட்டம் முடிவு செய்கிறது.
இரண்டாவது பாகம் செயல்பாடு குறித்து பேசுகிறது, குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை அவரிடமே சுமத்துகிறது. அரசு ஊழி யர் தான் வைத்திருக்கும் அதிகமான பணமோ அல்லது சொத்தோ தெரிந்த வழிகளில் ஈட்டப்பட்டது தான் என்பதை அவர் திருப்திகரமாக நிரூபிக்க வேண்டும்.
இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா கீழ்க்கண்ட சரியான முடிவுக்கு வந்தடைந்துள்ளார். ஜெயலலிதாவினால் 53 கோடி ரூபாய் பெறுமான பணமும் சொத்துக்களும் அவர் முதல்வராக இருந்த 1991லிருந்து 1996 வரையிலான காலகட்டத்தில் சட்டரீதியான தெரிந்த வழிகளில்தான் ஈட்டப்பட்டது என்பதை அவரால் திருப்திகரமான முறையில் விளக்கமளிக்க முடியவில்லை என்பதுதான் நீதிபதி வந்தடைந்துள்ள முடிவு.
குற்றம்சாட்டப்பட்டவரே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது அநீதியானது என்ற வாதம் தற்போது முன் வைக்கப்படுகிறதே?
ஏனெனில் பொதுவாக குற்றவியல் நீதி இயல் குற்றம் நிரூபிக்கும்வரை அவர் நிராபராதியே எனக் கூறுகிறது.
ஊழல் தடுப்புச்சட்டத்தின் நோக்கம் அரசு ஊழியர்களின் ஊழல்களை தடுப்பது தான். இச்சட்டப் பிரிவுகளின் பின்னணியிலுள்ள கொள்கையானது ஒரு அரசு ஊழியர் ஒரு அதிகார நிலையில் உள்ளார் என்பதும் அவர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்துகிறதுஅவரது வருமானத்திற்கு அதிகமான பணமோ அல்லது சொத்தோ இருந்தால் அது அவரது அதிகார நிலையை அல்லது அவரின் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பெறப்பட்டது என்ற முடிவுக்கு சட்டம் வருகிறது.
பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திர மாக உள்ள அவர் அரசு மற்றும் தனிப்பட்ட நிதி பரிமாற்றங்களின்போது மிகவும் கவனமாகவும் மனசாட்சி யுடனும் இருக்க வேண்டும் என சட்டம் கோருகிறது.
இதனால்தான் அரசு ஊழியர்களின் பணி விதிகளில் ஒன்றாக ஒரு அரசு ஊழியர் தான் ஒரு சொத்தை அல்லது ஏதாவது செல்வத்தை வாங்க வேண்டுமானால் அவ்ர் தனது மேலதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.ஏனெனில் அவரது தனிப்பட்ட சொத்துக்கள் கூட கண்காணிப்பில் தான் இருக்கும்.
தெரிந்த வருமானத்திற்கான ஆதாரங்கள் என்று எதை அர்த்தப்படுத்துகிறீர்கள்?
ஏனெனில் ஜெயலலிதா தனது கட்சி ஆதரவாளர்களும் அவரது நலம் விரும்புபவர்களும் இந்த 53 கோடி ரூபாயை அளித்ததாக விளக்கமளித்துள்ளாரே?
இது மாதிரி அன்பளிப்புகள் எல்லாம் தெரிந்த வருமானத்திற்கான ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால் என்ன ஆகும்?
அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது கருப்புப் பணத்தை அபிமானிகள் நலம் விரும்பிகளிடமிருந்தும் பரிசுகளாக பெற்றதாக கூறிவிட்டு தப்பித்து விடுவார்கள். மேலும் அத்தகைய நன்கொடைகள் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்திற்கு வந்தவுடன் தான் கொடுக்கப்படுகின்றன.
அதற்கு முன்னதாக கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். தெரிந்த வருமானத்திற்கான ஆதாரங்கள் என்பது சட்டத்தில் கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது தெரிந்த வருமானத்திற்கான ஆதாரம் என்பது சட்டப்பூர்வமாக அல்லது சட்ட வழிகளில் பெற்ற வருமானம் ஆகும். அப்படி பெற்றதற்கான ரசீதுகள் சட்டப்படி அல்லது அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் வழக்கில் தெரிந்த ஆதாரங்கள் என்ன?
அவருடைய வருமானம் அவரே கூறியபடி மாதம் 1 ரூபாய் மற்றும் அவர் முதல்வர் ஆவதற்கு முன்ன தாக அவரின் வங்கி வைப்பு நிதிகளிலிருந்தும் அல்லது பங்குகளிலிருந்தும் கிடைக்கும் வட்டி ஆகியன தவிர வேறொன்றுமில்லை.
ஆனால் ஜெயலலிதா கூறிய வெவ்வேறு சொத்துகள் அவருடைய கரங்களில் இல்லையே.
அச்சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர் களான 2 லிருந்து 4 வரை முறையே சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகளின் உடைமையாகும் என்று கூறப்பட்டுள்ளதே?
இந்த கம்பெனிகள் வெறும் காகிதத்தில்தான் உள் ளன என்றும் அவற்றில் எந்த வியாபாரமோ அல்லது தொழிலோ நடக்கவில்லை என்பதை நீதிபதி கண்ட றிந்துள்ளார்.
முதல் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் சொந்த நலனுக்காக சொத்துக்களை வாங்குவதற்காக பணத்தை கொண்டுவருவதற்காக ஒரு வழியாக இந்த கம்பெனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்தது.
ஜெயலலிதா முதல்வரான பின்னர் தான் 18 கம்பெனி கள் உருவாக்கப்பட்டன.
அதில் 10 கம்பெனி கள் ஒரேநாளில் ஒரே மாதிரியான நிறுவன அமைப்பு முறைகளு டன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த கம்பெனிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன . குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எந்த வருமானத்திற்கான ஆதாரமும் இல்லை.
இதை வேறொரு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், குற்றம் சாட்டப்பட்டவர்களான சசிகலா, இள வரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வெறுமனே தங்களது பெயர்களைத்தான் அளித்துள்ளார்கள் மற்றும்சட்டவிரோதமான முறையில் பணத்தை கொண்டு வருவதற்காக அந்த கம்பெனிகள் வெறும் டம்மிகளாக உருவாக்கப்பட்டவைதான் என்பதை நீதிபதி கண்டறிந் துள்ளார்.
சொத்துக்களை வாங்கியதை பதிவு செய்த துணைப்பதிவாளரே அரசு தரப்பு வழக்கறிஞரின் முதன்மையான சாட்சியாவார்.
அவர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டு அனைத்து சொத்து பதிவுகளும் அங்குதான் மேற் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பல சமயங்களில் சொத்துக்களை விற்றவரின் பெயரும் வாங்குபவரின் பெயரும் வெற்றிடமாக விடப்படும் அவை முதல்வரால் பின்னால் நிரப்பப்படும் என்ப தால் என்றும் கூறியுள்ளார்.
100 கோடி அபராதம் விதித்தது மிக அதிகமானது என்று கருதப்படுகிறது. ஏனெனில் இவ்வழக்கில் சொத்துக்குவிப்பு வருமானமாக இதில் பாதி தொகைதானே கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
முதலாவதாக சொத்து வாங்கிய பத்திரங்களிலுள்ள தொகையானது உண்மையான சந்தை மதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.
அதனால் மொத்த மதிப்பாக 54 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்படுவது மிகவும் குறைந்த மதிப்பீடாகும்.
மேலும் இந்த சொத்துக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவிக்கப்பட்டுவிட்டன.
உதாரணமாக கொடநாடு எஸ்டேட் 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஒரு சாதாரண படிப்பறிவில்லாத நபர் கூட இது மிகவும் கேலிக்குரிய குறைவான தொகை என்று கூறி விடுவார்.
எனவே நான் 100 கோடி ரூபாய் அபராதம் என்பது அதிகமானது என்று கருதவில்லை. நீதிபதி தண்டனைக்கான ஏற்கத்தக்க சட்டரீதியான காரணத்தை கூறியுள்ளார்.
வழக்கில் நீதிபதி குற்றத்தை நிருபிப்பதையும் தண்டனை அளிப்பதையும் துரிதப்படுத்தியுள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுவாக ஒரு வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட பின்னர் அத்தண்டனை குறித்த தீர்ப்பு உத்தரவு பின்னொரு நாளில் தள்ளி வைக்கப்படும்.
ஏனெனில் முன்வைக்கப்பட்ட தண்டனையின் மீது வாதங்கள் நடத்துவதற்காக பிரதிவாதிக்கு காலம் அளிக்கப்படுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆனால் இதில் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுவது சரியான வாதமா?
சட்டத்தின் கீழ் இது தேவையில்லை.
உண்மையில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 309(2) ஆனது 1978ல் திருத்தப்பட்டது.
அத்திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையின் மீதான தனது வாதத்தை முன்வைப்பதற்காக எந்த ஒத்தி வைப்பும் அளிக்கப்படக் கூடாது.
உச்சநீதிமன்றத்தின் சில பழைய தீர்ப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றம் நிருபிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கப்பட்ட தண்டனை குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் தனது வாதத்தை கூறுவதற்காக சில நாட்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புகள் மரண தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில்தான் வழங்கப்பட் டுள்ளன. அவை இந்த வழக்கிற்கு பொருந்தாது.
அதிமுகவினரால் இந்த தீர்ப்பு நேர்மையற்றது என்று கூறப்பட்டு ஜெயலலிதா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்கொலை மற்றும் தீக்குளிப்பு முயற்சிகளும், போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேருந்துகளை இயக்கவில்லை. அதிமுகவினர் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இவையெல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல்களில்லையா?
அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாமா?
இப்படிப்பட்ட எதிர்ப்பு அரசியல் நீதித்துறையை நிர்ப்பந்தப்படுத்துகின்றன இவற்றை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
இது நிச்சயமாக நீதிமன்றத்தின் அதிகாரத்தை சீர்குலைக்கும் செயல்தான். மிக முக்கியமாக சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதாகும்.
ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்றால் சம்பந்தப்பட்ட அந்த தனிநபர் தீர்ப்புடன் திருப்தியடையவில்லை எனில் சட்டரீதியான முறைகளை மட்டுமே அவர் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துள்ளார். மாநிலம் முழுவதும் பந்த் அல்லது வேலை நிறுத்தம் நடத்துவது கண்டனத்திற்கு உரியது.
இவை தன்னெழுச்சியானவை என்று கூறி விட முடியாது.
ஏனெனில் நடத்தப்பட்ட முறைகளிலேயே இவை திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்படுபவை என்றுதெரிகிறது.
இதில் கடுமையான விஷயம் என்னவெனில் அரசு எந்திரமே இதனை ஆதரிப்பதும் இந்த போராட்டங் களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் உதவுவதும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதும்தான்.
மேலும் பொது வாக போலீஸ் அனுமதி அளிக்காத இடங்களில் போராட் டங்களுக்கு அனுமதி அளிப்பதும் கடுமையாக கருதப்பட வேண்டும்.
உதாரணமாக கடந்த 6ம்தேதியன்று எம்ஜிஆரின் சமாதிக்கு முன்பாகவும் மெரினாவில் சில இடங்களிலும் தர்ணா நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற கட்சிகளுக்கு இந்த இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை. இந்த போராட்டங்கள் தன்னெழுச்சியானவை அல்ல,
அரசினால் ஆதரிக்கப்பட்டு, திட்டமிட்டு அவர்களின் தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்பட்டவை என வெளிப்படையாகவே தெரிகிறது.
தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமை யில் அரசியல் கிரிமினல்மயமாவதை நீக்குவது குறித்த 170வது சட்ட ஆணையத்தின் அறிக்கையின் ஆணையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அந்த அறிக்கையானது ஒரு தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டவுடன் அவர் பிரதிநிதி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறது.
அவரின் குற்றத்தின் தன்மைக்கு போதுமான ஆதராம் உள்ளது என்று சுட்டிக்ககாட்டப்பட வேண்டும் என்று கூறுகிறது. மக்களின் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் திருத்தத்தை தொடர்ந்து குற்றம் நிருபிக்கப்பட்ட பின்னர் ஒரு பிரதிநிதி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா?
சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளுக்கு விரிவான காரணங்களை அளித்துள்ளது. அது குற்றப்பத் திரிகை பதிவு செய்யப்பட்டவுடனேயே அந்த தருணத்திலிருந்தே பிரதிநிதியின் தகுதி நீக்கம் தொடங்குகிறது என்று கூறுகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆட்சேபிப்பார்கள் என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஏனெனில் அரசியல் குற்றமயமாவதினால் ஜனநாயகமானது கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. எனவே கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது.
அரசியல் கிரிமினல்மயமாவதை தடுப்பதற்கு என்ன சட்டநடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தேர்தல் பரப்புரைகளில் கருப்புப் பணம் நுழைவதை தடுக்க வேண்டும். தேர்தல் பரப்புரைகளுக்கு கட்சிகள் அளவற்று செலவிடுவதை தடுக்க வேண்டும். தற்போது நமது பேரவைகள் பல்வேறு கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்பிக்களையும் எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளன. இவர்களில் சிலர் மீது கொலை மற்றும் பாலியல் வல்லுறவுக்காக குற்றம்சாட்டப்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளன.
இவர்கள் எப்படி நமது பிரதிநிதிகளாக இருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே ஏதாவது சட்டரீதியான ஒரு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
அப்போதே கருப்புப் பணத்தை வைத்துள்ள கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ள வேட்பாளர்களை தடுப்பதற்கும் அவர்கள் அடியாள் பலத்தை கொண்டு ஓட்டு சேகரிப்பதை தடுப்பதற்குமான சிறந்த முறையாக இருக்கும்.
.இன்று பல கட்சிகள் சட்டபேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் அவர்கள் முன் மொழியும் வேட்பாளர் களுக்கு மனு அளிப்பதற்கே அதிக நிதி வசூலிக்கின்றன.
எனவே அவர்கள் நுழையும்போதே பண பலம் நாடாளுமன்றத்தில் நுழைவதற்காக அடித்தளமாக தீர்மானிக்கப் படுகிறது.
இந்த நடைமுறையானது தடுக்கப்பட வேண்டும்.
இந்த நடைமுறையானது தடுக்கப்பட வேண்டும்.
தமிழில் : சேது
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------