ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வேலை இல்லா பட்டதாரி...

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 1 கோடியைநெருங்கிவிட்டது .
 கடந்த 2014 ஜூ ன் மாதம் வரையிலும் 94 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர் என்றும் அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அதாவது கடந்த 2014 ஜூன் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளி யிட்டுள்ள கணக்குப்படி 94 லட்சத்து 58 ஆயிரத்து 161 ஆகும்.
இதில் 48 லட்சத்து 32 ஆயிரத்து 235 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பதிவு செய்துள்ள பட்டதாரிகள்ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் பிற்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் (40 லட்சம்) இருக்கிறது. 
பதிவு செய்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக் கையை பொறுத்தவரை, கலை பட்டதாரிகள் - 4,05,483, அறிவியல் பட்டதாரிகள் - 5,48, 417, வணிகவியல் பட்டதாரிகள் - 3,09,799, பொறியியல் பட்ட தாரிகள் - 1,81,231.இதுதவிர பிஎட் முடித்த முதுநிலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை என்றும் எங்கள் ஆட்சியில் கணிசமான அளவில் வேலை வாய்ப்புகளை பெருக்கியுள்ளோம் என்றும் தமிழக அரசு தம்பட்டம் அடிப்பது நியாயம் தானா? தமிழ்நாட்டின் நிலைமை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிலைமை இதுதான்.
தாங்கள் படித்த படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கும், விடுபடாமல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிப்பதற்கும் இளைஞர்கள் படும்பாடு கொ ஞ்சநஞ்சமல்ல.இன்னொருபுறம் பதிவு புதுப்பித்தல் நடந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பல்வேறு துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் கேட்கப்படும் தகுதியுடைய பதிவு எண்களை நேர்முகத் தேர்விற்காக அனுப்பி வைப்ப தற்கு சம்பந்தப்பட்ட பதிவுடைய பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அலையாய் அலையும் அவலம் தொடர்கதையாய் உள்ளது. 
நியாயமான முறையிலோ அல்லது தகுதியுடைய பதிவு எண்களையோ உரிய நேரத்தில் வேலைவாய்ப்பு அலுவலர்கள் அனுப்பி வைப்பதில்லை.
இதனால் ஏற்படும் மன உளைச்சலினால் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர்.
குறிப்பிட்ட சில பதிவு எண்களில் குறிப் பிட்ட வேலைக்கு நேர்முகத்தேர்விற்கு அனுப்பி வைப்பதற்கு சில வேலைவாய்ப்பு அலுவலர் களுக்கும் வெளியில் உள்ள புரோக்கர்களுக்கும் ரகசியத் தொடர்புகள் உள்ளன. இவர்களை நம்பியும் இவர்களைப் பயன் படுத்தியும் கொஞ்சநஞ்சம் வாய்ப்புள்ளவர்கள் காரியங்கள் ஆற்றிக் கொள்கின்றனர். 
இதன் மூலம் சில மோசடிகளும் நடந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. 
இந்த முறைகேடுகளில் உண்மையான தகுதியுடைய பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலையும் உண்டு. இதுகுறித்து புகார்கள் அளித்தால் உயர் அதிகாரிகளோ, அரசோ கண்டு கொள்வதில்லை.
தமிழகத்தை பொறுத்தமட்டில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் சென்னையில் 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும், இயங்கி வருகின்றன. 
இவை தவிர சென்னை மற்றும் மதுரையில் 2 மாநில அளவிலான தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதியை பெற்றுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி பட்டப்படிப்புகளை படித்துள்ளவர்கள் சென்னை அல்லது மதுரையில் செயல்படும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்ய வேண்டும். 
இதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் பதிவை புதுப்பித்து வந்தால் மட்டுமே பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு நடப்பில் இருக்கும். இல்லையெனில் காலாவதியாகி விடும்.
                                                                                                                                                                                                      -ஐ.வி.நாகராஜன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!


எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். 
ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். 
ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.
திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. 
மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer)  இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். 
திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.
கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். 
திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. 
மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.
அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.
ஜாதகம் பொய்! மண விழாவில் புரோகிதன் சொல்லும் மந்திரங்கள் பொய் இந்த பொய்களை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

                                                                                                                             -ஆர்.டி. மூர்த்தி, 
                                                                                                                                            திருச்சி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------