புதன், 22 அக்டோபர், 2014

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!

"பொது ஊழியர் (அதாவது முதலமைச்சராக) ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ. - சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வருமானங் களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கி விடுகிறது. 
ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. 
அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஏழு கோடி ரூபாயில் ஒரு முழு கிராமத்தையே வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இவர்களின் நிறுவனங்கள் மூன்று ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். 
ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அவர்களுடைய எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை.
 அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு நிர்ணயித்த விலைப்படி கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மொத்த மதிப்பு நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாகும்.
ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்கு வதற்கு மற்றவர்கள் உதவி செய்துள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை யாரும் வாங்கவுமில்லை. அவற்றில் வர்த்தக ரீதியாக எந்தக் காரியமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனங்கள் மட்டும் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் வங்கிக் கணக்கு களைப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகளை அந்தக் கணக்கில் வரவு வைத்து, அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளும் காரியம் மட்டுமே நடந்துள்ளது. 
வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபணமாகி உள்ளன. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்குத் தேவைப்படும் பணப் பரிமாற்றங்கள் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளன.
தமிழ்நாடு அரசாங்கத்தின் (முதலமைச்சர் என்ற) மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது, குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. 
ஏன் அதிகரிக்கிறது என்றால், ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தீமை பயக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார்.
இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும் போது, ‘பி.சுப்பையா ஏள கர்நாடக அரசு’க்கும் இடையில் நடந்த வழக்கு ஒன்றில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். 
அந்தத் தீர்ப்பில், ‘உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் சலுகை எதுவும் காட்டப்படுமானால், அது மொத்த சமூகத்துக்குமே கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்க நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதி கட்ட முயற்சிகள் நடந்ததால் தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே!. 
அதை யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன் தராத விஷயங்களை முன்வைத்தும், எவ்விதத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லியும் தாமதம் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர்.
மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பின்பற்றிய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையைத் தீர்மானிக்க முடியும். 
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் அனுமதித்துள்ள அதிகபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாகவாவது இவர் களுக்கு வழங்கினால்தான், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகப் பொருள்படும். 
அந்த வகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்''
என்று நீதிபதி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பிலே ஆணித்தரமாக எழுதியிருக்கிறார்.
அது மாத்திரமல்ல; ஜெயலலிதாவின் மேற்பார்வையில், அவர் விரும்பியபடியே, அவருக்காக, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தவறான வழிகளில் பணம் மற்றும் சொத்துகளை வாங்கினர் என்பதையும் தன்னுடைய தீர்ப்பில் குன்ஹா விளக்கியிருக்கிறார். 
அதுபற்றிய விவரம் வருமாறு :-
"1996-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்த சொத்து களின் கையிருப்பு மதிப்பு 55 கோடியே 2 லட்சத்து, 48 ஆயிரத்து 215 ரூபாய். அந்தக் காலகட்டத்தில் இவர்கள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆக, மொத்தம் 63 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 48 ரூபாய். இவர்களால் வரவுக் கணக்கு காட்டப்பட்டவை 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாய் மட்டுமே. இதன்படி பார்த்தால் கணக்குக் காட்டப்படாத தொகை 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது!
கணக்கில் காட்ட முடியாத இந்தத் தொகையை ஜெயலலிதாவும் மற்றவர்களும் தங்களின் பூர்வீகச் சொத்தாகக் காட்ட முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கு முன்பு தன்னுடைய சொத்துகளாக அதிகாரப்பூர்வமாகக் காட்டியுள்ள தொகை இரண்டு கோடி ரூபாய்தான். இதை அரசுத் தரப்பு மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. சசிகலாவும் இளவரசியும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே அதற்குப் போதுமானவையாக உள்ளன. அரசுத் தரப்பு சாட்சி ஆர். கிருஷ்ணமூர்த்தியின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின்படி, சசிகலாவின் வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். நடராஜன் அரசுப் பணியில் இருந்தவர். அவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தபோது அவருடைய சொந்த உபயோகத்திற்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற் கான முன்பணமாக 3 ஆயிரம் ரூபாய் தமிழக அரசிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளார். அதன் பிறகு 1987-ம் ஆண்டு அரசாங்கத்தில் வாங்கிய லோன் மூலமாக ஒரு வீட்டை வாங்கி உள்ளார்.
அதற்குத் தெளிவான ஆவணங்கள் உள்ளன. அவற்றின்படி நடராஜன் சசிகலா தம்பதியரின் சொத்து மதிப்பு அவ்வளவுதான். அதன்பிறகு 1988-ம் ஆண்டில் நடராஜன் தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இதன்மூலம் கணவர் நடராஜனின் வகையில் சசிகலாவுக்கு மிகப்பெரிய சொத்துகள் எதுவும் வந்து சேரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
சசிகலாவுக்கு அவருடைய தந்தை வழியில் ஏதாவது சொத்துகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
 சசிகலாவுக்கு அவருடைய பூர்வீகச் சொத்துகள் எனப் பெரிதாக எதுவும் இல்லை.
 இந்த இடத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுடன் சேர்ந்து போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்த பிறகுதான் சசிகலா வருமானவரி கணக்கே தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளார்.
மாவட்டப் பதிவாளர் தங்கவேலு அளித்த சாட்சியம், ஆவணங்களின்படி ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ.ஜெ. லீசிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், மெட்டல் கிங், மார்பிள் மார்வெல்ஸ் போன்ற நிறுவனங்கள் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரால் தோற்று விக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு நிறுவனத்திலும் இவர்கள் இரண்டு பேராகவோ அல்லது மூன்று பேராகவோ அல்லது அவர்கள் அனைவருமாகவோ பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.
மேலும், இந்த நிறுவனங்களைப் பதிவு செய்ய தன்னுடைய மேலதிகாரி எஸ்.அய்யர் (இவர் தற்போது அ.தி.மு.க. அரசால் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்) தனக்கு உத்தரவிட்டதாகவும் அவருக்கு முதலமைச்சர் தொலைபேசியின் வாயிலாக உத்தரவிட்டதாகவும் மாவட்டப் பதிவாளர் தங்கவேலு தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். 
சுதாகரன் நடத்திய ‘சூப்பர் டூப்பர் டி.வி’ நிறுவனம் தொடங்க இளவரசியும் சுதாகரனும் கையெழுத்திட்ட விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளனர். அதை வணிகவரித் துறை அதிகாரி கண்ணனின் சாட்சியம் உறுதிப்படுத்தி உள்ளது.
அதுபோல, வணிகவரித் துறை அதிகாரி, சுந்தர்ராஜ் அளித்த சாட்சியத்தின்படி, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கான விண்ணப் பத்தில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்திட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
 அதுபோல, மார்பிள்ஸ் மார்வெல்ஸ் நிறுவனத்துக்கான பதிவைப் பெற அளித்த விண்ணப்பத்தில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத் துப் போட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த நிறுவனங் களைத் தொடங்கி நடத்தியவர்கள் இவர்கள்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஏற்று நடத்திய நிறுவனங்கள் அனைத்திலும் இவர்கள் யாரும் முதலீடாக எந்தத் தொகையையும் செலுத்தவில்லை. பங்குகளை விற்றும் முதலீடுகளைத் திரட்டவில்லை.
 நிறுவனத்தில் வந்த லாபம் இவர்கள் நால்வரைத் தவிர வேறு எந்தக் கணக்குக்கும் போகவில்லை. சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலம் மிகமிக முக்கியமானது.
 அவர் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவில்லை.
பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று குறிப்பிட்டு உள்ளார். 
இதையடுத்து அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் அளித்துள்ளது. 
அப்படிச் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங் களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சர்ய மாகவும் இருக்கிறது.

 மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பணப் பரிவர்த் தனைகளைச் செய்து காட்டியுள்ளன.

இப்படி பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்பு வரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன்பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

வடக்குக் கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக் கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாட்சியம் மிக முக்கியமானவை. அவர்கள் அளித்த சாட்சியத்தில், அவர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல், பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவுசெய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்கு, பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூட குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்போது அதை ஒவ்வொன்றாக யாருடைய அனுபவப் பாத்யதையில் இருக்கின்றன என்று பார்த்தால் அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
‘நமது எம்.ஜி.ஆர்’ வங்கிக் கணக்கில் பல்வேறு தேதிகளில் 423 முறை (ஒவ்வொரு முறையும் பல ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சங்களில்) வரவு வைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்கே இல்லை. 
அதுபோல ஜெயா பப்ளிகேஷன்ஸ், வினோத் வீடியோ விஷன், மஹா சுப்புலெட்சுமி கல்யாண மண்டபம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் போன்றவற்றில் வரவு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய்க்கு எந்த விளக்கமும் ஜெயலலிதா தரப்பால் சொல்ல முடியவில்லை. 
இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு வைத்துள்ள பேலன்ஸ் ஷீட், லாப - நட்டக் கணக்கு விவரங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதும், ஆடிட்டர்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. 
ஆனால், பணத்தை வங்கிகளில் போட்டதும், அவற்றை வேறு கணக்குகளுக்கு மாற்றச் சொன்னதும் சசிகலா என்பது அரசுத் தரப்பு சாட்சி ஜெயராமன் மூலம் உறுதிபடத் தெரியவந்துள்ளது.
ஜெயராமன் போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர். 

அவரிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் லட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி "சலான்"களைக் கொடுத்து அவற்றின் அடிப்படையில் வரவு வைக்க சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதை ஜெயராமன் செய்துள்ளார். 

அதாவது அந்தப் பணத்தை, இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைத்து, அவற்றை நிறுவனத் தின் பணமாக மாற்றி, அதன்பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளனர். 

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்"
                                           மை க்கேல் டி குன்கா தீர்ப்பில் இருந்து கலைஞர் கருணாநிதி 


தீபா"வலி" வாழ்த்துக்கள்.
------------------------------------------பாஜக எம்.பியின் தமிழ்க் காதல் உண்மையா?
                                                                                                                                                                                                                                                                                                               என்.பகத்சிங்
மத்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை `குரு உத்சவ்’ ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பு... அறிவிக்கப்படும் திட்டங்களில் யாவும் இந்தி மற்றும் சமஸ்கிருத பதங்கள் என மோடி அரசின் இந்துத்துவ நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறிக் கொண்டிருக்க மறுபக்கத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தின் தருண் விஜய் என்ற பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் மொழியின் மேன்மை குறித்து பெரிதாக பொளந்து கட்டுகிறார்.
பேட்டிகளும், பேச்சுக்களும்
“வடமாநிலங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப்பாடமாக்கி, தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கவேண்டும், அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ்மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.” இவையெல்லாம் தருண்விஜய் கடந்தாண்டு (மன்மோகன்சிங் ஆட்சியில்) மாநிலங்களவையில் பேசியது.உடனே அவரை பாராட்டும் விதத்தில் தமிழகத்தின் முன்னணி அச்சு ஊடகங்களில் அவரது பேட்டி ஒன்று வெளியிடப்பட்டது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம் என்று மட்டுந்தான் தமிழகத்தைப் பற்றி வடமாநில பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இந்த வெறுப்பின் காரணமாகவோ, என்னவோ... தமிழகத்தின் சரித்திரப்பெருமைகளைப்பற்றியும், இலக்கிய வளங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் அறியாமையிலேயே இருந்துவிட்டோம்“ என்று அந்தப் பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார் தருண்விஜய்.இப்படி பேசிய இந்த யோக்கிய சிகாமணி தற்போதைய மோடிஅரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் பற்றி வாயே திறக்கவில்லை. வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தற்போதுஇயங்கும் தமிழ்த்துறைகள் இழுத்துமூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 
ஆக்ரா, மீரட்,கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர், அகமதாபாத் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945ல் துவங்கப்பட்ட தமிழ்த்துறையில் நெடு நாட்களாக இரு பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன.
இதற்கு காரணம் தமிழ் மொழியின் மீதான காழ்ப்புணர்ச்சிதான் என்கிறார் அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர்.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யாபீடம் ஆகிய பல்கலைக்கழகங்களில், தமிழ்மொழிக் காக பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்டஎல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலைமை.
இந்த அவலங்களெல்லாம் மேதகு தருண் விஜய்க்கு தெரியாத உண்மைகளா? இந்து - இந்தி-இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்க முயலும். “தேசியம்” என்ற உணர்வின் வெளிப்பாடுதான் தமிழுக்கு எதிராக நிலவும் இந்த விசேச காழ்ப்புணர்வு.
சமஸ்கிருத - இந்தி ஆதிக்க வெறி கொண்ட உயர்ஜாதி இந்துக்களின் பாசிச அமைப்புதான் ஆர்எஸ்எஸ்.இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான “பாஞ்ச ஜன்ய” வின் ஆசிரியராக 20 ஆண்டுகாலம் பணியாற்றியவர்தான் தருண்விஜய், இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனைக் குழாமான “சியாமா பிரசாத் முகர்ஜி ஆய்வு மைய”த்தின் இயக்குநரும் கூட, தொகாடியாவின் இந்து வெறிப்பேச்சையே, நாசூக்காக நாகரிக மொழியில் பேசத் தெரிந்தவித்தகர்தான் தருண் விஜய். இந்து தேசிய உணர்வைதீவிரமாகக் கொண்டு செல்லும் நோக்கத்துக்காகவேபாஜகவால் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்ட வர்தான் தருண்விஜய். இந்துத்துவ பாசிசக் கும்பலின் மூளையாகச் செயல்படும் ஒருவர் தமிழுக்காக வலிய வந்து வக்காலத்து வாங்குவது ஏன்? 
இயல்பாய் நமக்கு இந்தக் கேள்வி எழுகிறது.
தமிழின் தனித்துவத்தையும், தமிழகத்தின் வரலாற்றையும் பற்றி இதற்கு முன் எதுவுமே தெரியாதது போலவும் இப்போதுதான் தெரிந்து கொண்டது போலவும் அவர் நடத்தும் இந்த நயவஞ்சக நாடகத்தை பிரபல தமிழ் ஊடகங்களும், தமிழக பத்திரிகைகளும் கடைவிரிக்க காரணம் என்ன?மோடி அரசின் சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பு தோற்றுவிக்கும் எதிர்ப்புணர்வை மழுங்கச்செய்து திசைதிருப்புவதும், தமிழையும், தமிழ் மரபுகளையும் உயர் ஜாதி இந்துத்துவ நோக்கத்திற்காக திசை திருப்பி நிறுவனமயமாக்கிக் கொள்வதும் தான் இதன் நோக்கம்.
சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சுயேச்சையான, தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற, இன்றும் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்ற திராவிட மொழிகளில் தமிழ் முதன்மையானது. 
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உயர் ஜாதி இந்துக்களால் படுகுழியில் தள்ளப்பட்ட தமிழ்மொழியை மீண்டும் உயிர்ப்பித்து அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல் என்றதமிழறிஞர்.

இவர் ஆரிய - சமஸ்கிருத சதியைஅம்பலப்படுத்தியது மட்டுமின்றி, தமிழில் சுயேச்சையான திராவிட மரபை எடுத்துக்காட்டியவர். இதனாலேயே கால்டுவெல்லைக் கயவன் என்று தூற்றுபவர்கள் இந்துத்துவ வாதிகள்.தருண் விஜய் சென்றாண்டு மாநிலங்களவையில் தமிழ்த்துதி பாடிய அதே மாதத்தில் தான்,சமஸ்கிருதத்தை காங்கிரஸ் அரசு அழித்து வருவதாக குற்றஞ்சாட்டி “டைம்ஸ் ஆப் இந்தியா” வில் அவர் எழுதிய கட்டுரையின் வரிகள் தான் இவை. சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்துவிடும்... பிறப்பு முதல் இறப்பு வரை குழந்தைக்கு பெயர் வைப்பது, திருமணம் ஆகியவற்றில் துவங்கி, மரணத்திற்குப்பின் சொர்க்கத்திற்கு நுழைவுச் சீட்டு பெறுவது வரையிலான எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதம் தேவை.
சமஸ்கிருதம் தான் இந்தியா, இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே அதனை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும். (டைம்ஸ் ஆப் இந்தியா ஆக.23.2014) என்கிறார். 
இவர் இங்கு குறிப்பிடும் நிலைதான் வர்ணாசிரம பாசிசம் என்பது. இதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த மக்கள் இங்கு கல்வி பயில முடிந்தது. 
ஓரளவு முன்னேற்றமும் காண முடிந்தது. ஆனால்தங்களுடைய பழைய பொற்காலத்தை, புதிய நிலைமைகளுக்கேற்ப மீட்டுருவாக்கம் செய்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.வேத - உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும் என்று அவரது பேட்டியில் முழங்கினார் தருண் விஜய்.
உயர்ஜாதிய ஆதிக்கத்தை எதிர்த்த கௌதம புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக மாற்றி விழுங்க பார்த்தவர்கள் தான் இவர்கள். 
அதுபோல திருவள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை சாத்திர பட்டியலில் சேர்த்து நிறுவனமயப்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
 தங்களை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், அவர்களின் மொழிகளையும், இனங்களையும், நசிக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது இந்துத்துவம் என்பதுதான் வரலாறு. 
உயர் நீதிமன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்‘ என்று வடநாட்டை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய்  ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அத்தகைய ஒருஅரவணைப்பு தான் தருண் விஜய்யின் தற்போதைய “தமிழ்க்காதல்” .
தமிழகத்தை மட்டுமல்ல, பாஜக கால்பதிக்க முடியாத வடகிழக்கு மாநிலங்களையும் வழிக்கு கொண்டுவர நியமிக்கப்பட்டவர்தான் “தருண் விஜய்” என்பது அவரது வலைத்தளத்தை கூர்ந்து நோக்கும் போது புரிபடுகிறது.  
-------------------------------------------------------------------------------------------------------------------------