ஆவின் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக்
-ஐ.வி.நாகராஜன்
சமீபத்திய ஆவின்பால் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு நாளும் விற்பனை யாகும் தொகையை கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள் கையாடல் செய்ததாக பல புகார்கள் வந்து சிலர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் கையாடல் செய்த பணம் மட்டும் இன்னும் திரும்ப பெறவில்லை.
இது மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக வேலூர் மாவட்டம் அரக் கோணத்தில் ஒரு கடையில் மட்டும் ரூ.15 லட்சம் வரையும், திருப்பத்தூரில் ஒரு கடையில் ரூ.5 லட்சம் வரையும் கையாடல் நடந் துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளின் சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் 6835 டாஸ்மாக் கடைகளிலும் நடந்துள்ள முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் ஒவ் வொரு மதுபானக்கடைகளிலும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை நேர்மையாகவும் முறையானதாகவும் நடக்கும்பட்சத் தில் ஆவின் முறைகேடுகளை தொடர்ந்துடாஸ்மாக் முறைகேடுகளும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையை கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுஏற்றது. இதற்கு மாவட்ட அளவில் மேலாளர் களாக எம்.பி.ஏ பட்டதாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
2006-ல் தி.மு.க. ஆட் சிக்கு வந்த பிறகு இவ்வாறு நியமனம் செய்யப் பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக பணியி லிருந்த துணை கலெக்டர்கள் மாவட்ட மேலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் பழையபடியே டாஸ்மாக் மேலாளர்களாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
ஆனால் அந்த எம்.பி.ஏபட்டதாரிகள் தொகுப்பூதிய பணியாளர் களாகவே இருந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையில் மதுபானக்கடை மேலாளர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடவேண்டிய சூழலை அரசே அனுமதிப்பதாகவும் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் குறை கூறுகின்றன.
இதன் பின்னணியில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் டாஸ்மாக் நிறுவனங் களில் நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர் கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 17 துணை கலெக்டர்கள். மற்றவர்கள் எம்.பி.ஏபட்டதாரிகள். இந்த பட்டதாரி மேலாளர்களை பணி நியமனம் செய்தது தற்போது மாநில தேர்தல் ஆணையராக உள்ள சோ.அய்யர்தான்.
இவர் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது அன்று டாஸ்மாக்கின் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர்தான் தற்போது டாஸ்மாக்கின் இணை மேலாண் இயக்குநராக பணியாற்றும் மோகன் என்பவர்.
மோகன் மேலாண் இயக்குநராக பதவியேற்றதிலிருந்து அய்யரால் நியமிக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகளான மாவட்ட மேலாளர்களுக்கு ஆதரவாகவும், துணை கலெக்டர்களுக்கு எதிராகவும் செயல்பட தொடங்கி யுள்ளார்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை கலெக்டர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் துணை கலெக்டர்களான டாஸ்மாக் மேலாளர்கள் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் டாஸ்மாக் அதிகாரி களுக்கு நகர்புறங்களில் உள்ள கடைகளில் ரூ.2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரையும், கிராமப்புற கடைகளில் ரூபாய்.ஆயிரத்தி லிருந்து 2 ஆயிரம் வரையும் இதை தவிர்த்து உதவி அதிகாரிக்கு ரூ.500, கலால் அதிகாரிக்கு ரூ.500, கலால் அலுவலர்களுக்கு ரூ.250 என மாதந்தோறும் மாமூல் வழங்கப்படுகிறது. இந்த மாமூல் பணத்தை ஒவ்வொரு கடையின் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மொத்தமாக கொண்டு செல்கிறார்கள்.
இதை வசூலிக்கும் அலுவலருக்கு ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.200 முதல் 500 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
இதையும் தாண்டி மாதந்தோறும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை கணக்குகளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்போது டேபிள் வாரியாக கணக்கிட்டு அதற்கு ஒரு தொகை வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்றும் இதற்கெல்லாம் எங்கிருந்து பணத்தை கொடுப்பது என் பதை அதிகாரிகள் விளக்கினால் கூடுத லான விலைக்கு மதுபானங்களை விற்பது, மதுபானத்தில் தண்ணீர் கலப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய அவசி யம் எங்களுக்கு இல்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
கடந்த 1983-ல் 183 கோடியாக இருந்த மதுபான விற்பனை இன்று 22 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 6835 கடைகளி லும் 7039 சூப்பர்வைசர்கள், 15ஆயிரத்து 431 விற்பனையாளர்கள்,3634 பார் உதவி யாளர்கள் என துணை கலெக்டர்கள், மேலாளர்களை சேர்க்காமல் 26 ஆயிரத்து 104 பேர்பணியாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடை பெறும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மதுபானங்களை சப்ளை செய்கிறது. இதிலிருந்து கிடைக்கும் ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் தமிழக அரசின் பற்றாக்குறையை சரி செய்கிறது.
அது மட்டுமல்லாமல் திமுக, அதிமுகவின் இலவச திட்டங்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. இதில் நடைபெறும் முறைகேடுகள் மட்டும் அல்ல.
இங்குள்ள குறைபாடுகளையும் கவனிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். கையாடல் குறித்து விசாரிப்பதற்கு போடப்பட்டுள்ள விசாரணைக்குழு முழுமையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தும் பட்சத்தில் ஆவின் முறைகேட்டை தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் பல செய்திகள் வெளிவரக்கூடும்.
=====================================================================