ஜெ...வழக்கும்-தீர்ப்பும்
ஒரு சிறு பார்வை
ஜெயலலிதா முதன் முறையாக 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு 14.6.1996-ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் டி.ஐ.ஜி-யாக இருந்த லத்திகா சரணை விசாரணைசெய்ய ஆணையிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, ''தனி நபர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்கக் கூடாது. இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார்கள். அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை துறைரீதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை நடத்தி வந்தார்.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை முடிந்ததும் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநராக இருந்த ராகவனிடம், வேறு ஒருவரைக்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. லத்திகா சரணுக்குப் பதிலாக தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த நல்லம நாயுடு தலைமையில் 16 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் துறை ரீதியாக விசாரித்து வந்த வி.சி.பெருமாள், இந்த வழக்கில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஜெயலலிதா மீது 18.9.1996-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து வழக்கை முழுமையாக விசாரிக்க நல்லம நாயுடுக்கே உத்தரவிட்டார்.
அதையடுத்து நல்லம நாயுடு சென்னை அமர்வு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளை முடக்கியதோடு அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் டான்சி நில வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜெயலலிதாவை 7.12.1996-ல் கைது செய்து சென்னை புழல் சிறையில் வைத்தனர். அப்போது நல்லம நாயுடு தலைமையிலான ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் 7.12.96 முதல் 12.12.96 வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் திராட்சை தோட்டம் ஆகிய இடங்களில் சோதனையிட்டார்.
அதன் பிறகு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த தனி நீதிமன்றத்தில் 4.6.1997-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 21.10.1997-ல் ஜெயலலிதா, சசிகலா, சுகாதரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிறகு 259 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
மீண்டும் 2001-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார். அதையடுத்து சாட்சிகள் மறு விசாரணை செய்யப்பட்டனர். அதில் பல சாட்சிகள் ஏற்கெனவே சொன்ன வாக்குமூலத்தை மாற்றி பிறழ் சாட்சியாக மாறினார்கள். இதனை அரசு வழக்கறிஞர் தடுக்கவில்லை என்று தி.மு.க சந்தேகப்பட்டது.
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், ''வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்'' என்று மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்ற 18.11.2003-ல் உத்தரவிட்டது. 10.9.2004-ல் அதிகாரபூர்வமாக வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்தாலும் 31.10.2013-ல் வழக்கின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜான் மைக்கேல் டி.குன்ஹா, தன் முதல் அமர்விலேயே ''கால அவகாசம் எடுத்துக்கொண்டு இந்த வழக்கைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தெரிந்துகொள்ளுவேன். அதனால் இன்றிலிருந்தே உங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்'' என அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை என்பதற்காகக் கண்டிப்பு காட்டியது இல்லை. அதே நேரத்தில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டு கெஞ்சி கூத்தாடினாலும் ஒருநாள்கூட வாய்தா கொடுக்கவில்லை. 7.3.2014-ல் அரசுத்தரப்பு இறுதிவாதம் தொடங்க உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் 10.3.2014-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10-ம் தேதியும் பவானி சிங் வரவில்லை. 14.3.2014-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. 14-ம் தேதி வந்த பவானி சிங் உடல்நிலை சரியில்லை. 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்தார். அதைப் பார்த்து கடும் கோபம்கொண்ட நீதிபதி குன்ஹா, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஒருநாள் சம்பளமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். அடுத்த நாள் 15-ம் தேதியும் பவானி சிங் வராததால் அன்றும் ஒருநாள் சம்பளமான 65,000 ரூபாயை அபராதமாக விதித்தார். கர்நாடக குற்றவியல் நீதிமன்ற வரலாற்றில் ஒரு அரசு வழக்கறிஞர் மீது நீதிபதி அபராதம் விதித்தது நீதிமன்ற வளாகத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
அதே போல அரசுத் தரப்பு இறுதி வாதம் 19.5.2014-ல் முடித்த உடனே ஜெயலலிதா தரப்பு இறுதிவாதம் செய்ய உத்தரவிட்டார். ''ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டார். அதனால் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்'' என்றார்கள் ஜெ-தரப்பினர். ஒரு தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமையை அவர் செய்து விட்டு பொறுமையாக வரட்டும். அடுத்து இருக்கிற ஏ2, ஏ3, ஏ4 வழக்கறிஞர்கள் தங்கள் இறுதிவாதத்தைத் தொடங்க வேண்டும் என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாருடைய இறுதிவாதத்தை முடித்த பிறகுதான் எங்கள் வாதத்தை தொடங்குவோம் என்று அடம் பிடித்தனர். அதையடுத்து நீதிபதி குன்ஹா, இனி ஒவ்வொரு வாய்தாவுக்கும் உங்கள் மனுதாரர்கள் வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அடுத்த வாய்தாவுக்கு 26.5.2014-ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்திருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரையும் ஒருநாள் முழுக்க கூண்டில் நிற்க வைத்தார். இப்படி ஒவ்வொரு நாளும் கண்டிப்பு காட்டி தீர்ப்பின் தேதியை நோக்கியே வழக்கை நகர்த்திக்கொண்டு வந்தார்.
கடந்த 28.8.2014-ம் தேதி ஒரே நாளில் ஜெயலலிதா தரப்பு, அரசு தரப்பு என இரு தரப்பு இறுதிவாதத்தின் நிறைவுத் தொகுப்பு வாதத்தை முடித்து எழுத்துபூர்வமான வாதத்தையும் பெற்று மாலை 4.00 மணிக்கு யாருமே எதிர்பாராத நிலையில் 17 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதியை அறிவித்து வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
மராடி
அரசு வழக்கறிஞர் பவானி சிங் மூத்த வழக்கறிஞராக இருந்தாலும், அவரது ஜூனியர் முருகேஷ் மராடி இவ்வழக்கை தனி ஆர்வத்தோடு கையாண்டு வந்தார். ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதத்தின்போது பலமுறை குறுக்கீடு செய்து வாதத்தை நியாயமாகக் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு இவரைச் சேரும். இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் பெல்காமில் குடியிருக்கிறார்கள். இவர் பெல்காம் லிங்கராஜ் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.காம்., முடித்து ஆர்.எல். சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். வருமானவரித் துறை வழக்குகளை கவனிப்பதில் கைதேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 42. இவரது மனைவி பெயர் நீலாம்பிகா, இவர்களுக்கு பூமிகா என்ற 12 வயது மகளும், அதர்வா என்ற 7 வயது மகனும் இருக்கிறார்கள்.
புலன் விசாரணை அதிகாரி சம்பந்தம்!
இவ்வழக்கின் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி., சம்பந்தம். அரியலூர் மாவட்டம் ஒடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர். இவர் காவல் துறையில் 27.9.1987 ஆண்டு எஸ்.ஐ-யாக பணியில் சேர்ந்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக 3.12.1997-ல் நியமிக்கப்பட்டு இன்று வரை 17 ஆண்டுகளாக இவ்வழக்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை விசாரணை அதிகாரியாக இருக்கும் ஒரே நபர் இவர்தான். இந்த வழக்கிலேயே இன்ஸ்பெக்டராகவும், டி.எஸ்.பி-யாகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஒரு நாள் தவறாமல் தினமும் கோர்ட்டுக்கு வந்து அரசு வழக்கறிஞர்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுத்து உதவுவார். இவர் ஓய்வு பெற்றதும், இவ்வழக்கின் புலன் விசாரணை பற்றிய புத்தகத்தை எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தினகரன்
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆரம்பத்தில் தினகரனும் முக்கிய கதாப்பாத்திரம்தான். லண்டனில் உள்ள 'காப்ஸ் கிராப்ட்’ ஹோட்டலை வாங்கி நடத்திய ஐந்து பேரில் தினகரனும் ஒரு பார்ட்னர்.
ஜெயலலிதா சேர்த்த சொத்துகள் பட்டியலில் நல்லம்ம நாயுடு லண்டன் ஹோட்டலையும் சேர்க்கலாம் என்று சொன்ன யோசனையின் பேரில் அதையும் சேர்த்தார்கள். தினகரனை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி அருணாச்சலம் கூறிவிட்டார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. அதனால் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு நான்கு ஆண்டுகள் தாமதம் ஆனது. அதன் பிறகு, அப்படிச் சேர்த்தால் இந்த வழக்கின் போக்கு மாறிவிடும் என்பதை உணர்ந்த அரசுத் தரப்பு, தானே முன்வந்து லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டது. அதோடு இதில் தினகரனின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
சிறப்பு பணி அதிகாரி குணசீலன்!
இவ்வழக்கின் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் சிறப்பு பணி அதிகாரி குணசீலன். இவர் மதுரையை சேர்ந்தவர். மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி., அக்ரி முடித்து மதுரையில் 10 வருடமாக வேளாண்மை அதிகாரியாகப் பணிபுரிந்தார். காவல் துறையில் பணிபுரிவதுதான் தனது கனவு என்பதால் 1985-ல் குரூப் 1 தேர்வு எழுதி நேரடியாக டி.எஸ்.பி., ஆனார். பிறகு தூத்துக்குடி, காஞ்சிபுரம், சென்னையில் எஸ்.பி-யாகப் பணியாற்றினார். அதன் பிறகு தஞ்சை சரக டி.ஐ.ஜி-யாகவும், சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி-யாகவும் பணியாற்றினார். சென்னை மாநகர இணை ஆணையாளர் (தெற்கு) பணியாற்றியபோது சென்னையில் நடைபெற்ற சைக்கோ கில்லர்ஸ் கொலைகளைக் கண்டுபிடித்தார். பிறகு ரயில்வே துறை ஐ.ஜி-யாகவும் பணிபுரிந்து இறுதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி-யாக இருந்து 2013-ல் ஓய்வு பெற்றார். அதையடுத்து மீண்டும் பணி அமர்த்தல் மூலமாக இவ்வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து கடந்த 3 வருடங்களாக ஒவ்வொரு நாளும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்து விசாரணையை நுட்பமாக கவனிப்பதோடு, இவ்வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையிலும் கலந்து கொள்வார். இன்றைய சூழ்நிலையில் காவல் துறையில் உயர் அதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு வரத் தயங்கும் நிலையில் ஐ.ஜி., பொறுப்பில் இருக்கும் இவர் தினமும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணையை கவனிப்பது பாராட்டுக்குரியது.
குற்றப்பத்திரிகை!
சொத்துக் குவிப்பு வழக்கின் ஆரம்பத்தில் மொத்தம் 963 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 239 பேர் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அது 300 பக்கக் குற்றப் பத்திரிகையாக சுருக்கப்பட்டது. மற்ற விவரங்கள் குற்றப்பத்திரிகையில் பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று என்று வரிசைப்படுத்தப்பட்டன.
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தியதில் இரண்டு அரசு வழக்கறிஞர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் ஆச்சாரியா. மற்றொருவர் பவானி சிங்.
ஆச்சாரியா..
'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வரமுடியாதா?’ என்று கேள்வி கேட்டு, ஜெயலலிதா தரப்பை திணறடித்தவர். இவர் ஆகஸ்ட் 14, 2012 அன்று தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருக்கக்கூடாது என்று ஜெயலலிதா தரப்பு ஒரு பிரச்னையைக் கிளப்பியது. அந்த அளவுக்கு ஆச்சாரியா ஜெயலலிதா தரப்பின் நிம்மதியை இந்த வழக்கின் மூலம் பறித்து இருந்தார். உடனடியாக எனக்கு அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி தேவையில்லை என்று ராஜினாமா செய்துவிட்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கவனம் செலுத்தினார்.
ஆனால், ஜெயலலிதா தரப்பு இவரை இந்த வழக்கில் இருந்து நீக்குவதற்காக, கவர்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குத் தொடர்ந்து அவதூறு மனுக்களை போட்டனர். சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்ற ரீதியில் செயல்பட்டனர். அதுபோல், கர்நாடகா லோக் ஆயுக்தா மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர். கல்வி நிறுவன மோசடியில் ஆச்சாரியா ஈடுபட்டார் என்று ஜெயலலிதா தரப்பு தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று சொல்லி 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதுபோன்ற காரியங்களால் மன உளைச்சலுக்கு ஆளான ஆச்சாரியா, தன்னுடைய மீதி வாழ்நாளை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
பவானி சிங்..
ஆச்சாரியாவுக்குப் பிறகு அரசு வக்கீலாக வந்தவர் பவானி சிங்.இவரது நடவடிக்கைகள் ஜெயலலிதா தரப்புக்கு ஆதர்வாகவே முதலில் இருந்தது.அதைப்பற்றி தி.மு.க குற்றம்சாட்டியது. உடனடியாக பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து மாற்ற வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசும் உடனடியாக பவானி சிங்கை நீக்கியது. ஆனால், இதுவரை இந்திய சட்ட வரலாற்றில் இல்லாத விநோதமாக ஒன்றை ஜெயலலிதா தரப்பு செய்தது. வழக்கமாக தனக்கு எந்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதை வாதி முடிவு செய்யலாம். ஆனால், எதிர்த்தரப்புக்கு எந்த வழக்கறிஞர் வாதாட வேண்டும் என்பதை வாதி முடிவு செய்ய முடியுமா? ஆனால், ஜெயலலிதா செய்தார். எனக்கு எதிராக பவானி சிங்தான் வாதாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுப்போட்டார்.அவருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் ச்மபந்தம் நடந்து பவானி சிங்கையே நியமித்தார்.குற்றவாளி கேட்ட அரசு வழக்குரைஞரையே அவருக்கு சார்பாக செயல்படுகிறார் என்ற குற்ற சாட்டுக்கு ஆளானவரையே உச்ச நீதிமன்றம் நியமித்த வேடிக்கை இப்போதைய கேரள ஆளுனராக உள்ள சம்பந்தம் காலத்தில்தான் நடந்தது.அதன் பின்னரும் வழக்கை நடத்த பவானிசிங் தாம்தம் செய்து வந்ததால் நீதிபதி அரசு வழக்குரைஞருக்கு 50 ஆயிரம்[ஒரு நாள் சம்பளம்]அபராதமாக விதித்து பின் 25 ஆயிரம் அபராதம் செலுத்திய சம்பவமும் நடந்தது.ஆனால் பவானிசிங் செய்ய வேண்டிய வேலையை அவரின் உதவி வழக்குரைஞர் வாதாடி விசாரணையை தொய்வு விழாமல் கொண்டு சென்றார்.
|
விகடனில் - வீ.கே.ரமேஷ், ஜோ.ஸ்டாலின்