ஞாயிறு, 2 நவம்பர், 2014

தெய்வம் நின்று கொல்லும்?பல்லாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் மரணம் அடைந்தான் .
அமெரிக்காவில், ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இயங்கி வந்தது.
 1984–ம் ஆண்டு, டிசம்பர் 3–ந் தேதி, இந்த ஆலையில் மீத்தேல் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிவு ஏற்பட்டது. 
இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 787 பேர் பலியானதாக மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறின.
இ ந்த சம்பவம் நடந்து, 30 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து மறையவில்லை.இன்னமும் விச வாயு பாதிப்பில் குடி நீர் உள்ளது.பிறக்கும் குழந்தைகள் ஊனமுடன் பிறக்கின்றன.
இந்த விஷவாயு கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வாரன் எம்.ஆண்டர்சன் அறிவிக்கப்பட்டார். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் அவர் போபால் வந்தார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஜாமீன் பெற்று அமெரிக்கா சென்றார். ஆனால் பின்னர் அவர் இந்தியா திரும்பவே இல்லை. 
அவருக்கு ஜாமீன் கொடுத்தது தவறு.இருந்தாலும் இந்தியாவிலேயே இருக்க வீண்டும் என்ற நிபந்தனையை அப்போதைய காங்கிரசு கண்டு கொள்ளாமல் பிரதமர் ராஜீவ் உதவியுடன் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு தப்பிக்க விடப்பட்டார்.இதற்கு பெருந்தொகை கைமாறியதாக குற்ற சாட்டு உள்ளது.
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்கு ஒப்புக்கு மத்திய அரசு பல முறை வேண்டுகோள் விடுத்தும், அமெரிக்கா அதற்கு செவி சாய்க்கவே இல்லை.
இந்த நிலையில், 92 வயதான அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புளோரிடாவில் வெரோ பீச் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர்  29–ந்தேதி அவர் மரணம் அடைந்தார்.
இது குறித்த தகவலை அவருடைய குடும்பத்தினர் வெளியிடவில்லை. அந்தப் பகுதியில் இருந்து வெளிவருகிற வார செய்தித்தாள் ஒன்று, வாரன் ஆண்டர்சன் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டது. 
அதன்பிறகே அவரது மரணம் குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த வாரன் ஆண்டர்சன், புரூக்ளினில் ஒரு தச்சர் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வாரன் ஹார்டிங் நினைவாக அவரது பெற்றோர் வாரன் ஆண்டர்சன் என பெயர் சூட்டினர். கால்பந்து வீரனான ஆண்டர்சன் , 1942–ம் ஆண்டு பட்டம் பெற்ற பின்னர், யூனியன் கார்பைட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
விற்பனையாளராக பணியில் சேர்ந்த அவர்  நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.
 1986–ம் ஆண்டு தனது 65–வது வயதில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசி காலத்தில் தன் மனைவி லில்லியன் ஆண்டர்சனுடன் வெரோ பீச்சில் உள்ள இல்லத்தில் ஓய்வு வாழ்க்கையை நடத்தி வந்து, இப்போது மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது லாபத்திற்காக பல்லாயிரம் அப்பாவி உயிர்களை காவு கொண்டவன் மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் அவ்வுயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து தனது சொந்த ஊரில்,வீட்டில் இயற்கையான மரணம் அடைந்துள்ளான்.
இவன இவ்வாறு நடந்து கொள்ள இந்திய நாட்டின் ஆள்வோர் ஒத்துழைத்துள்ளது கொடுமையான விடயம்.இது போன்ற கொடுமதி மிருகங்களுக்கு இறுதியல் நல்ல சாவு கிடைக்காது ,தெய்வம் நின்று கொல்லும் என்று இன்னமும் கடவுளை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இவன் சாவு ஒரு செய்தியை சொல்லியுள்ளது.
92 வயதில் ஒருவன் இயற்கையாக மரணமடைவதில் தெய்வமும், தீர்ப்பும்  எங்கே போனது.?
உங்கள் நீதியை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும் .மற்றபடி கடவுள் இருந்தா நல்லாயிருக்கும் என்பதுதான்.

=====================================================================
உலக நடை முறைகள் பலவற்றை பார்க்கையில் நம்மை நீதி நியாயம்,கடவுள் நம்பிக்கை என்ற பல சிக்கல்களில் சிக்க வைத்து பலர் வாழ்வாங்கு வாழ்கிறார்கள் என்று தெரிகிறது.பல நாடுகளில் சரியான உணவை பெறமுடியாமல் அதற்கு காசில்லாமல் பலர் மடிந்து கொண்டிருக்க சிலர் காசு குவித்து பின்வருமாறு பெருமைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
Bill gates
பில் கேட்ஸ் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பை காலி செய்ய  218 ஆண்டுகள் ஆகும் என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இது குறித்து ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பையும் செலவு செய்து முடிக்க   218 ஆண்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்பாம் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220 ஆண்டுகளில் செலவிடமுடியும். 
வாரன் பப்பெட் இதே முறையில் 169 ஆண்டுகளில் அவரது செல்வத்தை செலவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
==============================================================================================