சூனியம் வைப்பதும்,
ஏவல் செய்வதும்
உண்மையா?
நன்றி:விடுதலை.
================================================================================================================
உண்மையா?
ஒருநாள் காலை ஏழுமணி இருக்கும். அன்றைய நாளேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. மத்தூர் பன்னீர்செல்வம் என்பவர் பேசினார். அவர் ஊருக்குப் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறினார். எனக்கும் வியப்பாக இருந்தது. செய்தி இதுதான்.
பறக்கும் தட்டு
திருத்தணிக்குப் பக்கத்தில் புச்சி ரெட்டிபள்ளி என்றொரு கிராமம். அங்கே ஒரு வீட்டில் யாரோ சூனியம் வைத்து ஏவல் செய்து விட்டிருக் கின்றனர். வீட்டில் உள்ளபொருட்கள் தெருவில் கிடக்கின்றன. புறக்கடையில் இருந்து கல்லும் கட்டையும் வீட்டுக்குள் வந்து விழுகின்றன. பாத்திரங்கள் எல்லாம் சிதைந்து கிடக்கின்றன. அவ்வீட்டில் எந்த பொருளும் வைத்தது வைத்த மாதிரி இருப்பதில்லை. வீட்டிலிருந்த குடை புறக்கடை மரத்தில் உள்ளது. மருமகள் சாப்பிடும்போது தட்டு கூடப் பறக்கிறது. கதவுகள் தானே திறந்து கொள்கின்றன. இதைப்போன்று அசாதாரண செயல்கள் இன்னும் பல நடப்பதாகக் கூறினார்.
இந்தச் செய்திகளைக் கேட்கக் கேட்க வியப்பாகவும்இருந்தது. வேடிக்கை யாகவும் இருந்தது. என்னுடன் இருந்த பகுத்தறிவாளர் கழக நண்பர்கள் சிலருடன் அன்று பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அங்குச் சென்றேன். ஒரு ஓடு போட்ட தட்டை வீடு. அய்ம்பது வயதுக்கு மேற்பட்ட கணவன் மனைவி. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு பெண், மூத்த மகனுக்குத் திருமணமாகி அந்தப் பெண் வாழ விரும்பாமல் விவாகரத்து போல சமுதாயத்தீர்ப்பு பெற்றுத் தாய்வீடு சென்று விடுகிறாள். இந்த மூத்த மகனுக்கு மறுமணம் செய்யப் பெண் தேடுகையில் முதல் பெண்ணைக் கொடுத்தவரே தன் இரண்டாவது மகளைத் தருவதாகக் கூற, திருமணம் முடிந்தது.
இந்த இரண்டாவது திருமணம் நடந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச் சினைகள் ஆரம்பமாயின. நாளெல்லாம் நெசவுத் தொழில், வேளைக்கு உணவு, வேளைக்கு உறக்கம் என்று அமைதி யான நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருந்த குடும்பத்தில் சூறாவளி வீசத் தொடங்கியது.
துடிக்கும் கணவன்; தடுக்கும் ஏவல் திருமணமான மூத்த மகன் தன் மனைவியை ஆசையாகத் தொட முடியவில்லை அந்த நேரத்தில் தன்னை யாரோ அடிப்பதாகச் சத்தமிடுவாள். இரவு நேரம் வந்தால் ஏதோ ஒரு ஏவல் அவளை ஆட்டிப் படைக்கிறது. மருமகள் சாப்பிடும்போது சாப்பாட்டுத் தட்டைக் கணவனோ, மாமனாரோ அழுத்திப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தட்டு நகர்ந்து போய்விடுகிறதாம். வீட்டில் துணிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய நெசவுத் தொழிலில் ஒரு இழை அறுந்தாலே தொழில் தடைப்படும்; ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான இழைகள் அறுக்கப்பட்டி ருக்கும்; அதைச் சரிசெய்து மீண்டும் தொழில் தொடங்க ஒரு வாரம் ஆகும்; மீண்டும் அறுக்கப்பட்டிருக்கும்.
யாரோ ஏவல் செய்து விட்டார்கள். அதனால்தான் இப்படி நடக்கிறது; கோயிலுக்குச் சேவை செய்து பார்த்தோம். பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சூனியம் எடுத்துப் பார்த்தோம். என்ன செய்தும் இன்னும் நின்றபாடில்லை என்று அவர்கள் வருத் தப்பட்டுக் கூறினார்கள். உன்னிப்பாகக் கேட்டு விசாரணையை முடித்துக் கொண்டோம்.
சிக்கிய இராட்டை; சிதறிய கட்டை
நாங்கள் இருந்த நேரத்தில் ஏதேனும் நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தோம். மருமகள் நூல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவர் லேசாக இராட்டையைத் தட்டிவிட அதில் நூல் சிக்கிக் கொண்டது. யாருடைய கை பட்டாலும் நூல் சிக்கிக் கொள்வது இயல்பே. ஆனால், மிரண்டு போயுள்ள அந்தக் குடும்பம் இதையே மிகைப்படுத்தியது. இப்படித்தாங்க, ஏதோ ஒண்ணு நடக்குது என்றார்.
சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு அன்று நாங்கள திரும்பி விட்டோம். அடுத்த நாள் சென்ற போது புழக் கடையில் இருந்த கட்டைத்துண்டுகள், கற்கள் போன்றவை வீட்டுக்குள் வந்துவிழுந்து கிடந்தன. அவற்றைக் காண்பித்து எங்க மருமகதான் இங்க உட்கார்ந்துக்கிட்டிருந்துச்சு, அவ கண்ணெதிரிலேயே இதெல்லாம் வந்து விழுந்தது என்றார் மாமியார்.
அவற்றைச் சோதித்து அவற்றி லிருந்து கைரேகை எடுப்பதாகக் காட்டிக்கொண்டோம். அன்றைய விசாரணையில் இன்னொரு செய்தியும் கிடைத்தது. இந்தக்குடும்பத்தில் இவ்வாறு நடப்பதெல்லாம் இந்த மருமகள் இருக்கும்போது மட்டுமே; அவர் தாய்வீடு சென்றுவிட்டால் இங்கே நடப்பதில்லை என்பதுதான் அது. சரி, மருமகள் தாய்வீடு சென்றால் அங்கே நடக்கிறதா? என்று கேட்டேன்.
மருமகளைக் காதலிக்கும் ஏவல்
மருமகள் அங்கே தனியாகப் போகும் போது நடப்பதில்லை, இவளைப்பார்க்க என் மகன் சென்றால் அப்போது இப்படியெல்லாம் அங்கும் நடக்கிறது என்றார்கள். இப்போது உண்மை உடைய ஆரம்பித்தது; இந்த ஏவலின் நாயகி மருமகளே! இந்தக் கணவனோடு வாழப் பிடிக்கவில்லை; அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இப்படி ஏதோ செய்யக்கூடிய மனநிலையில் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதை உடனே நாங்கள் வெளிப்படுத்தாமல் அக்குடும் பத்தாருடைய கைரேகைகளைப் பதிவு செய்து கொண்டு மாமனார், மருமகள் ஆகிய இருவரை மட்டும் என் அலுவலகத்திற்கு வரவழைத்தோம்.
உடைந்தது உண்மை
மாமனாரை ஒப்புக்கு விசாரித்து விட்டு, ஒரு பெண் மருத்துவரைத் துணைக்கு வைத்துக் கொண்டு மரு மகளுடன் கலந்தாய்வை ஆரம்பித்தேன். அவருடைய தனித்தன்மை, தாய்வீடு போன்றவற்றைக் கேட்டுவிட்டு உங்களுடைய கைரேகைகளைப் பரிசோதித்துவிட்டோம். அந்தப் பொருள்களில் இருப்பதெல்லாம் உன்னுடைய கைரேகை மட்டுமே; ஏவல் பெயரில் நடந்தவை அனைத்தும் உன்னால் நடந்துள்ளது. அந்தக்குடும் பத்தின் மீது உனக்கு அப்படி என்ன கோபம்? என்று கேட்டேன்.
முதலில் சிறிது நேரம் உறுதியாக மறுத்துவிட்டுப் பிறகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே இவங்க எங்க அக்காவை என்ன கொடுமைப்படுத்தினாங்க தெரியுமா? அதனாலதான் இவங்களை இப்படி பண்ணேன் என்றார். அனைத்தையும் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். இந்த உண்மைகளை வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்றார். இந்த உண்மைகளை நாமும் வெளிப்படையாக உடைக்கமாட்டோம் என்பது உண்மையே. இருப்பினும் வெகுளித்தனமான குடும்பத்தில் விவரமான மருமகள் வாய்த்திருப்பதை அறிய முடிந்தது. பேதமை தந்த வேதனை
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் விருப்பப்படி மணமுறிவு கொடுத் தனுப்பி விட்டு மூன்றாவதாக யாரையோ திருமணம் செய்துகொண்டு இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறார் அந்த இளைஞர். இதிலே நாம் கவனிக்க வேண்டிய செய்தி, இத்தனையும் நடந்து, இந்த ஓராண்டுக்காலம் அந்தக் குடும்பத்தாரால் ஏவல், சூனியம் என்று நினைக்க முடிந்ததே தவிர, ஏதோ மனித சக்தியால்தான் இவையாவும் நடக் கின்றன என்று யோசிக்க முடியவில்லை.
முகத்தில் சலனமின்றி, அவ்வளவு திறமையாக இத்தனையும் செய்துவிட்டு, அப்பாவிபோல் நடித்து அவர்களோடு வாழ்ந்து வந்த அப்பெண்ணின் மன வலிமையை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தாமே நடக்காது; மனிதர்களால் மட்டுமே நடக்கும் என்ற அறிவுப் பார்வை அக்குடும்பத்திற்கு இல்லாமற் போனதால் அந்த ஓராண்டில் இலட்சக்கணக்கான ரூபாயை இழந்து கடனில் சிக்கி அவதிப்பட்டனர். பசி பட்டினியோடு அவர்கள் பட்ட மன உளைச்சல் எவ்வளவு?
மந்திரவாதிகள் வந்து சூனியம் எடுப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பறித்துச் சென்றனர். சூனியம் என்றால் ஒன்றுமில்லை என்று பொருள். அந்த ஒன்றுமில்லை என்பதைத்தான் சூனியம் எடுத்தேன் என்று மந்திரவாதி சொல்லிவிட்டுப் போகிறான். ஏமாளி கள் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.
இந்த ஏவல் என் மருமகளைத்தான் பாடாய்ப்படுத்துகிறது என்று அப்பாவித்தனமாகக் கூறிக் கொண் டிருந்த மாமனாரையும், மாமியாரையும், தன்னை தொடமுடியாமல் அச்சத் தோடு தவித்துக் கொண்டிருந்த கண வனையும் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி நம்ப வைத்துக் கொண்டிருந்த ஏவல் நாயகியான அந்த மருமகளும், இப் போது வேறு யாரையோ மணந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பில்லாதபோது இப்படி ஒரு நாடகம் அரங்கேறியது. இதற்காக அந்த குடும்பம் கொடுத்தவிலை மிக அதிகம். பல்வேறு இழப்புக்கு ஆளான அந்தக்குடும்பத்தைப்போல இன்னும் பல பேர் இந்த ஏவல், சூனியம் என்பதை நம்பிக்கொண்டு தான்இருக்கின்றனர்.
மனிதம் அழிந்த பூமி
இப்படிச் சூனியம் வைத்தோ, ஏவல் செய்தோ ஒருவரை அழித்துவிட முடியுமென்றால் தீவிரவாதிகள் ஏன் வெடிகுண்டுகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்? இன்றுள்ள அரசியல் தலைவர்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் உண்டோ, அந்த அளவிற்கு எதிரிகளும் உண்டு. சூனியம் வைக்கப்படுவது உண்மை யென்றால் ஓர் அரசியல் தலைவர்கூட உயிரோடு இருக்க முடியாது. உலகில் மனித இனம் பூண்டோடு அழிந்து போய் இருக்காதா?
சூனியம் என்பது ஒன்றுமில்லாதது; ஏவல் என்பது யாரோ ஒரு தனிநபர் செய்வது என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆய்ந்து பார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்குமல்லவா? கெட்டிக்காரன் புளுகுகூட எட்டு நாளைக்குத்தான் என்பார்கள். ஆனால், இந்தக்குடும்பம் ஓராண்டுக்கு மேலாக அறியாமை துரத்திய பாதையில் ஓடிக்களைத்துப் போனது.
உலகத்தின் மிகப்பெரிய சுமை மூடநம்பிக்கையே என்றார் மில்டன். அறிவைக் கெடுத்து வாழ்வைச்சிதைக்கும் அந்த மூடநம்பிக்கைகளை எதிர்கொள்ளும் தெளிவான பாதை காட்டுகிறார். ரட்சார்ட் கிப்லிவ் என்ற அறிஞர். என்னிடம் எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்? என்ற ஆறு நேர்மையான உதவியாளர்கள் உள்ளனர் என்கிறார். அந்த ஆறு கேள்விகளை முன் வைத்து வாழ்க்கையை நடத்துவோர்க்கு இத்தகைய இழப்புகள் வாழ்க்கையில் ஏற்படாது.
- பொதட்டூர் புவியரசன்-
மூளை to மூளை தகவல் பரிமாற்றத்தில் புதிய புரட்சி!
- செமல்விஸ்
ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்
1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 சைகை காட்ட வேண்டும்
3. நபர் 1 காட்டும் சைகைகளை நபர் 2 பார்க்க வேண்டும்
4. நபர் 2 பார்ப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடன் சேர்ந்து பேச்சும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறியபோது ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 பேச வேண்டும்
3. நபர் 1 பேசுவதை நபர் 2 கேட்க வேண்டும்
4. நபர் 2 கேட்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடனும், பேச்சுடனும் சேர்ந்து எழுத்தும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறிய போது ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 எழுத வேண்டும்
3. நபர் 1 பேசுவதை நபர் 2 வாசிக்க வேண்டும்
4. நபர் 2 வாசிப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எழுத்து என்பது பாறைகளில் எழுதுவது, களிமண்ணில் எழுதுவது, ஓலைகளில் எழுதுவது, செப்புப் பட்டயங்களில் எழுதுவது, காகிதங்களில் எழுதுவது, அச்சிடுவது என்று மாறி வந்த நேரத்தில், 1875ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வசித்த இரிச்சர்டு கால்டன் என்ற மருத்துவர் தனது ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் எழுதினார். குரங்குகள் மற்றும் முயல்களின் கபால எலும்பினை அகற்றி விட்டால், மூளையில் இருந்து மின்னலைகள் வருகின்றன என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு.
15 ஆண்டுகள் கழித்து 1890இல் போலந்தைச் சேர்ந்த அடால்ப் பெக் என்பவர், முயல்கள் மற்றும் நாய்களின் மூளையில் இருந்து பெறப்படும் மின்னலைகள் மாறுகின்றன என்றும், இந்த மாற்றத்திற்கு அந்த உயிரினங்களின் கண்களில் விழும் ஒளி ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்றும் கண்டுபிடித்தார். 1912ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த விளாடிமிர் விளாடிமிரொவிச் ப்ரவ்திச் நெமின்ஸ்கி என்பவர் ஒரு நாயின் மூளையின் மின்னலைகளைக் காகிதத்தில் பதிந்தார். 1924ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் பெர்கர் மனிதனின் மின்னலையைப் பதிந்தார். இதுவே மூளை மின்அலைப்பதிவி (Electroencephalography EEG) கடந்து வந்த வரலாறு ஆகும்.
அதன் பிறகு மூளை மின்அலைப்பதிவில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. மூளை மின்அலைப்பதிவி மூலம் வலிப்பு நோய் உட்பட பல நோய்களைக் கண்டறிய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்கள். இது போல் பல கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தன. ஒளிவரைவி (VEP - Visual Evoked Potential) என்ற முறையின் மூலம் பார்வைக்கான நரம்புகளைப் பரிசோதனை செய்ய முடிந்தது. கேளலை வரைவி (Audiogram) மூலம் காதில் இருந்து ஒலிகள் மூளைக்குச் செல்லும் பாதையைப் பரிசோதனை செய்ய முடிந்தது
இவை அனைத்தையும் மூளைக்-கணினி இடைமுகம் (Brain Computer Interface) என்று அழைத்து வந்தனர். அதாவது மூளையில் (அல்லது நரம்புகளில்) ஏற்படும் செயல்-பாடுகளை கணினி மூலம் கண்டுபிடிப்பது, அதாவது மூளை செயல்படும் போது ஏற்படும் மின்னலைகளை கருவியை வைத்துக் கண்டறிந்து, அதன் மூலம் செயல்பாட்டினை அறிவது. இதற்கு அடுத்த கட்டமாக கணினி- மூளை இடைமுகம் (Computer Brain Interface) வந்தது. முதலில் மூளையில் நடைபெறும் செயல்-பாடுகளைக் கண்டு கொண்டிருந்தோம் அல்லவா. இது அதற்கு அடுத்த நிலை. மூளைக்கு அல்லது நரம்புகளுக்கு மின்னலைகளை அளித்து அதன் மூலம் மூளையை உணர வைக்க முடியுமா என்ற சோதனை. இதில் பல விஷயங்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. அதே நேரம் செயற்கை உட்செவிச் சுருள் (Cochlear Implant) போல் சில விஷயங்களில் முன்னேறி உள்ளோம். வெளியில் இருந்து வரும் ஒலி அலைகளை உள்வாங்கி, அதை மின்னலைகளாக மாற்றி நேரடியாக மூளைக்கு இக்கருவி அனுப்புகிறது. காதில் நடுச்செவியில் பிரச்சினை இருந்தால் செவிப்புலன் உதவிச் சாதனம் (hearing aid) மூலம் அந்த நபர் கேட்கலாம். ஆனால் உட்செவி பிரச்சினையால் காது கேளாமை என்றால் சில ஆண்டுகளுக்கு முன்வரை அதற்கு சிகிச்சை இல்லாமல் இருந்தது. தற்சமயம், அதற்கு செயற்கை உட்செவிச் சுருள் மூலம் தீர்வு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது கணினி- மூளை இடைமுகத்திற்கு ஓர் உதாரணம் ஆகும்.
இவ்வாறு அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அடுத்த கட்டப் பரிசோதனை நடந்தது. இதே கணினி மூளை இடைமுகம் மூலம் _- ஒருவரது மின்னலைகள் மூலம் ஒருவரது மூளைக்கு நேரடியாக ஏதாவது செய்தி சொல்ல முடியுமா என்ற பரிசோதனை தான் அது. எசுபானியம் மற்றும் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் திருவனந்தபுரத்தில் ஆய்வகத்தில் இருக்கும் ஒருவரின் மூளையில் இருந்து வெளிவரும் மின் அலைகளை மூளை கணினி இடைமுகம் மூலம் உள்வாங்கி, அதைக் கணினி மூலம் பதப்படுத்தி, அந்தக் குறியீடுகளை தொலைபேசி மூலம் பிரெஞ்சு நாட்டின் ஆய்வகத்திற்கு அனுப்பி, அங்கு கணினி மூலம் அதைப் பதப்படுத்தி, அங்கு கணினி மூளை இடைமுகம் மூலம் மூன்று நபர்களின் மூளைக்குள் அனுப்பி, இவர் நினைத்ததை அவர்களால் அறிய முடிகிறதா என்று சோதனை செய்துள்ளார்கள். ஆரம்ப கட்டப் பரிசோதனையில் சில செய்திகளை இம்முறையில் கடத்த முடிகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர் .
இக்கண்டுபிடிப்பினை நாளையே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும் இதில் வருங்காலத்தில் பயன்படும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.
முக்கியமாக, விபத்து அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்-.