பனை எண்ணெய்[பாம் ஆயில்] பயங்கரம்!



காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? 
அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... 
அதாவது பனை மர எண்ணெய்!
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நியாயம் சொந்த நாட்டு இயற்கை வளங்களின் மேல் கைவைக்கக் கூடாது. மற்ற வளரும் நாடுகளின் வளங்களை இஷ்டத்துக்கு சூறையாடலாம். உலகம் முழுக்க இருக்கும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தாங்குவதற்கும், க்ரீம்களின் மென்மையான மேற்பரப்புக்காவும் பாம் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. 
உலகம் முழுக்க மக்களின் மேக்கப் மோகம் பல மடங்கு அதிகரிக்க, (அந்த மோகத்தைத் தூண்டுவதும் இதே பன்னாட்டு நிறுவனங்கள்தான்!) பாம் ஆயிலின் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்தது.
 'தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தான்... பனையை வெச்சவன் பார்த்துட்டு செத்தான்’ என்பது, இரண்டு மரங்களும் வளர்வதற்கு ஆகும் காலத்தைச் சொல்லும் அட்டகாசப் பழமொழி. 
வளர்வதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பனைமரம், கொடுப்பது என்னவோ கொஞ்சூண்டு எண்ணெய்தான். 'அது எப்போ ஆயில் தந்து... நாம எப்போ காசு பார்த்து’ என்கிற அவசரம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு. என்ன செய்வது என யோசித்தவர்கள் எடுத்த குரூரமான முடிவுதான், காடுகளை அழித்து பனைமரங்களை நடுவது.
 எங்கே காட்டை அழிப்பது? 
இந்தியா, ஜெர்மன் போன்ற இரண்டாம் நிலை நாடுகள் என்றால், எதிர்ப்பு இருக்கும். வறுமையும் கல்வியறிவும் குறைவான மூன்றாம் நிலை நாடுகள் என்றால் எந்த எதிர்ப்பும் இருக்காதே!
இந்தோனேஷியா, மலேசியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற குட்டி நாடுகளை இந்தப் பன்னாட்டு கம்பெனிகள் குறிவைத்தன. 
சிறு வயதில் புவியியல் வகுப்பில் டிராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட்(Tropical rain forest) எனப் படித்திருப்போமே, இந்தத் தீவுகளில் அப்படிப்பட்ட காடுகள் நிறையவே உண்டு. இந்தக் காடுகளில் மழையும் அதிகமாக இருக்கும்; அதே அளவு வெயிலும் இருக்கும். வெப்பமும் குளிரும் கலந்திருப்பதால் நிறையப் புற்கள் முளைக்கும். எனவே மான்கள் இருக்கும். அதை வேட்டையாட புலிகள் இருக்கும். ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு ஸ்பெஷல் உயிரினம் இருப்பதைப்போல, இங்கே உராங்உட்டான் குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் காட்டை அழித்தால் வளர்வதற்கு குறைவான காலம் எடுத்துக்கொள்ளும், 
அதே சமயம் அதிக எண்ணெய் தரும் பனைமரங்களை நடலாம். அப்புறம் என்ன?
 காசு, பணம், துட்டு, மணி, மணி! 
அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாக டீல் போட்டு, 'உங்கள் நாட்டில் ஒரு பகுதி காட்டை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அதில் விதவிதமான மரங்களுக்குப் பதில் பனைமரங்கள் நடப்போகிறோம்’ என ஒப்புதல் வாங்கிவிட்டார்கள். 
எப்போ மரத்தை வெட்டி, எப்போ புது பனைமரங்கள் நட்டு, எப்போ காசு பார்ப்பது? அதனால் காடுகளை அழிக்க, சிம்பிளாக அவற்றுக்குத் தீவைத்துவிட்டார்கள். எந்தப் பக்கமும் போக முடியாமல் புலிகள், சுமத்ரன் நீர்யானைகள், ஆசிய யானைகள் போன்றவை தீயில் கருகி அலறிச் செத்தன. பறவைகள் கூச்சலோடு இடம்பெயர்ந்தன. இதுவரை 400 சுமத்ரன் புலிகளைக் காணவில்லை. இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. 
ஒரு பகுதியை எரித்து, பனை நடவு முடிந்தவுடன் அடுத்த பகுதி.  இப்போது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கே கரும் புகையைக் கக்கியபடி, மரண ஓலத்துடன் காடு எரிந்துகொண்டிருக்கும்.
உலகில் ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட எட்டு கால்பந்து மைதானங்கள் அளவுக்கான காடுகள், தினமும் அழிக்கப்பட்டுவருகின்றன என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு கவலையோடு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எரிக்கப்படும் காடுகளால் உராங்உட்டான் குரங்குகளின் எண்ணிக்கை சரசரவென சரிபாதியாகக் குறைந்துவிட்டது. 'உராங்உட்டான்’ என்றால் காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97 சதவிகித செயல்பாடுகள் அப்படியே மனிதனைப்போலவே இருக்கும்.
 பாலூட்டுவதில் இருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழும். குரங்கு வகையிலேயே அதிக புத்திசாலி. International union for the conservation of Nature and natural resources  என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர் ஒவ்வொரு வருடமும் 'ரெட் புக்’ என்ற பட்டியலை வெளியிடுகின்றனர். 
அதில் '55 ஆயிரம் போர்னியோ உராங்உட்டான் உள்ளன. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000 குரங்குகள் அழிந்துவிடுகின்றன. சுமத்ரன் தீவு உராங்உட்டான் மொத்தமே 6,300-தான் இருக்கின்றன. 
அது வருடத்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்துவருகின்றன. இதே வேகத்தில் போனால், இன்னும் 10 ஆண்டுகளில் உரான்உட்டான் குரங்குகளே இருக்காது’ என்கிறது. காடுகள்தானே அழிகின்றன என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இப்படி வருடம் முழுவதும் எரிக்கப்படும் காடுகளால் 35 மில்லியன் டன் கார்பன் வெளியாகி, கடந்த 10 ஆண்டுகளில் குளோபல் வார்மிங் 20 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. 
இப்படி ஓர் அழிப்பு வேலை வெளியே தெரியவந்து அதிர்ச்சி அலை ஏற்படுத்த, பல தன்னார்வ நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராட ஆரம்பித்திருக்கின்றன.
அதுபோன்ற ஓர் அமைப்புதான் Roundtable  on Sustainable Palm Oil (RSPO). 'இன்றைய தினசரி வாழ்க்கையில் இருந்து பாம் ஆயில் பயன்பாடுகொண்ட பொருட்களை நீக்குவது என்பது ரொம்பவே கஷ்டம். 
மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் பாம் ஆயிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம், காடுகளை அழித்தே எடுக்கப்படுகிறது.
 இதில் மக்களைக் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. 'காடுகளை அழித்து பனைமரங்களை நடுவதற்குப் பதிலாக, இயல்பாக பனை மரங்கள் வளர்க்க முடிந்த இடங்களில் வளர்த்து அதைப் பயன்படுத்துங்கள்’ என, பன்னாட்டு நிறுவனங்களை வலியுறுத்துகிறோம்.
 இதில் மக்கள் தங்கள் பங்காக கடையில் வாங்கும் பொருட்களில் எங்கள் முத்திரையான Certified Sustainable Palm Oil(CSPO)  அல்லது green palm முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். அப்படி நாங்கள் முத்திரை கொடுத்திருக்கும் பொருட்கள், காடுகளை அழிக்காமல் பாம் ஆயில் எடுத்துப் பயன்படுத்தியது என அர்த்தம்.
 அப்படி எந்த முத்திரையும் இல்லையென்றால், அதன் தயாரிப்பாளரிடம் நீங்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. 
காடுகளை அழிக்காமல் நல்ல முறையில் உருவாக்கப்படும் பாம் ஆயிலினால் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியல், இணையதளத்திலும் கிடைக்கிறது. நமது பங்காக அதை வாங்க ஆரம்பித்தாலே மற்ற கம்பெனிகள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்’ என்கிறார்கள்.
அடுத்த முறை லிப்ஸ்டிக் பூசும்போது லேசாகச் சுவைத்துப் பாருங்கள். உராங்உட்டான் குரங்கின் ரத்தப் பிசுபிசுப்பை உணரலாம்!
                                                                                                                     ந.கீர்த்தனா
                                                                                                                      நன்றி :விகடன்.  


   




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?