வாழ்வை அனுபவிக்க



முற்றும் துறந்து சாமியாராகுங்கள்!


சாமியாராக வாழ்வது இன்றைக்கு இந்தியாவில் அம்பானியாவதற்கு குறுக்கு வழி.நிதியானந்தா 20000 கோடிகள்,பாபா ராம்தேவ் 3000 கோடிகளுக்கு மேல்,இறந்து போன சாய்பாபா 40000 கோடிகள்,சிறைத்தண்டனை பெற்று செத்துப்போன பரமானந்தா 200 கோடிகள்.இப்போது புதிதாக ராம்பால்.போற போக்கில் அரசியல்வாதிகளாகி அடிப்பதை விட சாமியாராகி சம்பாதிப்பதும்,அனுபவிப்பதும்தான் இந்தியாவில் கொள்ளை லாபம் தரும் வியாபாரம்.அரசியல் வாதியாகி ஜெயலலிதா மாதிரி தொண்டர்கள் கூட்டம் இருந்தாலும் சிறைக்கு செல்வதை தொண்டர்கள் யாரும் உயிரை விட்டு தடுக்க வில்லை.ஆனால் சாமியார்களுக்கோ உயிரை துச்சமாக மதித்து அடி முட்டாள்தனமாக காவல் துறை,துணை ராணுவம் வரை போராட ஒரு அடிமை கூட்டமே உருவாகி விடுகிறது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ராம்பால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
12 ஏக்கர் பரப்பிலான அவரது ஆசிரமத்திற்குள் உள்ளே நுழைந்து பார்த்த போலீஸார், சாமியார் வாழ்ந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு சாட்சிகளாக நிற்கும் மசாஜ் படுக்கைகளையும், நீச்சல் குளம் போன்றவற்றையும் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
யார் இந்த ராம்பால்...? அவர் சாமியார் ஆனது எப்படி...ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது என்பது குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போட் இங்கே...
ரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார் ராம்பால்.
முழு பெயர் ராம்பால் தாஸ். பள்ளிக் கல்விக்குப் பிறகு பொறியியல் டிப்ளமோ படிப்பை  முடித்துவிட்டு அரசின் பொது சுகாதாரத் துறையில் ஜூனியர் எஞ்சினியராக பணியில் சேர்ந்தார்.
இவரின் 48 ஆவது வயதில்,  பணியில் கவனக்குறைவாக இருக்கிறார் என்று துறை சார்ந்த நடவடிக்கை மூலம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ராம்பால் தாஸ் வாழ்க்கையில் ஆன்மிகக் காற்று அடிக்கத் தொடங்கியுள்ளது.18 ஆண்டு காலம் ஆன்மீக வாழ்க்கையின் அம்சங்களை, பயின்று, ஆன்மீகக்  கலையைத் தன் வசப்படுத்தினார் அரசு ஊழியராக இருந்து ஆன்மீக வாதியான சுவாமி  ராம்பால்.

1999 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக சொற்பொழிவு  ஆற்றி பக்தர்களைக் கவர்ந்து வந்தார். 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் கபீர் என்பவரின் மறு அவதாரம் தாம்தான் என்று கூறி, லட்சக் கணக்கான மக்களை தன்பால் ஈர்த்தவர் ராம்பால். கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் 40 முறை சம்மன் அனுப்பியும், ஏதோ ஒரு காரணம் கூறி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து வந்தார் சாமியார் ராம்பால். வெறுத்துப்போன நீதிமன்றம் அவரைக் கைது செய்திட  பிடிவாரண்ட் பிறப்பித்தது.  
இதனையடுத்து ஹிசாரில் உள்ள ராம்பாலின்  12 ஏக்கர் பரப்பிலான  பிரமாண்ட ஆஸ்ரமத்தைச் சுற்றி வளைத்தது காவல்துறை. ஆனால் கடுமையான எதிர்ப்பை ராம்பால் சீடர்கள் தரப்பில் இருந்து காவல்துறையினர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்து எளிதில் சாமியார் ராம்பாலைக் கைது செய்ய முடியாமல் தவித்தனர்.சீடர்களின் எதிர்ப்பு போலீசாரை கொஞ்சம் மிரளவே வைத்தது எனலாம்.

ஆனாலும் கைது செய்திட தீவிரமான போலீசார் மீது தாக்குதலைத் தொடுத்தனர் ஆஸ்ரம சீடர்கள்.தொடர்ந்து  ஆசிரமத்தில் போலீசாருக்கும், அங்குள்ள சாமியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீசார் மீது சராமரியாக  பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் நிலை குலைந்த போலீசார், கலவரத்தை கட்டுக்குள் வர  கண்ணீர் புகை குண்டு வீசி  கூட்டத்தினரைக்  கலைத்தனர்.
இந்தக் கலவரத்தினால்  ஆசிரமம் அருகே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. 3 நாட்களுக்கும் மேல் இந்த மோதல் நீடித்தது. போலீசாரின் நடவடிக்கையில்   6 பேர் உயிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,நேற்று முன்தினம் விடாது முயன்று, ராம்பாலைக்   கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் வரும் 28 ஆம் தேதிவரை காவலில் வைத்து உத்தரவிட்டது. இதனால் ஹிசார் முழுக்க பலத்த   பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு கோட்டை போல் திகழ்ந்த ராம்பாலின் ஆஸ்ரமத்திற்குள் உள்ளே புகுந்து வந்த போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே இருக்கும் ஆடம்பர வசதிகள் குறித்து தெரிவித்துள்ள தகவல்கள், 'அம்மாடியோவ்..!' ரகமாக வாய் பிளக்க வைக்கின்றன.
12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பிரமாண்ட ஆஸ்ரமம். உயரமான, பலமான கதவுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டு யாரும் எளிதில் நுழையாத வண்ணம் கோட்டை போல மதில்களும் கொண்டது.ஒரு ஆன்மிகவாதிக்கு இருக்கவேண்டிய அம்சங்களைக் காட்டிலும்  சொகுசு வாழ்க்கையில் ஊறி திளைக்கும் மல்டி மில்லினர் போல வாழ்ந்து வந்திருக்கிறார் ராம்பால்.

சாமியாருக்கென சொகுசுக் கார்கள் உள்ளன. அதே போல அவரின் குடியிருப்பு  ,25 அடி நீளத்தில் நவீன நீச்சல்குளம், வெளிநாட்டு ஸ்டைல் குளியல் அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட்ட மாடர்ன் அறைகள், பிளாட் ஸ்க்ரீன் டிவிகள் என 7 ஸ்டார் ஹோட்டலைபோல இருக்கிறது. அத்தோடு மசாஜ் மேடைகள், டிரட் மில், ஜிம்மில் உள்ள   நவீன உடற்பயிற்சி சாதனங்கள் என சொகுசு வாழ்க்கையில் ஜொலித்து உள்ளார் சாமியார்.  


ஆஸ்ரமத்தின் உள்ளே ஒரு சிறப்பு கிளினிக்,எக்ஸ்ரே வசதிகளுடன் உள்ளது. இங்கிருந்து ஏராளமான மருந்து பொருட்கள் மற்றும் மூட்டை மூட்டையாய் உணவுப் பொருட்கள் ஆகியவை தற்போது போலீசார் கைபற்றி உள்ளனர்.
அதைவிட அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் என்னவெனில், ஒரு மாநிலத்திற்கு எதிராக மினி யுத்தத்தையே நடத்திடக் கூடிய அளவிற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதக்குவியல்கள்தான்.
சுமார் 350 க்கும் அதிகமான கைதுப்பாக்கிகள், ரைஃபிள்கள், கன்கள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் என அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்த்து திகைத்துப்போய் உள்ளனர் போலீஸார். ஒருவருக்கு துப்பாக்கி லைசென்ஸ் இருந்தால் கூட இந்த அளவுக்கு ஆயுதங்களையோ அல்லது தோட்டாக்களையோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை.
இதுதவிர ஹோலி பண்டிகையின்போது வண்ணக்கலவை தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய 'வாட்டர் கன்' களும் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் பெட்ரோல் மற்றும் ஆசிட்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாகவும், இதேப்போன்று பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் ஆசிட் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளனர் போலீஸார்.
மேலும் 50,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து ராம்பாலின் ஆன்மீக [?]உரையைக் கேட்கும்   வகையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கூடம் உள்ளிட்ட அனைத்தும் தற்போது மூடி சீல் வைக்கப் பட்டுள்ளன...கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பக்த கேடிகளால் பரபரப்பும் பற்றமும் நிறைந்து இருந்த ஆஸ்ரமம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் அமைதியாய் இருக்கிறது.
 சிறந்த தொழிலதிபர்கள் 

[கடவுளை விற்பவர்கள்.]

                                                                                                                                                                        -தேவராஜன்.
             
சாமியார் தொழில் [?]செய்யத்தெரியாத இவர்களைப் போன்றவர்களும் உண்டு.
                                                                                                                                                                    விகடன்தளத்தில் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?