வியாழன், 13 நவம்பர், 2014

லாலிபாப்.....!
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்ட் 5.0 பதிப்பை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 
எதிர்பார்த்ததுபோலவே இந்த பதிப்பிற்கு லாலிபாப் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. 
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட இப்புதிய பதிப்பு முற்றிலும் புதிய அனுபவத்தை தரக்கூடியதாக வெளிவந்திருக்கிறது. 
கூகுள் நிறுவனத்தின் முகப்பு மற்றும் பக்க வடிவமைப்பு புகழ் பெற்றது. பளிச்சிடும் வண்ணம் மற்றும் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்த எழுத்துத் தோற்றமும் இப்புதிய பதிப்பை மெருகேற்றியுள்ளது. எழுத்துத் தோற்றத்தை சிறப்பாகக் காட்ட அளவாகவும், அழகானதாகவும் தோற்றம் காட்டும் விதத்தில் நிழல் பின்புலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பதிப்பின் கூடுதல் சிறப்பம்சம் ஸ்மார்ட் போன் மட்டுமல்லாது, டேப்ளட், ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் டிவி, வாகனங்களை இயக்கவும், வழிகாட்ட உதவும் கருவி என அனைத்திற்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைந்த ஒரே இயங்குதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகள், அறிவிப்புகளைக் காட்டும் நோட்டிபிகேசன் பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நாம் போனைப் பயன்படுத்தும்போது நமக்கு ஏதாவது கால் வந்தால் இடையூறாகத் தோன்றாத அளவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் யாரிடம் இருந்து வருகின்றது என்பதைப் பொறுத்து அனைத்தையும் வடிகட்டி பிரித்துக் காட்டும் வசதியும் உள்ளது.டேப்லட்களுக்கான ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் பதிப்பில் அறிமுகமான பலரும் பயன்படுத்தும் வகையில் அமைந்த மல்ட்டி யூசர் இன்டர்பேஸ் இப்பதிப்பின் மூலம் மொபைல் போனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய போனை நம்மை தவிர வேறு சிலரும் பயன்படுத்தலாம்.
அதற்கென கெஸ்ட் யூசர் என்ற வசதி இந்த புதிய பதிப்பில் உள்ளது. 
இவ்வசதி இருப்பதால் பயப்படாமல் நமது போனை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்கலாம். 
ஆனால், அவர்கள் கெஸ்ட் யூசர் மூலம் நமது போனை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் உள்ள தகவல்களை அவர்கள் பார்க்க முடியாது. 
இந்த வசதியைப் பயன்படுத்தி குழந்தைகள் பயன்படுத்துவதற்கான திரை ஒன்றையும், சொந்தத் தகவல்கள் மற்றும் மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு திரையையும், அலுவலகப் பயன்பாட்டிற்கென்று தனியாக வெவ்வேறுவிதமான பயனர் கணக்குகளை கணினிகளில் அமைப்பது போலவே இதிலும் அமைக்கலாம். 
ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளில் பணிபுரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக டெக்ஸ் எடிட்டிங் செய்யும்போது ஏதேனும் புகைப்படம் அல்லது மின்னஞ்சல் கோப்புகளைப் பார்க்கவேண்டி இருந்தால் அவற்றைப் பார்த்துவிட்டு வந்து மீண்டும் வேலையைத் தொடரலாம். 
இவ்வசதி ஓவர்வியூ என்று அழைக்கப்படுகிறது. முந்தைய பதிப்புகளிலிருந்து ‘ரீசண்ட் ஆப்ஸ்’ வசதி இப்பதிப்பில் நீக்கப்பட்டு மேற்கூறிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.ஒய்ஃபீ வசதியைப் பயன்படுத்தி இணையத்தை தொடர்பு கொள்ளும்போது, ஏதேனும் காரணத்தால் ஒய்ஃபீ சிக்னல் கிடைக்கவில்லையெனில் உடனடியாக மொபைல் இண்டெர்நெட்டிற்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளது.
புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் குரல் மூலம் ஃபோனை கட்டுப்படுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள முக்கியமான பிரச்சனை விரைவாக பேட்டரி காலியாவதுதான். இப்பதிப்பில் கூடுதலாக 90 நிமிடங்கள் பேட்டரி செயல்படும் வகையில் மின் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக என்க்ரிப்ஷன் வசதி இருக்கிறது. புதிய கருவிகளை போனில் இணைக்கும்போது தானாகவே என்கிரிப்ட் செய்யும் வசதி உள்ளது.ஸ்மார்ட் லாக் வசதியை பயன்படுத்தி வேறு கருவிகள், கார் ஆகியவற்றை இணைக்கவும், திறக்கவும் பயன்படுத்தலாம்.
ஒய்ஃபீ, புளூடூத் மற்றும் லொக்கேஷன் வசதிகளை எளிதாக இயக்கவும், அணைத்து வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப திரையின் ஒளியை கூட்டுவது குறைப்பது ஆகிய பணிகளை நாமே செய்து கொள்ளும்படியாக செட்டிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் புதிய பதிப்பில் தமிழ் உள்ளிட்ட 68 மொழிகள் உள்ளன.
லாலிபாப் பதிப்புடன் ஸ்மார்ட்போன்கள்லாலிபாப் பதிப்புடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போதை நிலையில் கூகுளின் நெக்சஸ் 6 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்சஸ் 9 டேப்ளட்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோரோலாவின் மோட்டோ டிராய்டு, மேக்ஸ், டர்போ, மோட்டோ எக்ஸ், ஜி, இ ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது இவை ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் பதிப்பில் இயங்கி வருகின்றன.
ஒரு சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன் திட்டத்தின் கீழ் விற்பனையாகும் ஸ்பைஸ் டிரீம் யுனோ, கார்பன் ஸ்பார்க்கிள் வி, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1 ஆகிய மாடல்கள் ஆண்ட்ராய்ட் அப்டேட்டை அடுத்த இரு ஆண்டுகளுக்கு பெறவிருக்கும் ஸ்மார்ட்போன்களாகும். மேற்கூறிய மூன்று ஃபோன்களும் கடைகளில் கிடைப்பதில்லை.
இவற்றை ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் ஆகிய இணைய வழி பொருள் விற்பனை நிறுவனங்களிடமிருந்தே வாங்க முடியும். 
மேற்கூறிய ஃபோன்களுடன் புதிதாக தற்போது சோலோ போன் நிறுவனமும் சோலே ஒன் என்ற ஃபோனை லாலிபாப் அப்டேட் வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது.

===============================================================================================================

தங்கம் :

இன்னும் விலை சரியுமா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இறக்கம் கண்டிருக்கிறது.
 இந்த விலை இறக்கத்தை அடுத்து பெரும்பாலான முதலீட்டாளர் கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த தங்கத்தை விற்றனர்.
 இதையடுத்து, தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
2011 செப்டம்பர் 5-ல் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1,900.23 டாலராக இருந்தது. அதிலிருந்து இப்போது 40 சதவிகிதத்துக்குமேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் சுமார் 13% குறைந்துள் ளது. 
கடந்த  வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 1,154 டாலராக இருக்கிறது.
தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு மூன்று முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண ஆரம்பித்திருப்பது, டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது, 
சர்வதேச பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித் திருப்பது ஆகியவை அந்தக் காரணங்களாக இருக்கின்றன.
நாம் எத்தகைய முதலீட்டில், எந்த நேரத்தில் முதலீடு செய்கிறோம், எப்போது வெளியே வருகிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, ஏற்ற இறக்கம் கலந்த சந்தையில் இறங்கும்போது வாங்குவதையும், விலை ஏற்றம் காணும்போது லாபத்தை வெளியே எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையைப் (விலை இறக்கத்தை) பயன்படுத்தி, அடுத்தச் சுழற்சிக்கு முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கத் தயாராக வேண்டும்.
சர்வதேச அளவில், பெரிய முதலீட்டாளர்கள் (HNIs) சுழற்சிமுறையில் முதலீடுகளைச் செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.
முன்பு முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்கியவர்கள் இப்போது லாபத்தில் இருப்பதால், அதை விற்று வருகின்றனர். தங்கத்தின் விலை குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.
 விலை இன்னும் சரியுமா?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1,100 டாலர் வரைக்கும் குறைய வாய்ப்புண்டு. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2,300 வரைக்கும் குறைய வாய்ப்புண்டு.
அதேநேரத்தில், தங்கத்தின் விலை இன்னும் பெரிய அளவில் குறையாது. விலை இன்னும் உயருவதற்கே வாய்ப்புண்டு என்றும் சொல் கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
1) உற்பத்திச் செலவு!
தங்கத்தின் உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 1,100 அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், மேலும் சரிவு என்பது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால், அந்த நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து விலைச்சரிவை தடுக்க முயலும்.
2) குறைந்த உற்பத்தி!
கடந்த 10 வருடங்களில் தங்கம் உற்பத்தி 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது.
3) அதிகரிக்கும் முதலீடு!
ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும், தங்கத்தின் மீதான முதலீடு களை மேலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. 
வருகிற 20-ம் தேதி சுவிஸ் மத்திய வங்கி அதன் தங்க கையிருப்பை, தற்போதைய 7 சதவிகிதத்தி லிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த  முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்த வங்கி ஆண்டுக்கு 300 டன்கள் என்ற அளவுக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாகத் தங்கம்  வாங்கும்  என்று சொல்லப் படுகிறது.
இப்படி வாங்கக்கூடிய தங்கம் அனைத்துமே இடிஎஃப் மூலம் வாங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
உலகின் மொத்த உற்பத்தியில் பாதிக்கு மேலாக சுவிஸ் மத்திய வங்கி வாங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதானால் தங்கம் கிராம் 2300 வரை சென்று மீண்டும் உயரும் வாய்ப்புள்ளது.
=========================================================================================================
கசியும் உண்மைகளில்

 பல்லிளிக்கும் மோடிசெய்திகளைத் தனித்தனியாகப் பார்த்தால் ஒரு விதமாகத் தெரியும் சேர்த்துப்பார்த்தால் முழுமையான பார்வை கிட்டும்.
 சாதாரண வாசகன் இவ்வாறு நினைவில் வைத்து செயல்படுவது சிரமம். ஊடகங்கள் தான் உண்மையை உணர்த்த வேண்டும். 
ஆனால் தற்போது ஊடகங்களில் பெரும்பான்மை ஊடகஅறத்தைக் கொன்றுவிட்டு விலைபோய்விட்டன . 
மோடி பஜனையில் மும்முரமாய் உள்ளன. 
ஆயினும் கசியும் உண்மைகள் சூழும் ஆபத்தை படம் பிடிக்கிறது.
மோடி தன் படையை விரிவாக்கி வலிமையாக்கியுள்ளதாக ஒரு தமிழ் ஏடு உணர்ச்சி கொப்பளிக்க தலைப்பிட்டது.
யாரை எதிர்த்து இந்தப் படை?மோடி அமைச்சரவையில் மூன்றில் ஒருபங்கினர் கிரிமினல் வழக்குக்கு உள்ளானவர்கள் என்பது ஒரு செய்தி; கொலை, பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல், வங்கிமோசடி, மதவெறி என பல குற்றச்சாட்டுகள் அடங்கும்.
மோடி அமைச்சரவையில் 60 விழுக்காடு பேர்கள் பிராமணர் உள்ளிட்ட மேல்ஜாதியினரே என்பது இன்னொரு செய்தி.
சிறுபான்மையோர் ,தலித்துகள் ஒப்புக்கே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது உப செய்தி . 
அதிலும் முக்கிய துறைகள் ஆர் எஸ் எஸ் ஆட்களான மேல்ஜாதிகளிடமே.
பெண்கள் ஆர் எஸ் எஸ் சில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பதால் ஓரிருவர் விதிவிலக்கு. 
தென்மாநிலங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடையாது . நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறாவிடிலும் மோடி விரும்பினால் அமைச்சராம் .
யார் அமைச்சராக்கப் பட்டாலும் அதிகாரம் மோடியிடம் மட்டும்தானாம்.
 தமிழ் இந்து நாளேடு தலையங்கத்தில் இதனை சாடியுள்ளது. 
இங்கே யார் அமைச்சரானாலும் ஜெயலலிதா மட்டுமே எல்லாம் என்றிருப்பது போல; சில குஜராத்தைச் சார்ந்த ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் எல்லா துறையையும் மோடியே கவனிக்கிறாராம்.
 அதாவது ஆர்எஸ்எஸ் சார்பு அதிகாரிகளே மெய்யான அதிகாரமையமாக இருக்கிறார்களாம்.

 எது எப்படியோ இந்திராகாந்தி அதிகார போதையில் அவசரகாலத்தை நோக்கி நகர்ந்த போது நிலவிய சூழலோடு இன்றைய நிலையை அவ்வேடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.

மோடி ஒரு கிராமத்தைத் தத்து எடுத்து இருக்கிறாராம்; அந்தகிராமத்தில் மருந்துக்குக் கூட ஒரு முஸ்லிம் கிடையாதாம்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களெல்லாம் இந்துமுஸ்லிம்கள் என்றும், கிறிஸ்தவர்களெல்லாம் இந்து கிறிஸ்துவர் என்றும் சொன்னவர் இராணுவ அமைச்சராம்.

இப்படி ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால்
மோடி செல்லும் திசை ஆபத்தான பாசிசப் பாதை என்பது தெளிவாகும் .

தேசத்தைத் தூய்மைப் படுத்துகிறார் மோடி என்கிற பிம்பத்தைக்
கட் டமைத்துக் கொண்டே தேசத்தை வரலாற்றை
குப்பைத் தொட்டியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
                                                                                                                                                                                         - சு.பொ.அ.
==============================================================================================================================================================================